Published:Updated:

‘வாரிசு’ டைட்டில் அரசியல் முதல் மாலைக்குக் கடுப்பு கிரீடத்துக்குச் சிரிப்பு வரை!- கழுகார் அப்டேட்ஸ்

விஜய் வாரிசு அதிமுக பொதுக்குழு

விஜய் - உதய் - சிவா முக்கோணப் பஞ்சாயத்து! | அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்! | செங்கல் சூளைகளுக்கு கிரீன் சிக்னல்... மன்னர் புள்ளியின் பலே திட்டம்!

‘வாரிசு’ டைட்டில் அரசியல் முதல் மாலைக்குக் கடுப்பு கிரீடத்துக்குச் சிரிப்பு வரை!- கழுகார் அப்டேட்ஸ்

விஜய் - உதய் - சிவா முக்கோணப் பஞ்சாயத்து! | அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்! | செங்கல் சூளைகளுக்கு கிரீன் சிக்னல்... மன்னர் புள்ளியின் பலே திட்டம்!

Published:Updated:
விஜய் வாரிசு அதிமுக பொதுக்குழு
‘வாரிசு’ டைட்டில் அரசியல்...
விஜய் - உதய் - சிவா முக்கோணப் பஞ்சாயத்து!

விஜய்யின் புதிய படத்துக்கு ‘வாரிசு’ எனப் பெயர் சூட்டியிருப்பது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பிவருகிறது. சில வருடங்களுக்கு முன்புவரை ‘இளைய தளபதி’யாக இருந்த விஜய், திடீரென ஒரு படத்தில் ‘தளபதி’ ஆனார். தமிழ்நாட்டு அரசியலில், ‘தளபதி’ என்கிற பட்டம் யாரைக் குறிக்கும் என்று தெரிந்தும், துணிச்சலாக அந்த முடிவை எடுத்தார்.

விஜய்
விஜய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுபோலவே, தற்போதைய அரசியலில் ‘வாரிசு’ என்கிற வார்த்தை யாரைக் குறிக்கும் என்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில், அந்த வார்த்தையைப் படத்துக்கு டைட்டிலாக வைக்க விஜய் ஒப்புதல் கொடுத்ததில் ‘விஷயமிருக்கிறது’ என்கிறார்கள். இதன் பின்னணி குறித்துப் பேசுபவர்கள். “அண்மையில் ‘டான்’ பட விழா மேடையில் பேசிய உதயநிதி, சிவகார்த்திகேயனைத் தனக்கெதிராகக் கொம்புசீவிவிட்டதாக நினைத்தது விஜய் தரப்பு.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அதற்கு பதிலடியாகத்தான் இந்த அரசியல் உள்குத்து டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக விஜய்யின் ‘வாரிசு’ படம் ரிலீஸாகும் பொங்கல் பண்டிகை அன்றே, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தையும் வெளியிடுவதற்குக் காய்நகர்த்திவருகிறதாம் ரெட் ஜெயன்ட். உதய் - விஜய் பஞ்சாயத்துகளுக்கிடையே, ‘விஜய்யுடன் மோதுவதான இந்த பிம்பம் உருவாவதும் நல்லதுதான். இதனால் தனக்கான மார்க்கெட் உயரும்’ என நினைக்கிறதாம் சிவகார்த்திகேயன் தரப்பு!

அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்...
முணுமுணுக்கும் நிர்வாகிகள்!

மாம்பழக் கட்சியின் புதிய தலைவர், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு ‘அரசியல் மற்றும் சமூக வலைதளத்தில் எப்படி நடந்துகொள்வது’ என்று வகுப்பெடுத்துவருகிறாராம். சாதியக் கட்சி என்கிற பிம்பத்தை உடைக்கும் வகையில் வேலைகளைத் தீவிரமாக்கிவரும் புதுத் தலைவர், “கட்டப்பஞ்சாயத்து போன்ற விவகாரங்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறாராம். அதோடு, ‘சமூக வலைதளங்களில், கட்சிமீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பொறுப்பான வகையில் பதில் கொடுக்க வேண்டும்?’ என்பது பற்றியும் விலாவாரியாக வகுப்புபெடுக்கிறாராம். “தலைவரே இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது, சமூக வலைதளத்தில் சரியாகப் பேச வேண்டும் என்றெல்லாம் வகுப்பெடுப்பது, நமக்கு நல்லது செய்யற மாதிரி தெரியலை... நாம சரியா இல்லைன்னு நாமே ஒத்துக்கிற மாதிரி இருக்கு” என முணுமுணுக்கிறார்கள்.

செங்கல் சூளைகளுக்கு கிரீன் சிக்னல்...
மன்னர் புள்ளியின் பலே திட்டம்!

கோவையில் உயர் நீதிமன்றம் தடைசெய்திருக்கும் சட்டவிரோதச் செங்கல் சூளைகளை மீண்டும் திறக்க, ஆளுங்கட்சியில் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலபதிபர்களிடம் ‘தலைமையில் பேசி கிரீன் சிக்னல் வாங்கித் தருவது என் பொறுப்பு’ என உறுதியளித்திருக்கிறாராம் மன்னர் புள்ளி. முதற்கட்டமாக, முதல்வர் நீலகிரி வந்தபோது முதல்வரை நேரில் சந்திக்க, தொழிலதிபர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

கோவை மேம்பாலம்
கோவை மேம்பாலம்

இதனால், செங்கல் சூளை உரிமையாளர்கள் மத்தியில் மன்னர் புள்ளிக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி, செங்கல் உற்பத்தியாளர்களிடம் இதுவரை டீலிங் செய்துவந்த மாட்டப் பொறுப்பாளரை மாற்றிவிட்டு, அந்தப் பதவியில் தனக்கும், செங்கல் உற்பத்தியாளர்களுக்கும் நெருக்கமான சுந்தரமான நபரைக் கொண்டுவர காய்நகர்த்திவருகிறாராம் மன்னர் புள்ளி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அதிகரிக்கும் குற்றங்கள்... கண்டுகொள்ளாத அமைச்சர்...
கடுப்பாகும் கேரள வனத்துறை!

பசுமை அமைச்சரின் மாவட்டத்தில், வனத்துக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனவாம். அதிலும் குறிப்பாக, கேரள எல்லையில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டு வனத்தில், வன விலங்குகள் வேட்டை குறைந்தபாடில்லையாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, வேட்டைக் கும்பலுக்கு ஆதரவாக இருப்பதோடு, வனக் குற்றங்களே நடக்காததைப்போல கணக்கு காண்பித்துவருகிறார்களாம். அமைச்சர் இதைச் சுத்தமாகக் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள். தொடர்ந்து கேரளாவில் நடத்தப்படும் வாகன சோதனைகளில், வன விலங்குகளின் இறைச்சி அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகிறதாம். இது குறித்து கேரள வனத்துறையினர் பலமுறை தகவல் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். பொறுமையிழந்து கடுப்பான கேரள வனத்துறை, எச்சரிக்கும் தொனியில் தற்போது தகவல் அனுப்பியிருக்கிறதாம்.

ஆதரவு திரட்டும் ‘பணிவானவரின்’ மகன்...
கழற்றிவிட்ட சமூக உறவுகள்!

தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் நலன் சார்ந்து செயல்படும் ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பிறமலைக் கள்ளர் அமைப்புகள், அகமுடையார் அமைப்புகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ‘பணிவான’ தன் அப்பாவுக்காக ஆதரவு திரட்டிவருகிறாராம் அவரின் இளைய மகன். ‘‘கட்சியில் அப்பாவை ஒதுக்கும் சூழல் ஏற்பட்டால், நீங்கள் எல்லோரும் போராட்டம் நடத்தி ஆதரவு தர வேண்டும்’’ என்று கோரிக்கைவைத்திருக்கிறார். ஆனால், ‘‘அ.தி.மு.க-விலுள்ள முக்குலத்தோர் முக்கியஸ்தர்கள் பலரே துணிவானவருக்கு ஆதரவு நிலை எடுத்திருக்கும்போது, நாங்கள் உங்களை ஆதரித்தால், எதிர்காலத்தில் பல சிக்கல்கள் வரும்’’ என்று நாசுக்காகச் சொல்லி கழற்றி விட்டுவிட்டார்களாம். இதன் பின்னணியில் சினிமா டைரக்டர் பெயர்கொண்ட மாஜி ஒருவர் இருப்பதை அறிந்து, பணிவானவர் தரப்பு மேலும் கண் சிவந்திருக்கிறது.

“அமைச்சர் பதவியிலிருந்தே விலகிவிடுகிறேன்!”
கிண்டலுக்குள்ளாகும் அமைச்சர்

“காலையில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட சார்பதிவாளர், அன்று மாலையே மீண்டும் மதுரைக்கு நியமிக்கப்படுகிறார். பத்திரப் பதிவுத்துறை இடமாறுதலில் அந்த அளவுக்குப் பணம் விளையாடுகிறது” என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவிக் கட்சியின் காக்கி மாஜி பேசியிருந்தார். ஒரு வாரம் கழித்து இதற்கு பதிலளித்த அமைச்சர், “பணம் வாங்கிக்கொண்டு ஒரே நாளில் அதே இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது பொய். அந்தச் சார்பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாள்கள் பணியாற்றிய பிறகு, குடும்பச் சூழ்நிலை காரணமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஒரே நாளில் இடமாறுதல் செய்ததாக ஆதாரம் இருந்தால் காட்டட்டும். அமைச்சர் பதவியிலிருந்தே நான் விலகிவிடுகிறேன்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால், காவிக் கட்சியினரோ, ‘அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்’ என்று கிண்டல் செய்துவருகிறார்கள். இன்னொரு பக்கம் ‘பேசத் தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்கிறார் அமைச்சர்’ என்று உடன்பிறப்புகளும் புலம்புகிறார்கள். இது தலைமையின் கவனத்துக்கும் சென்றிருக்கிறதாம்.

மாலைக்குக் கடுப்பு... கிரீடத்துக்குச் சிரிப்பு...
மனம் வெதும்பிய மாஜி!

அ.தி.மு.க பொதுக்குழு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை, அந்த முன்னாள் அமைச்சருக்கு வழங்கியிருந்தார் துணிவானவர். பொதுக்குழு நடைபெறும் பகுதிகளைச் சுற்றி, துணிவானவருக்கு அதிக அளவில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததாம்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

ஆனால், பணிவானவரும் துணிவானவரும் சரிசமமாகச் சேர்ந்திருக்கும் பேனர்களே முழுமையாக ஏரியாவை ஆக்கிரமித்திருக்க, கடுப்பாகியிருக்கிறார் துணிவானவர். இந்த நிலையில், பொதுக்குழு ஏற்பாடுகளுக்கான கான்ட்ராக்ட் கிடைக்காத கடுப்பிலிருந்த மா.செ-க்களும், அந்த மாஜியைப் பற்றி ஒன்றுக்கு இரண்டாகத் துணிவானவரிடம் போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அதனால்தான், பொதுக்குழு அன்று மேடையில் மாலை அணிவிக்க வந்த மாஜியைக் கடுமையாகக் கடிந்துகொண்டாராம் துணிவானவர். அதேநேரத்தில், பொதுக்குழு சார்பாக வாள் மற்றும் வெள்ளி கிரீடம் வழங்கப்பட்டதைத் தனது டிரேட் மார்க் சிரிப்போடு துணிவானவர் ஏற்றுக்கொண்டது, மாஜிக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதாம்!