Published:Updated:

அனல் பறக்கும் அறிவாலயம் முதல் அமமுக கொடிக்குத் தடைவிதித்த சசிகலா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

சசிகலா - தினகரன் | கழுகார் அப்டேட்ஸ்

‘மெயில் இன்பாக்ஸை செக் செய்யவும்’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது... மெயிலில் சுடச்சுட செய்திகளை அனுப்பியிருந்தார் கழுகார்

அனல் பறக்கும் அறிவாலயம் முதல் அமமுக கொடிக்குத் தடைவிதித்த சசிகலா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

‘மெயில் இன்பாக்ஸை செக் செய்யவும்’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது... மெயிலில் சுடச்சுட செய்திகளை அனுப்பியிருந்தார் கழுகார்

Published:Updated:
சசிகலா - தினகரன் | கழுகார் அப்டேட்ஸ்
உசுப்பேற்றிய தினகரன்...
அ.ம.மு.க கொடிக்குத் தடை விதித்த சசி!

விரைவில் சைதாப்பேட்டையிலிருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம் சசிகலா. சைதை பக்கமிருக்கும் அ.ம.மு.க அதிருப்தி நிர்வாகி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த ஏற்பாடு என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘சசிகலா பாதை வேறு... நம் பாதை வேறு... இருவருக்கும் அ.தி.மு.க-வை மீட்பதே நோக்கம்’ என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதும் சசிகலா தரப்பை உசுப்பேற்றியிருக்கிறது. இதையடுத்து, தனது அரசியல் பயணத்தில் அ.ம.மு.க-வின் கொடிகளை எடுத்துவர வேண்டாம் என்று தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் சசி

சசிகலா
சசிகலா

சைதாப்பேட்டையிலிருந்து கிளம்புபவர் முதற்கட்டமாக வட மாவட்டங்களில் வலம்வரத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இந்தப் பயணம் தொடங்குவதற்கு முன்னதாக, சசியுடன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்திக்கவைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது டாக்டர் வெங்கடேஷ் தரப்பு.

மும்மூர்த்தி அதிகாரிகள் குடைச்சல்...
டெல்லிக்கு ரூட் போடும் புல்லாங்குழல் அதிகாரி!

சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில், புல்லாங்குழல் அதிகாரி கடும் அப்செட்டில் இருக்கிறாராம். தனது துறை அமைச்சருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் வேறொரு துறைக்கு மாறுதல் கேட்டிருந்தார். அமைச்சருமே அவரை மாற்றிவிடுங்கள் என்றுதான் தலைமையிடம் சொல்லியிருந்தார்.

அதன்படியே வேறொரு துறைக்கு அவர் மாற்றப்பட்டாலும், அதிகாரியின் மனம் சாந்தமடையவில்லை என்கிறார்கள். எந்தத் துறைக்குச் சென்றாலும் முதல்வருக்கு நெருக்கமான மும்மூர்த்தி அதிகாரிகள் தரும் குடைச்சல் தீராது என்று நினைப்பவர், ``சீக்கிரமே டெல்லி பக்கம் போயிடணும்” என்று தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் புலம்பிவருகிறாராம்!

வீட்டு வாசலில் மனைவி...
வெண்மைத்துறை அமைச்சரின் சென்டிமென்ட்!

வெண்மைத்துறை அமைச்சர் முதன்முறையாக அமைச்சரானதிலிருந்தே நேரம், காலம் பார்த்தே எதையும் செய்துவருகிறார். அவரது அலுவலகம் மட்டுமின்றி, வீட்டிலும் சென்டிமென்ட்டாக நிறைய விஷயங்களை மாற்றியிருப்பவர், வீட்டைவிட்டு வெளியே கிளம்ப வேண்டுமென்றால் அவரின் மனைவியை வீட்டு வாசலில் நிற்கவைத்து, அவரது முகத்தைப் பார்த்துவிட்டே காரில் ஏறுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

தான் கிளம்புவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு கார் ஓட்டுநர், அமைச்சரின் மனைவிக்குத் தகவல் சொல்லிவிட வேண்டும் என்பது உத்தரவாம். இப்படி அடிக்கடி வந்து நிற்கச் சொல்வதால், `இந்த மனுஷனோட ஒரே தொல்லையா போச்சு... வீட்டு வேலை எதையும் செய்ய முடியலை’ என்று கிச்சனிலிருந்து கரண்டிகள் பறப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் அமைச்சர் வீட்டில் பணிபுரிபவர்கள்!

``ஒருவருக்கு இரண்டு பதவிகள் இல்லை...’’
அனல் பறக்கும் அறிவாலயம்!

அறிவாலயம் பக்கம் மீண்டும் அனல் பறக்கப்போகிறது என்பதே தி.மு.க-வின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அதற்கு முன்பாக, `அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் இரண்டு பதவிகளில் ஒரே நபர் தொடர முடியாது’ என்று கறார் காட்டியிருக்கிறது கட்சித் தலைமை.

திமுக- அண்ணா அறிவாலயம்
திமுக- அண்ணா அறிவாலயம்

இதையடுத்து, தென் மாவட்டத்தின் மீசைக்கார அமைச்சர், கோயில் மாவட்ட அமைச்சர், நீண்ட இனிஷியல் அமைச்சர் உட்பட பலரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். மாவட்டப் பொறுப்பு கைநழுவிப் போனாலும், அது மாற்று ஆட்களிடம் சென்றுவிடக் கூடாது; தங்களுக்குத் தோதான ஆட்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்போதே காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள் அமைச்சர்கள். விரைவில் பல மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் அறிவாலயம் நோக்கி படையெடுக்கலாம் என்கிறது அறிவாலய பட்சி!

நேர்மையான ஆட்சியருக்கு மிரட்டல்...
முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியுமா?

யானைகளின் வலசைப் பாதைகளை மீட்கும் வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரிகள் பேனல் பட்டியலில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் பெயர் இருக்கிறது. இதனாலேயே அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி ஆட்சியராக நீடித்துவருகிறார். இதற்கிடையே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஆட்சியர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருவதால், ‘காரியம்’ சாதிக்க முடியாமல் ஆட்சியர்மீது அரசியல்வாதிகள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இதனால் ஆட்சியரை மாற்றுவதற்காக கோட்டையின் பெண் உயரதிகாரியையும், அமைச்சர் ஒருவரையும் வைத்து குடைச்சல் கொடுத்த நிலையில் இவர்களின் டார்ச்சர் தாங்காமல் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார் இன்னசென்ட் திவ்யா. தற்போது ``மாவட்டத்தைவிட்டே கிளம்புங்கள்” என்று ஆட்சியருக்கு மறைமுக மிரட்டல் விடுக்கப்படுகிறதாம். ``நேர்மையான ஆட்சியருக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியுமா?” என்று கொந்தளிக்கிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்!

யாருக்கு பார்?
முட்டிக்கொள்ளும் சுரேஷ்ராஜன் - மனோ தங்கராஜ்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் பார்களை ஏலத்தில், தான் சொல்பவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ்ராஜன் தரப்பு அதிகாரிகளிடம் கூறியதாம். ஆனால், அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவாளர்கள் கைகாட்டுபவர்களுக்கே பார்களை ஒதுக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

ஏற்கெனவே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரான அமைச்சர் மனோதங்கராஜுக்கும் சுரேஷ்ராஜனுக்கும் ஆகாது. இதையடுத்து பார் ஒதுக்கீடு விவகாரத்தில் இருதரப்பும் முட்டிக்கொண்டு நிற்கின்றன!