Published:Updated:

`கலகம் மூட்டத் தயாராகும் அதிமுக வேட்பாளர் முதல் கைக்கு வராத ஸ்வீட் பாக்ஸ்கள் வரை

“சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். தகவல்களை மெயில் செய்துள்ளேன்” என்று போனில் தகவல் தெரிவித்தார் கழுகார். மெயில் இன்பாக்ஸை நிறைத்திருந்தன செய்திகள்

சுனில்குமார் நியமனம்... பின்னணி என்ன?

பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில் டம்மி பதவிகளில் மாறி மாறி பந்தாடப்பட்டவர் சுனில்குமார் ஐ.பி.எஸ். தி.மு.க முத்திரை குத்தப்பட்டு. அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அவரை டம்மி பதவிக்குத் தூக்கியடிப்பார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதும் சுனில்குமார் புறக்கணிக்கப்பட்டார். தற்போதைய தி.மு.க ஆட்சி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் ஓய்வுபெற்றுவிட்டார். இருந்தாலும், ஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி (ஓ.எஸ்.டி) என்ற முறையில் சுனில்குமாருக்கு மீண்டும் காவல்துறையை கவனிக்கும் அசைன்மென்ட்டை ஒப்படைக்க நினைத்தது ஆட்சி மேலிடம்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

ஆனால், இதை சுனில்குமார் விரும்பவில்லையாம். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகள் (மத்திய அரசு சட்டத்தின்படி, மாநில அரசு கவனிக்கும்) உள்ளிட்ட பகுதிகளைக் கவனிக்கும் வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார் சுனில்குமார். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானதேசிகன் இருக்கிறார். ஏற்கெனவே உள்ள இரண்டு உறுப்பினர்களுடன், மூன்றாவது உறுப்பினராக சுனில்குமார் நியமிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால் என்ன அரசியல் இருக்குமோ என ஆராய்ந்துவருகிறது ஒரு டீம்.

பெயரால் ஏற்பட்ட குழப்பம். அவர் இவர் அல்ல

சென்னையில் குழந்தைகள் காப்பத்தின் நிர்வாகியாக இருந்த இசபெல் மீது பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையில் சமூகநலத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்தச் சூழலில் ரெப்கோவங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா என்பவர் அக்டோபர் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 2020-21-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக ஒருகோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ரெப்போ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லாதான் பாலியல் விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட புள்ளி, முதல்வரைச் சந்திக்க அனுமதி பெற்றது எப்படி என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் செய்தி வெளியானது. ரெப்கோ வங்கி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் அந்த இசபெல்லா இவர் அல்ல என்று விளக்கமளித்தனர். இந்தச் செய்தி பெயரால் ஏற்பட்ட குழப்பம் தவிர மற்றப்படி ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா மீது நமக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை ரெப்கோ நிர்வாக தரப்பிற்கும் விளக்கியுள்ளோம்.
வழக்கு தொடரத் தயாராகும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கெனவே அ.தி.மு.க வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் தகடுதத்தங்கள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்கறிஞர் பிரிவிலிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, பாபு முருகவேல் உள்ளிட்டவர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளாராம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த விஷயத்தை பன்னீரிடம் ஆலோசித்தபோது அவர் தரப்பில், “நம்ம கட்சியை வளர்க்குறதைப் பார்ப்போம்... இதெல்லாம் தேவையில்லாத அலைச்சல்” என்று கூற எடப்பாடியோ, ‘‘தி.மு.க எதிர்ப்பு அரசியலில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது... நாம் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுத்தார்கள். அதேபோல் இப்போது நாமும் நெருக்கடி கொடுப்போம்’’ என்றாராம்!

`துரைமுருகனுக்கு டோஸ்விட்ட முதல்வர் தொடங்கி செல்லம் கொஞ்சும் அ.தி.மு.க மாஜி வரை!'- கழுகார் அப்டேட்ஸ்
கைக்கு வராத ஸ்வீட் பாக்ஸ்கள்...
பொன்விழா நாளில் கலகம்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சித் தலைமை 12 ஸ்வீட் பாக்ஸ்களை வழங்கியதாம். ஆனால், தென் மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு மட்டும், ஆறு ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ‘‘மீதி ஸ்வீட் பாக்ஸ்களைத் தேனிக்காரர் தருவார்’’ என்று கைகாட்டியிருக்கிறது சேலம் தலைமை. ஆனால் தேனிக்காரரோ, ‘‘நான் கொடுக்க வேண்டியதை ஏற்கெனவே வாங்கிவிட்டார்களே...’’ என்று கையை விரித்துவிட்டார். கடைசியாக கட்சித் தலைமை, ‘‘கடனை வாங்கி செலவு செய்யுங்கள்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

தேர்தல் முடிந்த பிறகு கணக்குத் தீர்த்துக்கொள்ளலாம்’’ என்று வாக்கு கொடுத்துள்ளது. தேர்தல் முடிந்தபிறகு கேட்டபோது, “ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும்” என்று பதில் வந்ததாம். இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலும் முடிந்த நிலையில், கடன் வாங்கி செலவு செய்தவர்களுக்குப் பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து கொதித்துப்போன வேட்பாளர்கள், ‘‘எங்கள் கணக்கை பைசல் செய்யவில்லை என்றால், கட்சி பொன்விழா நாளில் கலகத்தை மூட்டிவிடுவோம்’’ என்று சேலத்துகாரரிடம் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்!

அதிரடி கனிமவளத்துறை இயக்குநர்...
கப்சிப் ஆளுங்கட்சிப் புள்ளிகள்!

சமீபத்தில் கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ், காஞ்சிபுரத்தில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு சென்னை நோக்கி வந்திருக்கிறார். ஒரகடம் அருகே கிராவல் கல், மண்ணை ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரிகள் செல்வதைப் பார்த்தவர், அந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தி நடைசீட்டைக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறார்.

மாதிரி படம்
மாதிரி படம்

லாரி ஓட்டுநர்கள் திருதிருவென விழிக்கவும், உடனடியாக கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை வரவழைத்து, நடைசீட்டு இல்லாத 18 லாரிகளைக் கையப்படுத்தச் சொல்லிவிட்டாராம். ஆய்வுசெய்வது துறையின் மூத்த அதிகாரி என்று தெரியாத லாரி டிரைவர்கள், லோக்கல் ஆளும் புள்ளிகளுக்கு போன் போட்டுள்ளார்கள். விஷயத்தைக் கேட்டதும் வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கப் பார்த்த ஆளுங்கட்சிப் புள்ளிகள், வந்திருப்பது துறையின் இயக்குநர் என்று தெரிந்ததும் கப்சிப் என்று அமைதியாகிவிட்டார்களாம்.

‘‘மா.செ பதவியை விட்டுக்கொடுக்க முடியாது!’’
சண்முகநாதன் திட்டவட்டம்

தூத்துக்குடி அ.தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் உள்ளனர். இதில், தெற்கு மாவட்டத்தில் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்கள். சண்முகநாதன் மீதான அதிருப்தியால் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் செல்லப்பாண்டியன் அணியில் இருக்கிறார்கள்.

சண்முகநாதன்
சண்முகநாதன்

இந்தநிலையில், ‘தெற்கு மா.செ-வை மாற்ற வேண்டும்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து, பன்னீரைச் சந்தித்த சண்முகநாதன், ‘‘என் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது. வேணும்னா மாவட்டத்தைப் பிரிச்சு, மாநகர் மாவட்டத்தை உருவாக்கி செல்லப்பாண்டியனுக்குப் பதவி கொடுங்க’’ என்று சொல்லியிருக்கிறார். மாநகர் மாவட்டத்தை உருவாக்கினாலும், தூத்துக்குடி தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் இருவரிடையே போட்டி கடுமையாக நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டாலினை கலாய்க்கும் மீம்ஸ்...
தெறிக்கவிடும் பேரப்பிள்ளைகள்!

சமீப நாள்களாக முதல்வர் ஸ்டாலின் இரவு 8 மணிக்கு மேல் வாட்ஸ் அப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். ஆரம்பத்தில் யதேச்சையாக பார்க்க ஆரம்பித்தது, இப்போது பெரும் ஆர்வமாக தொற்றிக்கொண்டது என்கிறார்கள். குறிப்பாக, மீம்ஸ்கள் மீது அலாதி ஆர்வமாம். அவரின் குடும்பத்தினர் மட்டும் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில், சில சமயங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ்களையும் பேரப்பிள்ளைகள் சிலர் பதிவேற்றி, தாத்தாவை தெறிக்கவிடுகிறார்களாம்.

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அந்த மீம்ஸ்களைப் பார்த்து வயிறு குலுங்க சிரிப்பவர், “எப்படிலாம் கிண்டல் பண்றாங்க பாருங்க!” என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லிச் சிரிக்கிறாராம். வாட்ஸ் அப்பில் கிடைக்கும் சில தகவல்களை அமைச்சர்களுக்கு ‘ஃபார்வேர்ட்’ செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகிறாராம் முதல்வர்.

ஓகே போடுறதுக்கு மட்டும்தான் நானா?”
கொந்தளித்த உச்ச அதிகாரி

அதிகாரிகள் மட்டத்தின் உச்சத்தில் இருப்பவருக்கும், முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கும் இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறதாம். சமீபத்தில் சத்துணவு, சுகாதாரம் ஆகிய துறைகள் தொடர்பான இரண்டு கோப்புகள் அவரிடம் ‘ஓகே’ வாங்குவதற்காகச் சென்றிருக்கின்றன.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

கோப்புகளை அனுப்பிய அதிகாரிகளை அழைத்த உச்ச அதிகாரி, “இதை ஏன் என்கிட்ட கொண்டுவந்தீங்க? இந்தத் திட்டம் தொடர்பா விவாதிக்கும்போதும், முடிவெடுக்கும்போதும் என்கிட்ட யாரும் கலந்து பேசல... வெறும் ‘ஓகே’ போடுறதுக்கு மட்டும்தான் நான் இருக்கேனா?” என்று கடிந்திருக்கிறார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தன்னை யாரும் கலந்து ஆலோசிப்பதில்லை என்கிற வருத்தம் உச்ச அதிகாரிக்கு நிறைய இருக்கிறதாம். இன்னும் ஆறு மாதத்தில் சூழல் மாறவில்லை என்றால், முதல்வரிடம் சொல்லிவிட்டு அமைதியாக ஒதுங்கிவிடவும் தீர்மானித்திருக்கிறாராம் அவர்.

மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு