Published:Updated:

பன்னீருக்கு செக்; எடப்பாடிக்கு பாலாஜி கொடுத்த ஐடியா; ஆட்டம் போடும் அமைச்சரின் உறவினர்! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...

சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இனிகோ... ராஜேஷ்குமார்மீது கூட்டணிக்கட்சியினர் புகார்... பூண்டி கலைவாணன்மீது சக்கரபாணி வருத்தம்... ஆட்டம் போடும் புதுவை அமைச்சரின் உறவினர்... எடப்பாடிக்கு ஐடியா கொடுத்த பாலாஜி! - கழுகார் அப்டேட்ஸ்

பன்னீருக்கு செக்; எடப்பாடிக்கு பாலாஜி கொடுத்த ஐடியா; ஆட்டம் போடும் அமைச்சரின் உறவினர்! -கழுகார் அப்டேட்ஸ்

சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இனிகோ... ராஜேஷ்குமார்மீது கூட்டணிக்கட்சியினர் புகார்... பூண்டி கலைவாணன்மீது சக்கரபாணி வருத்தம்... ஆட்டம் போடும் புதுவை அமைச்சரின் உறவினர்... எடப்பாடிக்கு ஐடியா கொடுத்த பாலாஜி! - கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்...
தள்ளிப்போகும் தமிழக பட்ஜெட்
வரிவிதிப்பு அதிகமாகுமா?

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது. பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று தமிழக அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மேயர், நகராட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் என பிப்ரவரி மாதம் முழுமையாக ஓடிவிடும் என்பதால், வரும் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல்கள் முடிந்துவிட்டதால், இம்முறை பட்ஜெட் ‘கடுமை’யாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

``பெண்ணியச் செயற்பாட்டாளர்களுக்கு இடமில்லை!”
சர்ச்சையைக் கிளப்பிய மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம்...

தமிழ்நாடு மகளிர் ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து சமீபத்தில் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இதில் பெரும்பாலும் கட்சிக்காரர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெண்ணியச் செயற்பாட்டாளர்களோ, ``மகளிர் தொடர்பான பிரச்னைகள், விவாதங்கள் அறிந்தவர்களுக்குதான் இந்த ஆணையத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காத கட்சிக்காரர்களுக்கே அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் சார்ந்து செயல்படும் ஒரு செயற்பாட்டாளரைக்கூட இந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கவில்லை” என்று கொந்தளிக்கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தப் புகாரை எழுப்பியிருப்பதால், மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம் மறுபரிசீலனை செய்யப்படுமா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள்!

பன்னீருக்கு செக்...
எடப்பாடிக்கு ஐடியா கொடுத்த பாலாஜி!

கட்சித் தலைமையின் மீதான ராஜேந்திர பாலாஜியின் கோபம் சற்றே குறைந்திருக்கிறதாம். இதையடுத்து, சமீபத்தில் எடப்பாடியைத் தொடர்புகொண்ட ராஜேந்திர பாலாஜி, ``நான் அமைச்சரா இருக்கும்போதே என்னை மாவட்டச் செயலாளர் பதவியில இருந்து தூக்கிட்டு, விருதுநகர் மாவட்டத்தை ரெண்டா பிரிச்சுட்டாரு பன்னீர். இப்போ கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்குற வெம்பக்கோட்டை ரவிச்சந்திரன், கட்சியில எனக்கு எதிராகச் செயல்படுறாரு.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

பண மோசடி வழக்குல என்னை சிக்கவெச்ச முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜயநல்லதம்பியும், ரவிச்சந்திரனும் பன்னீரோட ஆதரவாளர்கள். அவங்க எனக்கு எதிராகச் செயல்படுறதா நெனைச்சுக்கிட்டு, விருதுநகர் மாவட்டத்துல கட்சியையே ஒண்ணும் இல்லாம செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பழையபடி விருதுநகர் மாவட்டத்தை ஒரே மாவட்டமாக்கி, என்னை மாவட்டச் செயலாளரா போடுங்க... இந்த மாவட்டத்துல உங்க கரத்தை வலுப்படுத்த எல்லா முயற்சியும் எடுக்குறேன். பன்னீர் ஆளுங்களுக்கு செக்வெச்ச மாதிரியும் இருக்கும். இனிமேல இங்க நீங்க சொல்லுறதுதான் நடக்கும்” என்று சொல்லியிருக்கிறார். பன்னீருக்கு செக் வைக்கும் விதமாக பாலாஜி பேசியதால், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றாராம் எடப்பாடி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“மத்திய பா.ஜ.க அமைச்சர் எனக்கு நெருக்கம்!”
ஆட்டம் போடும் புதுவை அமைச்சரின் உறவினர்...

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புத்தக்குடி கிராமத்தில், சவுடு மண் குவாரியை நடத்திவருகிறார் பிரபாகரன்.

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரியின் காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் தேவமணியின் மகன்தான் இந்த பிரபாகரன். இந்த குவாரியிலிருந்து எடுக்கப்படும் சவுடு மண், காரைக்கால் மாவட்ட பைபாஸ் சாலை விரிவாக்கத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு அப்படி மண் ஏற்றிச் சென்ற லாரிகளை அதிகாரிகள் சிலருடன் மறித்த புதுச்சேரி அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஏகத்துக்கும் பிரச்னை செய்திருக்கிறார். ஒருவழியாக நடந்து முடிந்த பஞ்சாயத்தில், பத்து லட்சம் ரூபாய் கைமாறிய பிறகே லாரிகளை விடுவித்தாராம் அமைச்சரின் உறவினர். தவிர, பா.ஜ.க மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு நெருக்கம் என்று கூறியே பலரிடமும் காரியம் சாதித்துவருகிறாராம் மனிதர்!

“உங்களை நம்பித்தானே என் ஆளுங்களைவிட்டேன்!”
பூண்டி கலைவாணன் மீது சக்கரபாணி வருத்தம்...

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சித் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் சக்கரபாணி நியமிக்கப்பட்டிருந்தார். இதையொட்டி தேர்தல் பணிகளுக்காக திண்டுக்கல்லிலிருந்து கட்சி ஆட்களை குடவாசலில் இறக்கியிருந்தார் சக்கரபாணி. தேர்தலுக்கு இரு நாள்களுக்கு முன்பு இவரின் ஆதரவாளர்களை, அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் குடவாசல் ராஜேந்திரன் தரப்பினர் தாக்கியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, ஏழு பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சக்கரபாணி
சக்கரபாணி

ஏற்கெனவே திருவாரூர் தி.மு.க மா.செ பூண்டி கலைவாணன், குடவாசல் ராஜேந்திரனுக்கு நெருக்கம் என்று முணுமுணுப்புகள் எழுந்திருக்கும் நிலையில், கலைவாணனிடம் வருத்தத்தை வெளிப்படுத்திய சக்கரபாணி, “உங்களை நம்பித்தானே என் ஆளுங்களை விட்டுட்டு வந்தேன்... இப்படி நடக்கவிடலாமா?” என்று சொன்னாராம். முதலமைச்சர் வரை இந்த விவகாரம் சென்றுள்ள நிலையில், மறைமுகத் தேர்தலுக்கு பிறகு இது பற்றி விசாரணை நடக்கும் என்கிறார்கள் திருவாரூர் உடன்பிறப்புகள்!

ராஜேஷ்குமார் மீது கூட்டணிக் கட்சியினர் புகார்
நாமக்கல் தி.மு.க களேபரம்...

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சீட் பங்கீடு, வேட்பாளர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணிக் கட்சியினருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்று கூறி தி.மு.க-வின் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான ராஜேஷ்குமார் மீது உள்ளூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்.

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

இந்தப் புகார்களை ‘திருமதி’ மூலம் ராஜேஷ்குமார் அமுக்கிவிட்டாலும், அவரது எதிர்க்கோஷ்டியினரான முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் மற்றும் ‘பார்’ இளங்கோவன் ஆகியோர் விடுவதாக இல்லையாம். இதைவைத்தே ராஜேஷ் குமாரின் மாவட்டச் செயலாளர் பொறுப்பைப் பறித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறது அவரது எதிர் கோஷ்டி!

சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இனிகோ?

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட விடுதி வார்டன் சகாயமேரி, சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவரைச் சந்தித்த திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றது ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

இந்த நிலையில், இனிகோ இருதயராஜிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து, “இதெல்லாம் தேவையா?” என்று கட்சித் தலைமையே இனிகோ மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism