Published:Updated:

மாப்பிள்ளை சீர்வரிசை முதல் திமுக அமைச்சருக்கு சால்வை அணிவித்த பாஜக பிரமுகர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

“செய்திகளை மெயிலில் அனுப்பிவைக்கிறேன்’’ என்று கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ். சற்று நேரத்தில் இன்பாக்ஸில் ரகளையாக வந்து விழுந்தன செய்திகள்.

மாப்பிள்ளைக்கு சீர்வரிசை!
வாரியத்துக்குப் போட்டி போடும் நிர்வாகிகள்...

கொங்கு மண்டலப் பிரமுகர் ஒருவர் சமீபத்தில் மேலிடத்து மாப்பிள்ளை வீட்டுக்குச் சீர்வரிசையோடு சென்றாராம். மாப்பிளைக்குக் கொடுத்த சீதனத்துக்குப் பலனாக, கேபிள் துறையில் பெரிய பொறுப்பொன்று அந்தப் பிரமுகருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ரூட்டை மோப்பம் பிடித்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், இப்போது மாப்பிள்ளையைச் சந்திக்க சீதனத்தோடு வரிசையில் நிற்கிறார்களாம். சீர்வரிசை சரியாக இருந்தால் வாரியம் உறுதி என்று மாப்பிள்ளை தரப்பும் உறுதியளிப்பதால், கட்சி நிர்வாகிகள் சிலர் சீர்வரிசையோடு காத்திருக்கிறார்கள்.

வாரிக்கொடுத்தாதான் வாரியம்னுட்டாங்க!

வைத்திலிங்கத்தின் புறக்கணிப்பு!

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லையாம். மாவட்டவாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றபோது, ஆலோசனைக் கூட்டத்தையும் வைத்திலிங்கம் நடத்தவில்லை என்கிறார்கள். சென்னையிலேயே முகாமிட்டிருந்தவர், சமீபத்தில் சொந்த ஊரான ஒரத்தநாட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறார். இதையறிந்த அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அப்போது வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, `அப்பாவை இப்ப பார்க்க முடியாது. எதுவாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க’ என்றிருக்கிறார். `மாவட்டச் செயலாளரிடம்தான் பேசுவோம்’ என்று நிர்வாகிகள் சொன்னதும், சந்திக்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பிவிட்டாராம் பிரபு. இதில் அதிருப்தியடைந்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைச் சந்தித்துப் புலம்பியிருக்கிறார்கள். `நிர்வாகிகளை இப்படி புறக்கணித்தால், பலரும் கட்சியைவிட்டு வெளியேறிவிடுவார்கள்’ என்று அவர்கள் கொதிக்கும் விவகாரம்தான் தஞ்சை அ.தி.மு.க-வில் பற்றியெரிகிறது.

வைத்திக்கு வைத்தியம் பாக்கணும்போல!

ஆட்சியரை அசைத்துப் பார்க்கும் அதிகாரி!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விக்கிரவாண்டி தாலுகாவில் கிராம உதவியாளர்கள் பணிக்கு ஆட்களை நியமித்தார்கள். இந்த நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது தெரியவந்து, நியமனங்களை ரத்துசெய்ய முடிவாகியிருக்கிறதாம். இந்த நியமனங்களில் பல லட்சங்களைச் சுருட்டிய ஒரு வருவாய்த்துறை அதிகாரியை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராக மறுக்கிறாராம்.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி

அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பைக் காட்டி மாவட்ட ஆட்சியர் தரப்பையே அந்த அதிகாரி அசைத்துப்பார்ப்பதால், வேறு வழியில்லாமல் கோட்டைக்குப் புகாரை ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள். கோட்டையில் நடந்த விசாரணையில், கடந்த ஆட்சியில் மாவட்டத்தின் முக்கிய ஆளும்புள்ளிக்கு நெருக்கமானவர் இவர் என்பதால், ஆளும்புள்ளியையும் சேர்த்தே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகள் ஆரம்பித்திருக்கின்றன.

சீவி சிங்காரிச்சி விசாரணையை இப்பதான் ஆரம்பிக்கறாங்கன்னு சொல்லுங்க!

எங்கே செல்வார் நரசிம்மன்?

திருத்தணியில் கடந்தமுறை எம்.எல்.ஏ-வாக இருந்த நரசிம்மனைப் புறக்கணித்துவிட்டு, அரக்கோணம் முன்னாள் எம்.பி அரிக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருத்தணியில் போட்டியிட அ.தி.மு.க தலைமை வாய்ப்பு அளித்தது. சீட் கிடைக்காத விரக்தியில் அரிக்கு எதிராக நரசிம்மன் உள்ளடி வேலை பார்த்ததாகக் கூறப்படுகிறது.

நரசிம்மன்
நரசிம்மன்

தேர்தலில் தோல்வியடைந்த அரி, தன் தோல்விக்கு நரசிம்மனின் சூழ்ச்சிதான் காரணம் என கட்சித் தலைமையிடம் புகார் அளித்திருக்கிறார். இதையொட்டித்தான் நரசிம்மனைக் கட்சியிலிருந்து அ.தி.மு.க நீக்கியிருக்கிறது. இதையடுத்து, நரசிம்மன் தி.மு.க-வில் இணைவார் என்று அவரின் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், அவர் சசிகலாவைச் சந்திக்கவிருப்பதாக மற்றொரு தரப்பினர் இப்போது கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இக்கரைக்கு எக்கரைப் பசை?!

மாநிலங்களவை எதிர்பார்க்கும் ஞானசேகரன்!

வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் மற்றும் த.மா.க கட்சிகளின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஞானசேகரன். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, லைம் லைட்டிலிருந்து காணாமல் போனவர், அ.தி.மு.க-வில் ஒரு ரவுண்ட் வந்து இப்போது தி.மு.க-வில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

ஞானசேகரன்
ஞானசேகரன்

2021 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியை அவர் கேட்டிருந்த நிலையில், தி.மு.க தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இந்தநிலையில்தான், மாநிலங்களவை சீட் கேட்டு அறிவாலயத்தில் முட்டிமோதுகிறாராம் ஞானசேகரன். ஆனால், ‘இருக்கிறவங்களுக்கே இடமில்லை... இவருக்கு எங்கே போறது?’ என்று அலுத்துக்கொள்கிறதாம் அறிவாலயம்.

வடை போச்சே!

சிரிப்புக்கு அர்த்தம் என்ன?

பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரும், அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்தப் பதவி வேறொருவருக்கு வழங்கப்பட்டதால், நயினார் நாகேந்திரன் அப்செட் என்கிறார்கள். இந்த வருத்தத்தில், சமீபத்தில் நடைபெற்ற நெல்லை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லையாம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இது ஒருபுறமிருக்க, நெல்லையிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பங்கேற்றார். அப்போது அங்கு சென்ற நயினார், அமைச்சருக்கு சால்வை அணிவித்ததுடன், `என் தொகுதியிலுள்ள பள்ளமடை கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் வைத்தார். சால்வையைக் கழற்றியபடியே அங்கிருந்த செய்தியாளர்களிடம், `இந்த சால்வைக்கு அர்த்தத்தைப் புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க’ என்று அனிதா சிரித்தபடி சொல்லவும், நயினார் நாகேந்திரன் உட்பட பா.ஜ.க-வினர் பலரும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.இந்தச் சிரிப்புக்குள் ஏதும் வெடி இருக்கிறதோ என்னவோ...

சால்வை விடும் தூது!

இப்படிப் பண்ணினா கட்சி எப்படி வளரும்?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில், சசிகலா விவகாரம், 10.5 இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ‘அ.தி.மு.க சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

அன்வர் ராஜா.
அன்வர் ராஜா.
விகடன்

இதனால், அதிருப்தி அடைந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், `அன்வர் ராஜா கட்சிக்கு விரோதமா பேட்டி கொடுத்தா அவரை நீக்கணும். அதை விட்டுட்டு யாருமே கலந்துக்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி... தி.மு.க-வுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படிப் பண்ணினா, கட்சி எப்படி வளரும்?’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள். குறிப்பாக, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் அ.தி.மு.க நிர்வாகிகள்.

சும்மா ஒரு வெளம்பரம் போச்சே மொமன்ட்!

அதிருப்தியில் அ.தி.மு.க கலைப்பிரிவு!

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் சரி... இப்போதும் சரி... அ.தி.மு.க-விலிருக்கும் திரைப்பட நடிகர்களைக் கட்சி சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறது அ.தி.மு.க கலைப்பிரிவு. `நடிகர், நடிகைகளை மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, பொருளாதாரரீதியாகவும் கலைப்பிரிவுக்குள் இருப்பவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அம்மா உயிரோடு இருந்தவரையில், கட்சியில் நடிகர்களுக்கு உரிய மரியாதை தந்தார். மாநிலங்களவை சீட்கூட தரப்பட்டது. ஆனால், தற்போது கட்சியில் நடிகர்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை’ என்று கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புலம்புகிறார்கள். இதையடுத்து நடிகர், நடிகையர் பலரும் எதிரணிக்கு முகாம் மாறாலாமா என்று தேதியும் குறித்து வருகிறார்களாம்.

கட் பண்ணா அப்படியே அறிவாலயம் சீன்!

`பஞ்சாயத்தைக் கலைத்த எடப்பாடி முதல் முன்னுதாரணமான ஸ்டாலின் வரை!' கழுகார் அப்டேட்ஸ்
அடுத்த கட்டுரைக்கு