தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, கடந்த வாரம் தென்கடைக்கோடி மாவட்டத்துக்கு பயணப்பட்டிருக்கிறார் சீனியர் அமைச்சர் ஒருவர். உப்பு மாவட்டத்திலிருந்து கடைக்கோடி மாவட்டத்துக்கு காரில் சென்றபோது, வழியில் தமிழ்க் கடவுளின் மனைவி பெயர்கொண்ட ஊரைச் சுற்றி மட்டும் கட்சிக்கொடிகள் கட்டப்படாமல் இருந்திருக்கின்றன.
அது குறித்து கட்சியினரிடம் சீனியர் கேட்க, ‘ரூல்ஸ்படி, சாலையின் ஓரத்தில் கொடிகளைக் கட்டக் கூடாது என்று டி.எஸ்.பி ரொம்பவும் கறாராக இருக்கிறார். அவரால்தான் கொடிகளைக் கட்ட முடியாமல் போய்விட்டது அண்ணாச்சி’ என்று போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஊர் வந்திறங்கியவர், பாதுகாப்புக்கு வந்திருந்த அந்த டி.எஸ்.பி-யை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். கூடவே, ‘எந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வேணும்... சொல்லு!’ என்று ‘சாமி’ படத்து வில்லன்போலக் கேட்டாராம். அமைச்சரின் கோபத்துக்கு ஆளான டி.எஸ்.பி விரைவில் தூக்கியடிக்கப்படுவார் என்று பேசித்திரிகிறார்கள் உடன்பிறப்புகள்.
`ஜில்’ மாவட்டத்தில், முக்கிய ஊரில் நகரப் புள்ளி ஏற்பாடு செய்திருந்த ஆளுங்கட்சியின் ஈராண்டு சாதனை விளக்கக் கூட்டத்துக்கு கடைசிவரை ஆளே வரவேயில்லையாம். உள்ளூர் அமைச்சர் பங்கேற்கும் கூட்டத்தில் 100 பேர்கூட இல்லையென்றால், மானம் கப்பலேறிவிடும் என்ற பயத்தில், 500 ரூபாய் ப்ளஸ் ஒரு குவார்ட்டர் எனப் பேரம் பேசி, கிடைத்தவர்களையெல்லாம் லாரியில் ஏற்றி மேடையின் முன்பு அமரவைத்திருக்கிறார்கள், நகரப் புள்ளியின் ஆட்கள். அமைச்சரவை மாற்றத்தில் பெயர் அடிப்பட்டதால், ஈராண்டு சாதனைகளை சீரியஸாகப் பட்டியல் போட்டு தொண்டை கிழிய அமைச்சர் முழங்கிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் பீடிகளைக் கொளுத்தியிருக்கின்றனர். வரும்போதே போதையில் வந்த அவர்கள் மேடைக்கு அருகில் நின்றபடி, ‘தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான்’ என்று லூட்டி அடித்திருக்கிறார்கள். கடுப்பான நகரப் புள்ளி, ‘ஆளுக்கு 500 ப்ளஸ் ஒரு குவார்ட்டர் தரச் சொல்லியிருந்தேன். ஆனா, உங்களுக்கு எதுவும் கிடையாது’ என அவர்களை விரட்டியடித்தாராம். விடாக்கண்டன்களான மதுப்பிரியர்களோ, ஆளுக்கு ஒரு குவார்ட்டரை வாங்கிக்கொண்டு, ‘சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி...’ என்று தொடர்ந்து பாடியபடியேதான் அங்கிருந்து போயிருக்கிறார்கள்.
ஆடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர், சமீபத்தில் பூட்டு மாவட்டத்திலிருக்கும் பிரசித்திபெற்ற மலைக்கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காகச் சென்றிருக்கிறார். மலைக்கோயிலில் இரவு 8:45 மணிக்கு நடந்த ராக்கால பூஜையில் கலந்துகொள்வதற்காக ரோப் கார் மூலம் சென்றவர், கோயில் வளாகத்தில் நடந்து சென்றபோது நிலைதடுமாறிவிட்டார். கீழே விழாமல் சமாளித்து நின்றவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை... அந்த இடத்திலேயே சுமார் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடியபடி நின்றுவிட்டார். உடன்வந்த அதிகாரிகளும் காவலர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமாக அவரைச் சுற்றி நின்றனர். பிறகு, ``ஒன்றுமில்லை’’ எனக் கூறி தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றார் அமைச்சர். சில மாதங்களுக்கு முன்பு அவர் இதே கோயிலுக்கு வந்தபோது மின்சாரம் தடைப்பட்டு, ரோப் கார் அந்தரத்தில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, ‘அமைச்சருக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் தடங்கல் ஏற்படுகிறது’ எனப் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுதாக ஓராண்டு இருந்தாலும், தொழில் மாவட்ட மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிடுவதென இப்போதே மல்லுக்கட்டு ஆரம்பித்துவிட்டதாம்.
அந்த மாவட்டத்திலுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்று கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பிருப்பதால், எஞ்சியிருக்கும் ஒரு தொகுதியை எப்படியாவது பிடிக்க வேண்டுமென்று சிட்டிங் புள்ளிக்கும், மய்யத்திலிருந்து வந்தவருக்கும் கடுமையான போட்டி நடக்கிறதாம். எங்கே நம்மை அவர் முந்திவிடுவாரோ என்று ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி மேலிடத்துக்குப் புகார்களைப் பறக்கவிடுகிறார்களாம். இப்போதைக்கு சிட்டிங் எம்.பி-யை மய்யமானவர் ஓவர்டேக் செய்து போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை, தேர்தல் வேலைக்காக ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்தார். இந்த நேரத்தில் தன்னைச் சந்தித்த தமிழக பா.ஜ.க-வினரிடம், ‘நான் கர்நாடகத் தேர்தல் பணியில் இருந்தாலும், என் மனம் முழுக்க தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி தமிழ்நாட்டில் பாதயாத்திரை தொடங்கலாம் என யோசிக்கிறேன். பூத் அளவில் நாம் என்னவாக இருக்கிறோம்... உறுப்பினர் சேர்க்கை நிலவரம் என்ன?’ என்றெல்லாம் விசாரித்தாராம். ‘இதையெல்லாம் பழைய சிவாஜி படத்திலேயே பார்த்துவிட்டோம். கருணாநிதிதான் ஊட்டி மலர்க்கட்சி திறப்புவிழாவில் இருந்துகொண்டு, `பனிபொழியும் ஊட்டியில் நானிருந்தாலும், என் உள்ளமெல்லாம் வறண்ட ராமநாதபுரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது’ என்று பேசுவார். இன்னும் அதே மாதிரி இவரும் உருட்டிக்கொண்டிருக்கிறாரே?’ என்று கிண்டலடித்தார்களாம் தமிழக நிர்வாகிகள்.