Published:Updated:

பதறும் முன்னாள் பால் வளம் முதல் முதல்வரின் திடீர் சமரசப் பின்னணி வரை - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

‘நான் சிவனேன்னுதானேய்யா இருந்தேன்...’ | விசாரணைக்குழு அமைக்கும் பா.ஜ.க மேலிடம்! | தவியாய்த் தவிக்கும் ஆட்சியர்கள்! | தி.மு.க-வில் அடுத்த அதிகார மாற்றம்... | வியூகமா... பின்வாங்கலா? | கழுகார் அப்டேட்ஸ்

பதறும் முன்னாள் பால் வளம் முதல் முதல்வரின் திடீர் சமரசப் பின்னணி வரை - கழுகார் அப்டேட்ஸ்

‘நான் சிவனேன்னுதானேய்யா இருந்தேன்...’ | விசாரணைக்குழு அமைக்கும் பா.ஜ.க மேலிடம்! | தவியாய்த் தவிக்கும் ஆட்சியர்கள்! | தி.மு.க-வில் அடுத்த அதிகார மாற்றம்... | வியூகமா... பின்வாங்கலா? | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
‘நான் சிவனேன்னுதானேய்யா இருந்தேன்...’
பதறும் முன்னாள் பால் வளம்!

கடந்த ஆட்சியில் அதிரடியாக, அடாவடியாகப் பேசியவர்களில் முக்கியமானவர் முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஆட்சி மாறியதும், ‘முன்னாடி நான் பேசுனதெல்லாம் தப்புதானுங்கோ’ என்று அவர் பம்மினாலும்கூட, விடாது கருப்பாகப் பாய்ந்தன வழக்குகள். அவற்றில், ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார் கே.டி.ஆர். பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, திடீரென வேகமெடுத்திருக்கிறது. ஜனவரி 9-ம் தேதி இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக 43 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

“நான் எந்த வம்பு தும்புக்கும் போகாம சிவனேன்னுதானேய்யா இருந்தேன்?” என்று ஆதரவாளர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் கே.டி.ஆர். விசாரித்தால், பால் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஆவின்மீது விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அதை திசைதிருப்பவே லைட்டை கே.டி.ஆர் பக்கம் திருப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். அரசுத் தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக, வழக்குக்கு வலு சேர்க்கும் ஆவணங்களை ஆவின் தரப்பு வேக வேகமாக கொடுத்திருக்கிறது. அதனால்தான் ஒன்றரை ஆண்டாகக் கிடப்பில் கிடந்த வழக்கில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கலாகியிருக்கிறதாம்.

மாஜி காக்கி மீது தொடரும் புகார்கள்...
விசாரணைக்குழு அமைக்கும் பா.ஜ.க மேலிடம்!

மக்களவைத் தேர்தலுக்கு நீண்டகாலம் இருந்தாலும், தமிழக பா.ஜ.க-வில் இப்போதே எம்.பி சீட்டுக்கான காய்நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இது குறித்துப் பேசுவதற்காக, கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்ட சீனியர்களான பொன்னார், சி.பி.ஆர்., ஹெச்.ராஜாவின் மருமகன் சூரிய நாராயணன், கல்யாணராமன் உள்ளிட்டோர் அப்படியே மாநிலத் தலைமை மீதான புகார்களையும் கொட்டித்தீர்த்துவிட்டார்களாம்.

கமலாலயம்
கமலாலயம்

இவர்களோடு கட்சியின் தேசிய நிர்வாகி ஒருவரும் தன்மீது மாஜி காக்கி தரப்பு அவதூறுகளைப் பரப்புவதாகப் புகாரை அடுக்கியிருக்கிறாராம். குற்றச்சாட்டுகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால், குழு ஒன்றை அமைத்து மாஜி காக்கியை விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி மேலிடம். தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாடு பா.ஜ.க-விலிருக்கும் மொத்த உட்கட்சிப்பூசல்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்படவிருப்பதாகவும் சொல்கிறார்கள்!

பணி நியமனத்தில் தலையிடும் உடன்பிறப்புகள்...
தவியாய்த் தவிக்கும் ஆட்சியர்கள்!

அல்வா, அருவி மாவட்டங்களில், கிராம உதவியாளர்கள், நியாயவிலைக்கடை ஊழியர்கள் நியமனத்தில், அநியாயத்துக்குத் தலையிடுகிறார்கள் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் என்று புலம்புகிறது அதிகாரிகள் வட்டாரம். ‘தாங்கள் கொடுக்கும் லிஸ்ட்டில் இருப்போருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலில் கட்சிக்காரர்களின் பெயரே இல்லையே?’ என மற்றொரு பக்கம் உடன்பிறப்புகள் புலம்புகிறார்களாம். கிராம உதவியாளர் (தலையாரி) பணிக்கு 10 லட்டுகளையும், நியாயவிலைக்கடை ஊழியர் பணிக்கு 6 லட்டுகளையும் வாங்கிக்கொண்டே இப்படி சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாம். ‘இவங்க சொல்லிட்டுப் போயிடுவாங்க. நாளைக்கு பிரச்னைனு வந்தா, நாமதான கோர்ட்டுல ஆஜராகணும்?’ என்ற பயத்தில் பணி வழங்க மறுக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.

“அவர்களை மாற்றியாவது, நம்ம லிஸ்ட்டுல இருக்கிறவங்களுக்கு வேலை வாங்கிக்கொடுத்துடணும்” என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறதாம் மாவட்டச் செயலாளர்கள் தரப்பு!

தி.மு.க-வில் அடுத்த அதிகார மாற்றம்...
சிக்கலில் ராமநாதபுரம் நிர்வாகி!

`தென் மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர் மாற்றம் இருக்கும்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை திருநெல்வேலிக்கும், திருநெல்வேலி மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை ராமநாதபுரத்துக்கும் மாற்றும் முடிவில் இருக்கிறதாம் மேலிடம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சமீபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த உரப்பொருள் விவகாரத்தில் ராமநாதபுரத்தில் ஆளுங்கட்சிப் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதைவைத்து பா.ஜ.க விளையாட்டு காட்டுவதால், கட்சியில் அவரது செயல்பாடே குறைந்துவிட்டதாம். இதனால்தான் ராஜகண்ணப்பனை அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராமநாதபுரத்துக்கே பொறுப்பு அமைச்சராக நியமிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இது கட்சியை வலுப்படுத்துமா, மேலும் பலவீனமாக்குமா என்பது அறிவாலயத்துக்கே வெளிச்சம்!

“ஆளுநரை விமர்சிக்க வேண்டாம்..!”
வியூகமா... பின்வாங்கலா?

சட்டப்பேரவையில் ஆளுநர் - ஆளும் அரசுக்கிடையே ஏற்பட்ட மோதல், சமூக வலைதளத்தில் மட்டுமின்றி, களத்திலும் எதிரொலித்தது. #GetOutRavi என்று ட்விட்டரில் டிரெண்ட் செய்தவர்கள், அதை போஸ்ட்டராகவும் ஒட்ட ஆரம்பித்தார்கள். இன்னொரு பக்கம், ஆளுநருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் புயல் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சூறாவளியாக வலுப்பெறும் என்று கருதப்பட்ட நிலையில், புயலுக்குப் பின் அமைதி என்று அடங்கிவிட்டது. “ஆளுநரை யாரும் விமர்சித்துப் பேசக் கூடாது. கொள்கைரீதியிலான பிரச்னையை அரசு பார்த்துக்கொள்ளும்” என முதலைமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழ்நாட்டில் பேசுபொருளாக பா.ஜ.க-வும், ராஜ் பவனுமே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறார் ஆளுநர். அந்த வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது” என்று தி.மு.க சீனியர்கள் சொன்ன யோசனையே இதற்குக் காரணமாம். அதேநேரத்தில், “அடிபட்ட புலியாக அடுத்த பாய்ச்சலுக்கு ஆளுநர் தரப்பு காத்திருக்கிறது... எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்றும் சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் நடத்துகிற, ஆளுநருக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்காமல் தார்மிக ஆதரவு தரப்போகிறதாம் தி.மு.க!