Published:Updated:

`திருமாவிடம் கறார் காட்டிய முதல்வர்; ஹெச்.ராஜாவைக் கண்டு அலறும் பாஜக சீனியர்கள்!' கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்அப்பில் வந்துவிழுந்தது வாய்ஸ் நோட்; ``செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்” என்று தகவல் அனுப்பியிருந்தார் கழுகார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி உள்ளாட்சி குஸ்தி!

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 என்று மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், `உள்ளாட்சித் தேர்தலுக்கான பொது மற்றும் பட்டியல் சமூக பிரிவினருக்கு வார்டுகள் ஒதுக்கீட்டிலுள்ள முரண்பாடுகளைச் சரிசெய்யவில்லையென்றால், தேர்தலுக்குத் தடைவிதிக்க நேரிடும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி அரசை எச்சரித்திருக்கிறது. அதனால், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்தத் தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க கூட்டணி தொடருமா என்பதிலும் கேள்வி எழுந்திருக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

ஆறு எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவிகித இடம் வேண்டும் என்று காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கும் தி.மு.க., மீதமிருக்கும் 30 சதவிகித இடங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பிரித்துக்கொள்ளட்டும் என்று கறாராகக் கூறுகிறதாம். ஒருவேளை இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லையென்றால், காங்கிரஸைத் தூக்கிச் சுமப்பதை விட்டுவிட்டு தனித்துப் போட்டியிடலாம் என்றும் கணக்கு போட்டுவருகிறதாம் தி.மு.க. புதுச்சேரியைக் கோட்டையாக வைத்திருந்த தங்கள் கட்சியை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டுவிட்டார் நாராயணசாமி என்று கடுப்பில் இருக்கிறார்களாம் கதர்ச்சட்டைக்காரர்கள்.

காத்திருக்கும் கலெக்டர்...
கடுப்பேற்றும் எம்.எல்.ஏ!

சமீபகாலமாக மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரும், மாவட்ட கலெக்டர் லலிதாவும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். அரசு விழாக்களுக்குக் குறித்த நேரத்தில் ராஜ்குமார் வராததால், அவரது வருகைக்காக கலெக்டர் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ

சமீபத்தில் `தூய்மை முகாம்’ தொடக்க நிகழ்ச்சியைக் காலை 7:30 மணிக்குத் தொடங்கத் திட்டமிட்டிருந்தது மாவட்ட நிர்வாகம். கலெக்டரும் உரிய நேரத்தில் வந்துவிட்டார். ஆனால், எம்.எல்.ஏ வராததால் திட்டத்தைத் தொடங்கிவைத்துவிட்டு, கலெக்டர் கிளம்பிவிட்டார். மெதுவாக காலை 10:30 மணியளவில் அங்கு வந்த ராஜ்குமார், ``எப்படி எம்.எல்.ஏ இல்லாமல் திட்டத்தைத் தொடங்கிவைக்கலாம்?’’ என்று அதிகாரிகளிடம் கடுகடுத்திருக்கிறார். அதோடு பஞ்சாயத்து முடியவில்லை. அதன் பிறகு மயிலாடுதுறை அரசுத் தலைமை மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் மைய தொடக்கவிழா நடைபெற்றபோது, அந்த நிகழ்ச்சிக்குக் கலெக்டரை அழைக்கக்கூடாது என்று எம்.எல்.ஏ தரப்பிலிருந்து தகவல் பாஸ் செய்யப்பட்டு, அவர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். இதையடுத்து, ``அதிகாரிகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அரசியல்வாதிகள் எப்போதுதான் மாறப்போகிறார்களோ!” என்று புலம்புகிறார்கள் மயிலாடுதுறை அரசு ஊழியர்கள்!

குலதெய்வத்துக்குக் குடமுழுக்கு!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தன் முன்னேற்றத்துக்கான காரணமாக நினைப்பது, நாமக்கல் மாவட்டம், புதுப்பாளையத்தில் அமைந்திருக்கும் அவருடைய குலதெய்வமான வரதராஜ பெருமாளைத்தானாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் முருகன், மத்திய அமைச்சரான பிறகு கட்சியின் தமிழக மாநிலத் தலைவருடன் இந்தக் கோயில் அருகே கோ பூஜையெல்லாம் நடத்தினார்.

எல்.முருகன்
எல்.முருகன்

இப்போது அதையெல்லாம் தாண்டி வரதராஜ பெருமாளுக்கு குடமுழுக்கு செய்யத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார். ஆனால் என்ன காரணத்தாலோ, `இந்த ஏற்பாடுகளை இப்போதைக்கு வெளியில் சொல்ல வேண்டாம்’ என்று கோயில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன் உறவினர்களுக்குக் கண்டிப்பாக உத்தரவைப் பிறப்பித்திருக்கிறாராம். ஆனாலும் விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.

“நிர்வாகிகளை கண்டித்துவையுங்கள்!”
திருமாவிடம் ஸ்டாலின் கறார்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தமிழக காவல்துறையைக் கண்டித்து நடத்தவிருந்த இரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை ரத்துசெய்துவிட்டார்கள். அதற்கு முன்பாக முதல்வர் தரப்பிடம் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். அப்போது உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் ஒன்றை திருமாவிடம் சுட்டிக்காட்டிய முதல்வர், ‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, உங்கள் கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் பஞ்சாயத்துக்கு அதிகம் வருகிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

பதிலுக்கு திருமாவும், ‘‘காவல்துறையிலுள்ள சில அதிகாரிகளே இப்படியொரு ரிப்போர்ட் தயார் செய்கிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான நிலை ஏற்படாத நிலையில், வேறு சிலர் மூலம் திருமாவை ஆஃப் செய்த முதல்வர், ‘‘இனி கட்சி நிர்வாகிகளைக் கண்டித்துவையுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘இதை எப்படிக் கட்சி நிர்வாகிகளிடம் சொல்வது?’’ என்று யோசித்துவருகிறாராம் திருமா.

கனிமொழியை அழைக்காத அறிவாலயம் முதல் எடப்பாடி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி வரை! கழுகார் அப்டேட்ஸ்
‘‘முதல்வரின் உறவினர்கள் தொந்தரவு தாங்கலை!”
புலம்பும் அமைச்சர்

அமைச்சர் ஒருவர் சமீபத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசும்போது, ‘‘தலைவருக்கும் எனக்கும் பல ஆண்டுக்கால நட்பு இருக்கிறது. முதல்வரின் பிள்ளைகள் என் பிள்ளைகள் மாதிரி... அவர்கள் என் துறையில் ஏதாவது கேட்டால், உடனே செய்து கொடுப்பேன். ஆனால், அவர்களின் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு பலரும் என்னிடம் பேப்பரை நீட்டுகிறார்கள். ஒரே வேலைக்கு மூன்று பேர் முட்டிமோதுகிறார்கள். தொந்தரவு அதிகமாகிவிட்டது. இதைத் தலைவரிடமும் சொல்ல முடியவில்லை’’ என்று புலம்பியிருக்கிறார். இந்த விஷயம் வெளியே கசிய, ‘‘இவரோட துறையில வேலை ஆகணும்னா முதல்வரோட பிள்ளைகள் இவர்கிட்ட ஏன் போகப் போறாங்க... கதைவிடறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா!” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்!

“வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருப்பாரா!”
கவலையில் கமலாலயம்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபட முடியும். இந்தக் கட்டுப்பாட்டை விலக்கி, அனைத்து நாள்களிலும் கோயில்களில் வழிபட அனுமதியளிக்கக் கோரி, அக்டோபர் 7-ம் தேதி தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறது பா.ஜ.க. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணியைக் கேட்டு வாங்கியிருக்கிறார் அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இதில், கட்சியின் சீனியர்கள் பலருக்கு அதிருப்தியாம். ‘‘ஏற்கெனவே வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருக்காம கட்சி பேரைக் கெடுக்குறாரு. இதுல, ஒருங்கிணைப்புப் பணியை வேற அவருக்குக் கொடுத்திருக்கீங்க. கண்டன ஆர்ப்பாட்டத்துல ஏதாவது உளறிக்கொட்டி, அது நாளைக்கு நமக்கு எதிரா திரும்பிடப் போகுது’’ என்று கட்சித் தலைமையை எச்சரித்திருக்கிறார்கள் சீனியர்கள் சிலர். ஆனால், அறிவிப்பு வெளியான பிறகு எப்படி மாற்றுவது என்று தயங்கும் மாநிலக் கட்சித் தலைமையோ, ‘‘அன்னைக்கு ஹெச்.ராஜா ஏடாகூடமா பேசி, ஏதும் வம்பை வளர்த்துடக் கூடாது சாமி...’’ என்று வேண்டிக்கொண்டிருக்கிறதாம்!

ஆளுநருக்காகக் காத்திருக்கும் சட்டம்!

‘சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடைகள், மருந்துக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட பெரு அங்காடிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உட்காருவதற்கு நாற்காலி கொடுக்கப்பட வேண்டும்’ என்று கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டசபையில் 1947-ம் ஆண்டின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

உழைப்பாளிகளுக்கு வரப்பிரசாதமான இந்தச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதுதான் வேதனை. ஏனெனில், சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினாலோ, திருத்தினாலோ ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்துக்கு ஆளுநர் வி.என்.ரவி இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. அவர் கையெழுத்து போட்டதும், அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன் பிறகுதான் சட்டம் அமலுக்கு வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு