Published:Updated:

வேலுமணியின் பன்னீர் பாசம் முதல் அனிதாவின் பதவிக்கு ஆபத்து வரை! - கழுகார் அப்டேட்ஸ்

``மழை கொட்டுகிறது... செய்திகளை டெலிகிராமில் அனுப்பிவைக்கிறேன்’’ என்று சுருக்கமாகப் பேசிவிட்டு போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் டெலிகிராமில் வந்து விழுந்தன செய்திகள்

வேலுமணியின் பன்னீர் பாசம்...
அப்செட்டில் எடப்பாடி முகாம்!

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலா தரப்பினரை ஒதுக்கிவைத்ததில் கொங்கு மண்டல லாபி பெரிய அளவுக்கு வேலை பார்த்தது. தற்போது அ.தி.மு.க-வில் மீண்டும் சசிகலா பக்கமாக காற்று வீசத் தொடங்கிய நிலையில், இந்த முறை அதே கொங்கு மண்டலத்திலிருந்து பன்னீருக்கு ஆதரவு வரத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி பன்னீரிடம் காட்டும் பாசத்தைப் பார்த்து, அப்செட்டில் இருக்கிறது எடப்பாடி முகாம். சமீபத்தில் `நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளரும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர், பன்னீரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஓ.பி.எஸ் - வேலுமணி
ஓ.பி.எஸ் - வேலுமணி

இது போதாது என்று சில நாள்களுக்கு முன்பு ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவைக்கு வந்த பன்னீரை விமான நிலையம் சென்று வரவேற்றார் வேலுமணி. மேலும், பன்னீர் சிகிச்சையில் இருந்தபோதும் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார். இதையடுத்து, ``முன்னெல்லாம் கட்சி நிகழ்ச்சிகள்லயே பன்னீரைப் பெருசா வேலுமணி கண்டுக்க மாட்டார். இப்ப காட்டுற பாசத்தைப் பார்த்தா என்னமோ பெருசா திட்டம் வெச்சிருக்காங்க!” என்று கண்சிமிட்டுகிறார்கள் கோவை அ.தி.மு.க நிர்வாகிகள்!

டாக்டர் வெங்கடேஷுக்கு போஸ்டர்...
முகம்சுளித்த சசி உறவுகள்!

டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பு விழாவுக்கு, சசிகலாவுடன் அவரின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷும் வந்திருந்தார். அந்தச் சமயத்தில் வெங்கடேஷை வரவேற்று, தஞ்சாவூர் நகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

``சசிகலாவைக் கட்சியில சேர்த்தா, மன்னார்குடி குடும்பத்துக்காரங்க திரும்பவும் ஆதிக்கம் செலுத்துவாங்கன்னுதானே அ.தி.மு.க தலைவர்கள் பலரும் சசி பக்கம் வர்றதுக்கு யோசிக்குறாங்க... சசி கட்டுப்பாட்டுக்குள்ள கட்சி வர்றதுக்கு முன்னாடியே இப்படி பந்தா காட்டினா எப்படி?’’ என்று சசியின் உறவினர்கள் சிலரே முகம்சுளித்தார்கள்.

புறக்கணிக்கப்படும் இனிகோ...
காரணம் நேருவா?

திருச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷுக்கும் நேருவுக்குமான பனிப்போரில் சிக்கித் தவித்துவருகிறார் திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான இனிகோ இருதயராஜ். ‘‘அன்பில் மகேஷின் ஆதரவு எம்.எல்.ஏ என்பதால், நேரு தரப்பினர் திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கும் சரிவரத் தகவல் தெரிவிப்பதில்லை’’ என்று புலம்புகிறது இனிகோ தரப்பு. இந்த நிலையில்தான் சமீபத்தில் தனது தொகுதிப் பிரச்னைகளைச் சரிசெய்யக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பேசியிருக்கிறார் இனிகோ.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

ஆனால், அதிகாரிகள் அவரின் பேச்சை சட்டைகூட செய்யவில்லையாம். இதனால் கடுப்பான இனிகோ, ‘‘நானும் எம்.எல்.ஏ-தான்ய்யா... ஏன், நான் சொன்னா கேட்க மாட்டீங்களா? உங்களை எப்படி டீல் செய்யணும்னு எனக்குத் தெரியும்’’ என்று போனிலேயே கொந்தளித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகள் அதையும் பொருட்படுத்தவில்லையாம். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் நேரு என்பதால், `இனிகோவின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், நேருவின் கோபத்தைச் சம்பாதிக்கவேண்டியிருக்கும்’ என்பதாலேயே அதிகாரிகள் இனிகோவைப் புறக்கணிப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஒருபக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை... மறுபக்கம் அமலாக்கத்துறை...
அனிதா பதவிக்கு ஆபத்தா?

கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை திருச்செந்தூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இது போதாத காலம்போலிருக்கிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக மதுரையில் 4,90,29,040 ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக அனிதா, அவரின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர்மீது தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் அனிதா தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அனிதா ராதா கிருஷ்ணன்
அனிதா ராதா கிருஷ்ணன்

லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கே தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறையிலிருந்தும் அனிதா உள்ளிட்ட ஏழு பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டது. இதில், ஏழு பேருமே தனித்தனியாக மதுரையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து, ``அமலாக்கத்துறையிலிருந்து விரைவில் அனிதாவுக்கு எதிராக விசாரணை அறிக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம்” என்கிறது டெல்லி வட்டாரம். ஒருவேளை அனிதாமீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள்.

ஒரே விமானத்தில் பயணம்... அதகளப்படுத்திய வேலுமணி...
வாடிப்போன செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் சமீபத்தில் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்துள்ளனர். வேலுமணியை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த நிலையில், செந்தில் பாலாஜியும் அதே விமானத்தில் வருவதை கவனித்த வேலுமணி தரப்பு, போனில் தகவல் தெரிவித்து ஏராளமான ஆதரவாளர்களை கோவை விமான நிலையத்துக்கு வரவைத்து அதகளப்படுத்திவிட்டதாம். செந்தில் பாலாஜியை வரவேற்க பெரிய அளவில் கூட்டம் இல்லை என்பதால் வாடிய முகத்துடன் சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி.

நெமிலி... முதன்முறையாகக் கைப்பற்றிய தி.மு.க!

கடந்த அக்டோபர் 22-ம் தேதியே நடக்கவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அக்டோபர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி, திடீரென பெண்களுக்கு மாற்றப்பட்டதாக அ.தி.மு.க கவுன்சிலர் மனோகரன் தொடர்ந்த இந்த வழக்கில், ‘ஆண்களும் போட்டியிடலாம்’ என்று தேர்தல் ஆணையம் பதில் கொடுத்ததையடுத்து, வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்றம்.

மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சிக்கு செக்... எதிர்க்கட்சிக்கு ரிலாக்ஸ்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

நெமிலி ஒன்றியத்தில் தி.மு.க-வுக்கு 8 கவுன்சிலர்களும், பா.ம.க-வுக்கு 5 கவுன்சிலர்களும், அ.தி.மு.க-வுக்கு 4 கவுன்சிலர்களும், சுயேச்சையாக 2 கவுன்சிலர்களும் இருக்கும் நிலையில், ‘தோட்டத்தில்’ இருந்து வந்த உத்தரவையடுத்து, திடீரென தி.மு.க பக்கம் பல்டி அடித்துவிட்டார்கள் பா.ம.க கவுன்சிலர்கள். அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், தி.மு.க வேட்பாளர் வடிவேலுவைப் போட்டியின்றி தலைவராக்கினார்கள். இதற்குப் பிரதிபலனாக பா.ம.க-வைச் சேர்ந்த தீனதயாளன் தி.மு.க ஆதரவுடன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், நெமிலி ஒன்றியம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது கிடையாது. அ.தி.மு.க., பா.ம.க-தான் தலைவர் பதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தன. அந்த வரலாற்றை மாற்றி முதன்முறையாக தலைவர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆறே மாதங்களில் தொடங்கிய ஆட்டம்!’’
புலம்பும் அதிகாரிகள்...

அக்டோபர் 30-ம் தேதி... தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தலைமையில் நடந்த அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேடையில் அமைச்சரோடு, கலெக்டர், எஸ்.பி., எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் அமர்ந்திருந்த நிலையில், திமுக-வைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் பலரும் அமர்ந்திருக்கிறார்கள்.

அன்பில்  மகேஸ்  பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதனால் முக்கியத் துறைகளின் உயரதிகாரிகளுக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. ``அ.தி.மு.க ஆட்சியில அவங்க கட்சிக்காரங்க அடக்கி வாசிப்பாங்க. கட்சியில் பெரிய பதவியில இருந்தாலுமேகூட மேடைப் பக்கம் வரமட்டாங்க. ஆனா, ஆட்சிக்கு வந்த ஆறு மாசத்துலயே தி.மு.க-காரங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க. முதலமைச்சர் ஸ்டாலின் இதுக்கு முற்றுப்புள்ளிவெக்கணும்’’ என்று பொருமுகிறார்கள் அதிகாரிகள்.

சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ‘சர்வீஸ்’!

உணவுத்துறையில் டெண்டர்களை எடுத்துவரும் கடவுள் பெயர்கொண்ட ஒருவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நட்சத்திர விடுதி அருகே ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார். ``இங்கு வைத்துத்தான் சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ‘கவனிப்பு’கள் அரங்கேறுகின்றனவாம். வீக் எண்ட் நாள்களில் முக்கிய மூவரில் ஒருவர் இங்கு அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை’’ என்று கண்சிமிட்டுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில்!

நேருவுக்காகத் தவிக்கும் ஸ்டாலின் முதல் அதிமுக-வினருக்குப் பூங்குன்றன் அட்வைஸ் வரை கழுகார் அப்டேட்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு