Published:Updated:

பன்னீரின் வேலுமணி பாசம் முதல் அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

மாணவர் பயிற்சித் திட்டப்பணிகளில் கழுகார் பிஸி. அதனால், இந்த முறை வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். அதன் வரி வடிவம் அப்படியே இங்கே...

வேலுமணி மீதான பாசம்...
கவர்னரிடம் புகார் சொன்ன பன்னீர்!

நவம்பர் 23-ம் தேதி தமிழக கவர்னர் ரவியைச் சந்தித்துப் பேசினார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். அப்போது பன்னீர், ``தி.மு.க பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் வெள்ள வடிகால் பணிகள் ஒன்றுகூட செய்யாததுதான் பாதிப்புக்குக் காரணம். இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

வேலுமணி
வேலுமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு கவர்னரிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லையாம். சென்னையில் வெள்ளம் தேங்கிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணிமீது ஊழல் குற்றச்சாட்டை முதல்வர் சுமத்திய நிலையில் தற்போது வேலுமணி, பன்னீரின் ஆதரவாளராக மாறியிருப்பதால், பிரச்னையை திசைதிருப்பவே தி.மு.க-மீது புகார் சொன்னாராம் பன்னீர்!

கேட்டை மூடிய தி.மு.க...
திறந்துவிட்ட பா.ஜ.க!

அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பா.ஜ.க-வில் சேர்ந்தது அனைவரும் அறிந்ததே. பொதுப்பணித்துறையில் வேலைகளைச் செய்ய ஒப்பந்த நிறுவனம் நடத்திவரும் மாணிக்கம், ஏற்கெனவே பன்னீர் வழியாகத்தான் அ.தி.மு.க-வுக்கு வந்தார்.

பா.ஜ.க-வில் இணைந்த மாணிக்கம்
பா.ஜ.க-வில் இணைந்த மாணிக்கம்

அவரது சிபாரிசில்தான் எம்.எல்.ஏ-வும் ஆனார். கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததும், தி.மு.க-வுக்குச் செல்வதற்குத் தொடர்ந்து முயன்றுவந்தாராம். ஆனால், மதுரை மாவட்ட தி.மு.க-வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே... கேட்டை மூடிவிட்டது தி.மு.க. அதனால்தான் இப்போது பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள்!

அமைச்சர் மகனின் மேயர் கனவு...
கலைக்கத் துடிக்கும் ஃபைனான்ஸியர்!

ஆவடி மாநகராட்சிக்கு எப்படியாவது தன் மகனை மேயராக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அந்த மாவட்டத்தின் அமைச்சர். இதற்காக மாநகராட்சியில் 2,000 ஓட்டுகள் இருக்கும் வார்டு ஒன்றைத் தேர்வு செய்து, அங்கு பட்டுவாடா திட்டங்களையும் தயார்நிலையில் வைத்திருக்கிறார்கள்.

ஆவடி
ஆவடி

இன்னொரு பக்கம் அதே மேயர் பதவியைக் குறிவைத்து ஃபைனான்ஸியர் ஒருவரும் காய்நகர்த்திவருகிறார். இந்த ஃபைனான்ஸியர்தான் அமைச்சருக்கே தேர்தலின்போது ஃபைனான்ஸ் செய்தவர் என்பதால், வாரிசுப் பட்டத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பதற்றத்தில் இருக்கிறாராம் அமைச்சர்.

``சீனியருக்கு மரியாதையே இல்லை...”
அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன்!

நவம்பர் 24 அன்று சென்னையில் நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அன்வர் ராஜாவைக் கடுமையாகப் பேசியது அவரின் ஆதரவாளர்களைக் கொதிக்கவைத்துள்ளது. இதற்கிடையே, ``எம்.ஜி.ஆர் காலத்து சீனியரான உங்களுக்குக் கட்சியில மரியாதை இல்லை. சி.வி.சண்முகம் உங்களை அடிக்கப் பாயறாரு.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

அதைக் கட்சித் தலைமையும் வேடிக்கை பார்க்குது. பேசாம நீங்க தி.மு.க-வுக்கு வந்துட்டா முக்கியப் பொறுப்பு தர்றோம். சிறுபான்மையினரை மதிக்குற கட்சி தி.மு.க” என்று ராஜகண்ணப்பன் தரப்பிலிருந்து தூதுவிட்டிருக்கிறார்களாம். எப்போதும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்!

மீண்டும் நில அபகரிப்பு?
தி.மு.க பிரமுகர்கள் மீது புகார்கள்

தென்காசி மாவட்டத்தில் தி.மு.க எம்.பி தனுஷ்குமார் மீது அவரின் உறவினரே நில அபகரிப்பு புகார் கூறியதுடன், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாகத் தீக்குளிக்க முயன்றார். ``நில அபகரிப்பு எதுவும் செய்யவில்லை” என்று தனுஷ்குமார் கூறினாலும், இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான செல்லதுரை மீதும் சாகுல் ஹமீது என்பவர் குடும்பத்துடன் சென்று தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த பத்தாண்டுகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் பரவலாகப் பல்வேறு ஊர்களிலும் நில அபகரிப்பு புகார் எழுந்ததுபோல, மீண்டும் அதே விவகாரம் தலைதூக்குகிறதோ என்று புலம்புகிறார்கள் மக்கள்!

``இது ஆரம்பம்தான்!”
ஆளைத் தூக்கிய செந்தில் பாலாஜி

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர்தான் அ.தி.மு.க-வின் மேயர் வேட்பாளர் என்று கூறப்படும் நிலையில், அவரும் வடவள்ளியைச் சுற்றியுள்ள சில வார்டுகளை அதற்காகத் தயார்படுத்திவைத்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதை மோப்பம் பிடித்த செந்தில் பாலாஜி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கோகுல் மூலம் வடவள்ளியைச் சுற்றியுள்ள நான்கு வார்டுகளின் அ.தி.மு.க வட்டச் செயலாளர்களை வலைவீசி இழுத்து, தி.மு.க-வில் சேர்த்திருக்கிறார். ``இது ஆரம்பம்தான்... பெரிய தலைகளெல்லாம் இனிமேல்தான் வலையில் சிக்கும்” என்கிறது செந்தில் பாலாஜி தரப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரைவில் காக்கிகள் மாற்றம்...
முடிவு செய்தது சித்தரஞ்சன் சாலையா?

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனராக இருக்கும் ஒருவர் விரைவில் இடமாற்றம் செய்யப்படவிருக்கிறாராம். அவரது இடத்துக்கு மதுரையிலிருந்து ஒருவர் வரலாம் என்கிறார்கள். அதேபோல கொங்கு மண்டலத்திலிருந்து டி.ஐ.ஜி ஒருவர் சென்னைக்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்காக சென்னையிலிருக்கும் இணை கமிஷனர் ஒருவரை இடமாற்றம் செய்ய ஃபைல் மூவாகியிருக்கிறதாம். இந்த இடமாறுதல் அனைத்தும் சித்தரஞ்சன் சாலையில் முடிவு செய்யப்பட்டவை என்கிறார்கள்.

``என்னைக் கேட்காம எப்படி?"
கொதிக்கும் வெண்மைத்துறை அமைச்சர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் நகராட்சிக்குப் புதிதாக கமிஷனர் ஒருவர் கொங்கு மண்டலத்திலிருந்து வந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்த ஒருவருக்கு உதவியாளராக இருந்தவர். அ.தி.மு.க-விலிருந்து கட்சி மாறிய அந்த அமைச்சரே தற்போதும் அமைச்சராக இருப்பதால், தனக்கு வளமான பதவி வேண்டும் என அமைச்சரிடம் கேட்டிருக்கிறார் அந்த உதவியாளர்.

இதையடுத்தே பழைய பாசத்தில் வருமானம் கொழிக்கும் நகராட்சியில் பதவியைக் கேட்டு வாங்கிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கிடையே, ``எப்படி என்னிடம் கேட்காமல், என் மாவட்டத்தில் அந்த அமைச்சரின் ஆளை நியமிக்கலாம்?” என்று கடுப்பிலிருக்கிறாராம் வெண்மைத்துறையின் அமைச்சர்!