Published:Updated:

ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர் முதல் கமல்ஹாசனின் தேர்தல் கணக்கு வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

“நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” | மதுரை மேயரை எச்சரித்த நேரு! | மரத்தை வெட்டு... கட்டிங்கை நீட்டு... | புலம்பும் தாராபுரம் தி.மு.க! | டெல்லியில் ஒரு கால்... கோவையில் ஒரு கால்... | கழுகார் அப்டேட்ஸ்!

ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர் முதல் கமல்ஹாசனின் தேர்தல் கணக்கு வரை... கழுகார் அப்டேட்ஸ்!

“நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” | மதுரை மேயரை எச்சரித்த நேரு! | மரத்தை வெட்டு... கட்டிங்கை நீட்டு... | புலம்பும் தாராபுரம் தி.மு.க! | டெல்லியில் ஒரு கால்... கோவையில் ஒரு கால்... | கழுகார் அப்டேட்ஸ்!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
``நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?”
சுருட்டலுக்குக் காய்நகர்த்தும் வாரிசு!

நிலச்சரிவு அபாயமுள்ள நீலகிரி மாவட்டத்தில், பெரிய அளவிலான கட்டுமானங்களை எழுப்புவதற்குத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இதனால், அங்குள்ள நகராட்சிகளில் குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான அனுமதி வழங்கும் அதிகாரம்கூட மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுவிட்டது. பறிபோன இந்த ‘அட்சய பாத்திரத்தை’ மீட்பதற்காகத் தீவிரமாகியிருக்கிறார்கள் சில ஆளுங்கட்சிப் புள்ளிகள். குறிப்பாக, நான்கெழுத்து நகராட்சியில் கோலோச்சும் வாரிசுப் பிரமுகர், அதிகார மீட்புக்காக தலைமைச் செயலகம் வரை முட்டி மோதிவருகிறாராம். “இப்போது அவர்கள் இருக்கிற பசிக்கு, அதிகாரம் மட்டும் கைமாறினால் நீலகிரி மலையையே மடுவாக்கிவிடுவார்கள்” என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வட்டம்.

நீலகிரி
நீலகிரி

“கட்சிக்காக உழைக்கிறோம்... நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” என சீனியர் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர்களிடமே புலம்பித்தீர்த்திருக்கிறார் வாரிசு!

“கட்சி நிகழ்ச்சிக்கு வரக் கூடாது...”
ரெட் கார்டு வாங்கிய டீல் பிரமுகர்!

பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்வரிசையில் நின்று போஸ் கொடுக்கும் டீல் பிரமுகரை, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா கலந்துகொண்ட கோவை நிகழ்ச்சியில் காணவில்லை. பண மோசடி, கட்சி நிர்வாகிகள்மீது சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்புவது என அவர்மீது குவிந்த பல்வேறு புகார்கள் தொடர்பாக கமலாலயத்தில் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.

ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர் முதல் கமல்ஹாசனின் தேர்தல் கணக்கு வரை... கழுகார் அப்டேட்ஸ்!

அந்த விசாரணை முடியும் வரை கட்சி நிகழ்ச்சிகளில், குறிப்பாக டெல்லி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தலையே காட்டக் கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார்களாம். கூடுதல் சோகம் என்னவென்றால், இந்த ‘ரெட் கார்டு’ விஷயம் மாநிலத் தலைமை மூலமே சொல்லி அனுப்பப்பட்டதுதான்.

“மாத்திக்கலைன்னா.. மாற்றப்படுவீங்க...”
மதுரை மேயரை எச்சரித்த நேரு!

“உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மாற்றப்படுவீர்கள்” என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்ததுதான் மதுரை தி.மு.க-வில் பேசுபொருளாகியிருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலில் சமீபத்தில் மதுரைக்கு வந்த கே.என்.நேரு, தமிழ்நாடு ஹோட்டலில் வைத்து அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி, மேயர் இந்திராணி, தி.மு.க கவுன்சிலர்கள் என அனைவரிடமும் பேசியிருக்கிறார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அனைத்து கவுன்சிலர்களும் இந்திராணி மீதும், அவர் கணவர் மீதும் கடுமையான புகார்களை அடுக்கியிருக்கிறார்கள். அதற்கு மேயரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லையாம். பஞ்சாயத்தை முடிக்கும்போது, “அமைச்சர் பி.டி.ஆர் பேச்சைக் கேளுங்கள். அதோடு அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் பேச்சுக்கும் காது கொடுங்கள். மீண்டும் புகார் வந்தால் நிச்சயம் மாற்றப்படுவீர்கள்” என்று கடுமையாகவே எச்சரித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார் நேரு.

மரத்தை வெட்டு... கட்டிங்கை நீட்டு...
அடுத்தடுத்த சர்ச்சையில் கரூர் தி.மு.க!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுக்குச் சொந்தமான 377 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுப்பணித்துறை குளத்தில் மரங்களை வெட்ட ஏலம் எடுத்திருந்தார் தி.மு.க இளைஞரணிப் பிரமுகர் ஒருவர். 92,000 ரூபாய்க்கு மரங்களை ஏலம் எடுத்தவர், அதை 26 லட்சம் ரூபாய்க்குத் தனியாக ஏலம்விட்டு கொள்ளை லாபம் பார்த்தது சமீபத்தில் சர்ச்சையானது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இது சம்பந்தமான ஆடியோ ஒன்று வெளியாகி விவகாரம் பெரிதாகியிருப்பதால், நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் படியளந்திருக்கிறாராம் இளைஞரணிப் பிரமுகர். அந்த எம்.எல்.ஏ., ‘மாசற்ற மாணிக்கமா... இல்லையா?’ என்பது சீக்கிரமே தெரிந்துவிடும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று கவனிப்பவர்கள்.

“நாங்க வீதியிலதான் நிக்கிறோம்...”
புலம்பும் தாராபுரம் தி.மு.க!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பெரும்பாலான கடைகளை அ.தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர்தான் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். நகராட்சியிடம் குறைந்த மாத வாடகைக்கு எடுத்த கடைகளை நாளொன்றுக்கு 800 முதல் 1,000 ரூபாய் வரை உள்வாடகைக்குவிட்டுப் பணத்தைக் குவிக்கிறாரே என்று கடுப்பில் இருந்தார்கள் உள்ளூர் தி.மு.க-வினர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததுடன் நகராட்சியையும் கைப்பற்றியதால், கடைகளை மீட்டுவிடலாம் என்று முயன்றிருக்கிறார்கள் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர். ஆனால், கடைக் கதவில் மோதிய பந்துபோலத் திரும்பியிருக்கிறார்கள் அந்த கவுன்சிலர்கள். விசாரித்தால், “நாள்தோறும் வசூலாகும் பணத்தில், ஏரியா அமைச்சர் ஒருவருக்கும், நகராட்சித் தலைவர் தரப்புக்கும் மாதம்தோறும் ‘கட்டிங்’ சென்றுவிடுகிறது. சொந்தக் கட்சிக்காரனின் பாசமா... எதிர்க்கட்சிக்காரன் பணமா என்றால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பணத்தின் பக்கம்தான் சாய்கிறார்கள். நாங்கள் வழக்கம்போல வீதியில் நிற்கிறோம்” என்று புலம்புகிறார்கள் தாராபுரம் தி.மு.க-வினர்.

டெல்லியில் ஒரு கால்... கோவையில் ஒரு கால்...
கமல்ஹாசனின் தேர்தல் கணக்கு!

2021 சட்டசபைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தவர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். தேர்தலில் தோல்வியடைந்த பிறகும்கூட அவரின் கோவைப் பாசம் குறையவில்லை. சினிமா, `பிக் பாஸ்’ பரபரப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவை தெற்கு தொகுதிக்கு விசிட் அடித்துவருகிறார் கமல்.

ரெட் கார்டு வாங்கிய பாஜக பிரமுகர் முதல் கமல்ஹாசனின் தேர்தல் கணக்கு வரை... கழுகார் அப்டேட்ஸ்!

சமீபத்தில், ‘நம்மவரின் கோவை தெற்குத் தொகுதி’ என்ற பெயரில் பொதுக்கூட்டத்தையும் மக்கள் நீதி மய்யம் நடத்தி முடித்திருக்கிறது. “2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – தி.மு.க - ம.நீ.ம கூட்டணி அமையப் போகிறது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கப்போகிறார் கமல். அதற்கான வெள்ளோட்டம்தான் டெல்லி நடைப்பயண பங்கேற்பும், கோவை பொதுக்கூட்டமும்” என்கிறார்கள் அவரின் கட்சியைச் சார்ந்தவர்கள்.