Published:Updated:

`கனிமொழியின் நேரடி உத்தரவு முதல்... உதயநிதி காலில் விழுந்த மேயர் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

உற்சாக கலெக்டர்... வருத்தத்தில் அமைச்சர்கள்! | காலில் விழுந்த மேயர்... | புலம்பும் தலைநகரத் தலைவி! | செத்துச் செத்து விளையாடும் ஊராட்சித் தலைவி! | திண்ணை காலியாவது எப்போது? | போட்டியைத் தூண்டிவிடும் அமைச்சர்!

`கனிமொழியின் நேரடி உத்தரவு முதல்... உதயநிதி காலில் விழுந்த மேயர் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்

உற்சாக கலெக்டர்... வருத்தத்தில் அமைச்சர்கள்! | காலில் விழுந்த மேயர்... | புலம்பும் தலைநகரத் தலைவி! | செத்துச் செத்து விளையாடும் ஊராட்சித் தலைவி! | திண்ணை காலியாவது எப்போது? | போட்டியைத் தூண்டிவிடும் அமைச்சர்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
எல்லை தாண்டும் அமைச்சரும்...
எதிர்காலத் திட்டமும்!

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறாராம். குறிஞ்சிப்பாடி தொகுதிக்கே நிறைய தேவைகள் இருக்கும்போது, அந்த சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை எல்லை தாண்டிச் செலவளிப்பதா என்று வாக்காளர்களுக்கு வருத்தம்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால்தான், ஆட்சியரின் அனுமதிபெற்று அந்த நிதியைச் செலவளித்ததாகச் சொல்கிறது அமைச்சர் தரப்பு. ஆனால், “2024 மக்களவைத் தேர்தலில் வாரிசைக் களமிறக்கவே இப்படியெல்லாம் செய்கிறார் அமைச்சர்” என்கிறார்கள் அவரின் நகர்வை உற்றுநோக்குபவர்கள்!

கனிமொழியின் நேரடி உத்தரவு...
உற்சாக கலெக்டர்... வருத்தத்தில் அமைச்சர்கள்!

முந்தைய தி.மு.க ஆட்சியில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதைப் போல தூத்துக்குடியில் வரும் 7 முதல் 10-ம் தேதி வரை ‘நெய்தல் திருவிழா’ நடத்தப்படவிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்துடன் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து இந்த விழாவை நடத்தப் போகிறார்கள். “இந்த நிகழ்ச்சியைப் பற்றி எல்லா மாவட்டத்துலயும் சிறப்பாப் பேசணும். அந்த அளவுக்கு எல்லா ஏற்பாடுகளும் சிறப்பா இருக்கணும்” என்று கலெக்டரை நேரில் அழைத்து உத்தரவிட்டிருக்கிறார் கனிமொழி எம்.பி.

கனிமொழி
கனிமொழி

உற்சாகமான கலெக்டர் அதற்கான வேலையில் தீவிரம் காட்டத்தொடங்கிவிட்டாராம். இதுபற்றிய சந்தேகங்கள் எதுவானாலும் நேரடியாக கனிமொழியிடமே பேசி கலெக்டர் முடிவெடுப்பதால், ஒரு வார்த்தைகூட நம்மிடம் பேச மாட்டேங்கிறாரே? என்று உள்ளூர் அமைச்சர்கள் இருவரும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

காலில் விழுந்த மேயர்...
பின்னணியில் பல கணக்குகள்!

தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், மேயர் அங்கியுடன் உதயநிதியின் காலில் விழுந்தது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேயருக்கும், துணை மேயர் அஞ்சுகம் பூபதிக்கும் இடையே ஒப்பந்தப் பணிகளை ‘ஒதுக்குவது’ தொடர்பாக பிணக்கு இருக்கிறது. அதிலும், துணை மேயர் தரப்பு முதல்வருக்கு நெருக்கமானவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு நெருக்கடி கொடுக்கிறதாம்.

தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்
தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்

எனக்கும் பெரிய குடும்பத்து ஆசி இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவே, உதயநிதி காலில் தடாலடியாக விழுந்துவிட்டாராம் மேயர். இனி மேயரின் கை ஓங்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
போட்டோவுக்கும் தடை...
புலம்பும் தலைநகரத் தலைவி!

தலைநகரின் ‘தலைவி’ பொறுப்புக்கு வந்த புதிதில், ‘சின்னப் பாப்பா’ என்று கேலி செய்யப்பட்டவருக்கு இப்போது ஓரளவுக்கு நிர்வாகம் கைவந்துவிட்டதாம். அந்த தைரியத்தில் மாநகர் பணிகளை தனியாகவே ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார். ‘அவர் இப்படி ஆய்வுக்குச் செல்வதெல்லாம் சரி. ஆனால் தகவலை மீடியாவுக்கு தெரியப்படுத்தகூடாது. பத்திரிகைகளில் போட்டோ வரக்கூடாது’ என்று அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தரப்பிலிருந்து சிலர் பி.ஆர்.ஓ செக்‌ஷனில் கறாராகச் சொல்லியிருக்கிறார்களாம். ‘எப்பவும் அவங்க சொல் கேட்டு மட்டுமே நடக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. நானா ஏதாவது செய்தால் பிரச்னை வருமோன்னு பயமா இருக்கு’ என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்புகிறாராம் ‘தலைநகரத் தலைவி’!

டெண்டருக்கு வேட்டு...
செத்துச் செத்து விளையாடும் ஊராட்சித் தலைவி!

குளுகுளு மாவட்டத்தில் ‘உயரத்தின்’ பெயரைக்கொண்ட ஊராட்சியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைவராக பதவிவகிக்கிறார். இவர் கார் டிரைவரை பினாமியாக்கி, அவர் பெயரிலேயே டெண்டர்விட்டு லாபம் பார்த்தாராம். நூறு நாள் வேலைத் திட்டத்திலும் முறைகேடுகளைச் செய்திருக்கிறார் போலும். ஆதாரத்தைத் திரட்டிய ஊராட்சித் துணைத் தலைவர், கலெக்டரின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோய்விட்டார். கோபத்தில் திடீரென மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆன ஊராட்சித் தலைவி, “துணைத் தலைவர் கொடுக்கிற நெருக்கடியைத் தாங்க முடியாமல்தான் தற்கொலைக்கு முயன்றேன்” என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

நிலைமை சீராகி வீட்டுக்கு வந்தவருக்கு, தான் எடுக்கத் திட்டமிட்டிருந்த ‘பெரிய’ டெண்டர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவர, மீண்டும் தற்கொலைக்கு முயன்றாராம். செத்துச் செத்து விளையாடும் அந்த ஊராட்சித் தலைவியால், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் நிம்மதியின்றித் தவிக்கிறார்களாம்.

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவு...
சரி... அதை யார் சொல்றது?!

அதிதீவிரமான விசுவாசத்தால், எடப்பாடியின் அன்பை பெற்றுள்ளதை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரம்பு மீறிப் போகிறாராம். “மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டம் தமிழக இளைஞர்களுக்கு பயனளிக்கும்!” என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அவர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
வி.ஶ்ரீனிவாசுலு

இது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. ‘இவருக்கு என்ன ஒருங்கிணைப்பாளர் என்று நினைப்பா? தலைமைக்குத் தெரிவிக்காமல் சர்ச்சையான விஷயங்கள் பற்றி இவரே அறிக்கைவிடலாமா?’ என்று தென்மாவட்ட சீனியர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

திண்ணை காலியாவது எப்போது?
பதவிக்காக காத்திருக்கும் ர.ர.க்கள்!

திருச்சி பக்கமுள்ள மாவட்டத்தில் இலைக்கட்சி மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.ஜி.ஆர் பெயர்கொண்ட புள்ளி, ட்ரீட்மெண்ட் பிரமுகரின் வலது கரமாகக் கருதப்படுபவர். ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர் என்ற இமேஜ் இவர் மீதிருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் என்ற பேச்சு, கட்சியினர் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறது. அந்தப் பதவியை பிடிக்க முன்னாள் எம்.எல்.ஏ உட்பட சிலர் இப்போதே காய் நகர்த்துகிறார்களாம். “நான் ஓ.பி.எஸ் ஆதரவாளன் எல்லாம் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளிட்டாங்களே?” என்று புலம்புகிறாராம் அந்த மாவட்டச் செயலாளர்.

வாரிசுவுக்குப் பதவி...
போட்டியைத் தூண்டிவிடும் அமைச்சர்!

‘புரம்’ மாவட்டத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் ஒன்றை தன் மகனுக்கே வழங்க வேண்டும் என்று தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம் மூத்த அமைச்சர். தலைமையோ அதற்கு இன்னமும் இசைவு தெரிவிக்கவில்லையாம்.

இதனால் அந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் நிர்வாகிகள் இடையே போட்டியைத் தூண்டிவிட்டிருக்கிறாராம் அமைச்சர். “ஒன்றிய செயலாளர் பஞ்சாயத்தே முடியல... அதற்குள் மா.செ பஞ்சாயத்தா?” என்று பிரச்னையை சமாளிக்க தலைமை யோசனை கேட்கும். அப்போது, தன் பையன் பெயரைச் சொல்லிவிடலாம் என்பதே அமைச்சரின் ‘பொன்’னான கனவு.

காயப்படுத்திவிட்டார் எம்.பி!
முதல்வரிடம் முறையிடத் தயாராகும் வணிகர்கள்

‘முட்டை’ நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க நகருக்கு வெளியே 7 கி.மீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் அந்த ஊர் எம்.பி. ‘போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒரே வழி, ரிங் ரோடு அமைப்பதுதான். புதிய பேருந்து நிலையம் அல்ல’ என்று போராடிவரும் வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அந்த எம்.பி-யைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். கடுகடுத்த முகத்துடன் அவர்களை எதிர்கொண்ட எம்.பி, ‘உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? உங்க சங்க மாநிலத் தலைவர் அமைச்சர் நேருவை பார்த்தா, நாங்க உடனே திட்டத்தைக் கைவிட்டுடுவோமா?’ என்று ஏக வசனத்தில் பேசினாராம். நொந்துபோன வணிகர்கள், “உங்களுக்கு வாக்களித்த எங்கள் மனதை அந்த எம்.பி. காயப்படுத்திவிட்டார்” என்று முதல்வரை சந்தித்து முறையிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.