Published:Updated:

திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி... கலக்கத்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

அமைச்சர் பெயரைச் சொல்லி வசூல்... | தற்கொலை செய்துகொண்ட கைதி... | திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி | கலக்கத்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | கழுகார் அப்டேட்ஸ்

திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி... கலக்கத்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | கழுகார் அப்டேட்ஸ்

அமைச்சர் பெயரைச் சொல்லி வசூல்... | தற்கொலை செய்துகொண்ட கைதி... | திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி | கலக்கத்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
தற்கொலை செய்துகொண்ட கைதி...
சிக்கலில் ஐ.பி.எஸ் அதிகாரி!

அண்மையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே 48 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவரைக் கைதுசெய்தனர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார். பின்னர் அம்பத்தூர் அயப்பாக்கத்திலிருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் 3-வது மாடியில் வைத்து ஷாஜி ஆண்டனியிடம் விசாரணை செய்தனர். அப்போது, போலீஸாரின் அஜாக்கிரதை காரணமாக ஷாஜி ஆண்டனி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், அந்தப் பிரிவில் உயர் பொறுப்பிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்குப் பெரும் சிக்கல் எழுந்திருக்கிறதாம். தற்போது ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருக்கும் ஷாஜி ஆண்டனி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி கைக்கு மாற்றப்படவிருக்கிறது என்று படபடக்கிறது காக்கி வட்டாரம்.

அமைச்சர் பெயரைச் சொல்லி வசூல்...
முட்டிக்கொண்ட தி.மு.க கவுன்சிலர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரபல கட்டுமான நிறுவனம் 13 ஏக்கரில் 850-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஒரு வீட்டுக்கு இவ்வளவு கமிஷன் என்று பேரம் பேசிய தி.மு.க பிரமுகர் ஒருவர், மொத்தமாக அந்த நிறுவனத்திடம் இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கியிருக்கிறாராம்.

ஊழல்
ஊழல்

ஆனால், அந்தக் குடியிருப்புகளைக் கட்ட அனுமதிப்பது தொடர்பாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியபோது, கமிஷன் பிரச்னையில் கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டதாம். அப்போதுதான் அந்த தி.மு.க பிரமுகர் ஸ்வீட் பாக்ஸ்களில் யாருக்கும் பங்கு கொடுக்கவில்லை என்பதே வெளியே கசிந்ததாம். கூடவே, ‘மாவட்ட அமைச்சரான அன்பானவர் பெயரைச் சொல்லித்தான் தி.மு.க பிரமுகர் அந்த நிறுவனத்திடம் டீலிங்கே பேசினார்’ என்றும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

“மக்கள் பிரதிநிதி நீங்களா... நாங்களா?”
ஆணையரை ரவுண்டு கட்டும் மேயர், து.மேயர்!

சென்னை மாநகராட்சியில், மேயர் - துணை மேயருக்கு இடையே நிலவிவந்த புகைச்சல் இப்போது ஆணையர் பக்கம் திரும்பியிருக்கிறது என்கிறார்கள். ஆணையர் ஆய்வுக்குச் செல்லும்போது மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லையாம். தான் மட்டுமே முதன்மையானவரிடம் ஸ்கோர் செய்ய வேண்டும் என்றே அவர் இப்படி நடந்துகொள்வதாக நினைக்கிறது மேயர் தரப்பு. “மக்கள் பிரதிநிதி நீங்களா... இல்லை நாங்களா?” என்று அவரிடம் எகிறிய மேயரும் துணை மேயரும், இது பற்றி மேல்மட்டத்துக்கும் புகார்களைப் பறக்கவிட்டிருக்கிறார்களாம். “இந்த ஒரு விஷயத்திலாவது ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தீங்களே...” என முணுமுணுக்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.

ஓ.பி.எஸ் கூடாரத்திலிருந்து தி.மு.க-வுக்குத் தூது...
ஸ்டன்ட் அடிக்கும் கோவை புள்ளி!

ஓ.பி.எஸ் அணியில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதிலும், துணிச்சலாக பதில் சொல்வதிலும் முன்னணியில் இருந்தார் கோவையின் வளமான புள்ளி. ஆனால், ஓ.பி.எஸ் அணியின் போக்கும் திசையும் சரியில்லை என்று அதிருப்தியானவர், தற்போது ஆளுங்கட்சிக்குத் தாவ முடிவெடுத்துவிட்டாராம். இதற்காக ஆளும்தரப்பில் தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

திமுக-வுக்குத் தாவும் அதிமுக புள்ளி... கலக்கத்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் | கழுகார் அப்டேட்ஸ்

அதற்குத் தோதாக, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து கருத்து சொன்ன அவர், ‘எடப்பாடி பழனிசாமியும், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களும்தான் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று வெடித்திருக்கிறார். ‘கட்சித்தாவல் என்று முடிவாகிவிட்டது. நுழையும்போதே நல்ல பதவியில் உட்கார்ந்துவிட வேண்டும்’ என்பதற்காகவே இந்த மாதிரி ஸ்டன்ட் அடிக்கிறார் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...
கலக்கத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு இப்போது சி.பி.ஐ வசம் இருக்கிறது. அந்த வழக்கில் அடிபட்டவர்கள், குண்டு பாய்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட எல்லோரையும் குற்றவாளிகளாகவும், மக்களைச் சுட்ட, துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான காவல்துறையினரையெல்லாம் சாட்சிகளாகவும் போட்டிருக்கிறது சி.பி.ஐ. ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையோ, தவறு செய்த அதிகாரிகளின் தலைகளை உருட்டாமல் ஓயாது என்கிறார்கள் காவல்துறையில்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

சம்பவத்தின்போது, தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி-யாக இருந்த கபில் குமார் சி சரத்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறையிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். விரைவில் நடவடிக்கை பாயும் என்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள்.

கோயில் நிலத்துக்கு முன்தேதியிட்டு பட்டா...
சொந்த மாவட்டத்திலேயே கோட்டைவிடும் அமைச்சர்!

சென்னை அம்பத்தூர் பகுதியிலிருக்கும் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வருகிறது. அந்த இடத்தை தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரும், அதே பகுதியைச் சேந்த கவுன்சிலர் ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்த இடத்தைத் தங்களுக்கு வேண்டப்பட்டவர் பெயர்களில் முன்தேதியிட்டு பட்டாவும் வாங்கியிருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவரும் உடந்தை.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களை மீட்டுவரும் அமைச்சர், தான் மா.செ-வாக இருக்கும் சொந்த மாவட்டத்திலேயே இப்படிக் கோயில் நிலத்தைக் கோட்டைவிடுகிறாரே என்று புலம்புகிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.