Published:Updated:

ஸ்டாலின் அழைப்புக்காகக் காத்திருக்கும் மாஜி; நீலகிரியின் அடுத்த கலெக்டர் யார்? | கழுகார் அப்டேட்ஸ்

‘‘மெயிலை செக் செய்யும்!’’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. மெயில் பாக்ஸைத் திறந்தால், சுடச்சுடத் தயாராக இருந்தன தகவல்கள்.

‘‘ஸ்டாலின் அழைத்தால்தான் வருவேன்!’’
அடம்பிடிக்கும் மாஜி!

கோவை தி.மு.க-வை வளர்த்தெடுக்கும் அசைன்மென்ட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் முன்னேற்றம் இல்லாததால், செந்தில் பாலாஜியின் கவனம் வேலுமணி மீது அதிருப்தியில் இருக்கும் மாஜிக்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. முன்னாள் அமைச்சரான செ.ம.வேலுசாமி, அ.தி.மு.க-வில் செந்தில் பாலாஜியின் வளர்ச்சிக்கு ஒருகாலத்தில் உதவினாராம். அந்தப் பாசத்தில் செந்தில் பாலாஜி, வேலுசாமிக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

வேலுசாமி மூலம் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோரை தி.மு.க பக்கம் இழுக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த காலத்தில் பல்வேறு பவர்ஃபுல் பதவிகளை வகித்த மாஜி ஒருவர், தன்னை மு.க.ஸ்டாலினோ அல்லது உதயநிதியோ அழைத்தால்தான் வருவேன் என்று அடம்பிடிக்கிறாராம்!

துரைமுருகன் முகத்தில் சிரிப்பு...
அப்செட்டில் எ.வ.வேலு!

தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறிவைத்துக் காய்நகர்த்தும் மூத்த அமைச்சர் எ.வ.வேலு குறித்து ஜூ.வி-யில் வெளியான செய்தி, முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. உடனே, வேலுவை அழைத்து விசாரித்தாராம் ஸ்டாலின். சமீபகாலமாக, பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் ஸ்டாலின் எதையும் நேரடியாகச் சொல்வதில்லை. அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் மூலமாகத்தான் இருவருக்குமான தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த மனஸ்தாபத்துக்கும் எ.வ.வேலுதான் காரணம் என்கிறார்கள். ‘ஸ்டாலினிடம் என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவைத்திருக்கிறார்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் துரைமுருகன். இது ஸ்டாலினின் காதுக்குச் செல்ல... ஜெகத்ரட்சகன் மூலமாகவே துரைமுருகனிடம் மீண்டும் அன்பைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர். இது துரைமுருகனை ஹேப்பி ஆக்கியிருக்கும் நிலையில், எ.வ.வேலு தரப்பு அப்செட் என்கிறார்கள்.

போட்டுக்கொடுத்த ஜெகன்...
அ.தி.மு.க-வைக் கோத்துவிட்ட பொன்முடி!

திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தமிழ்நாடு மீது புகார் வாசித்திருக்கிறார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. தமிழ்நாடு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ‘‘தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் கிருஷ்ணா நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவைக்காக ஐந்து டி.எம்.சி தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கான பராமரிப்பு செலவுத் தொகையான 333 கோடி ரூபாயை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழக அரசு செலுத்தவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.

பொன்முடி
பொன்முடி

இதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பொன்முடி, அங்கே எதுவும் பேசாவிட்டாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், ‘‘ஆந்திர முதல்வர் நமது அரசைக் குறை சொல்லவில்லை... தமிழகத்தில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க-வைத்தான் குறைகூறியிருக்கிறார்’’ என்று சொல்லியிருக்கிறார்!

நீலகிரிக்கு புது கலெக்டர் யார்?
காய்நகர்த்தும் ஆளும் புள்ளிகள்!

‘நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி ஆகிய இரண்டு பேர் கொண்ட அமர்வில் நடந்துவருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டராக இருக்கும் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அவர் யானைகள் வழித்தட நெறிப்படுத்துதல் குழுவில் இருப்பதால், அவரை இடமாற்றம் செய்ய தடைவிதித்திருந்தது நீதிமன்றம்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இந்தச் சூழலில்தான் தற்போது தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், ‘நிர்வாகக் காரணங்களுக்காக தேவைப்பட்டால் நீலகிரி கலெக்டரை பணியிட மாற்றம் செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

ஏற்கெனவே ‘நீலகிரி கலெக்டரை அரசியல் பிரமுகர்கள் சிலர் இடமாற்றம் செய்ய முயன்ற நிலையில், அவர் விடுப்பில் சென்றிருக்கிறார்; அவரை இடமாற்றம் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன’ என்று டிஜிட்டல் கழுகார் பகுதியில் எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான் தற்போது நீதிமன்றத்திலேயே அனுமதி பெறப்பட்ட சூழலில், இன்னசென்ட் திவ்யாவுக்கு பதிலாக ஏற்கெனவே நீலகிரியில் மாவட்ட வருவாய்த்துறையில் கோலோச்சியவரும், தற்போதைய ராணிப்பேட்டை கலெக்டருமான பாஸ்கர பாண்டியனை நீலகிரி கலெக்டராக நியமிக்க வனத்தை ஆளும் புள்ளிகள் சிலர் காய்நகர்த்திவருகிறார்கள். மதுரை புள்ளி ஒருவரும் தனக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை இங்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று புலம்புகிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

வைகோவுடன் வைத்தி!
கிசுகிசுக்கும் தி.மு.க நிர்வாகிகள்!

மறைந்த ம.தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் அஞ்சலிக் கூட்டம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நவம்பர் 13-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் கலந்துகொண்டதுதான் ஆச்சர்யம். நிகழ்ச்சியில் வைகோ, “ம.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் புகைபிடித்தல், மது அருந்துவது உள்ளிட்ட பழக்கங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று பேசியவர், வைத்திலிங்கத்திடமும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

வைகோ
வைகோ

இதையடுத்து, “எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருக்கும் வைத்தியிடம் அப்படியென்ன பேசியிருப்பார் வைகோ?” என்று கிசுகிசுக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்! ஆனால், வைத்தி தரப்பிலோ, “மறைந்த ரெண்டு பேருமே தஞ்சாவூர்க்காரங்கப்பா... கட்சி பேதமில்லாம அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்ததையும் அரசியல் ஆக்காதீங்க!” என்று பெருந்தன்மையாக அட்வைஸ் செய்திருக்கிறார்.

முதல்வர் வீட்டில் டோஸ்...
புலம்பிய மூத்த அமைச்சர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராவல் மண் விற்பனை கனஜோராக நடக்கிறது. குறிப்பாக, அந்த மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களுக்கும் வேண்டப்பட்டவர்களே முறைகேடாக கிராவல் மணல் அள்ளிவந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மணல் விவகாரத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் சில வரைமுறைகளைத் தயார் செய்துவரும் மேலிடத்தின் கவனத்துக்கு, இந்த விவகாரம் சென்றிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: கோட்டைவிட்ட அதிகாரிகள்... கோட்டையில் சூடான ஸ்டாலின்!

உடனே மாவட்டத்தின் இனிப்பு அமைச்சரை அழைத்த முதல்வர் வீட்டு வி.ஐ.பி., ‘‘சென்னையில ஒரு அரசாங்கமும், உங்க மாவட்டத்துல ஒரு அரசாங்மும் நடக்குதா... நாங்க முடிவெடுக்கும் முன்பே நீங்க ரெண்டு பேரும் அங்கே தொழில் நடத்துறீங்களா?’’ என்று எகிறியிருக்கிறார். இன்னோர் அமைச்சர் காதுக்கு இந்தத் தகவல் சென்றதும், ‘‘அவங்க நல்ல துறையைக் கொடுத்திருந்தா நான் ஏன் இந்தப் பொழப்பைப் பார்க்கணும்...’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரிக்காக அமலுக்கு வந்ததா சட்டத் திருத்தம்?

இதுவரை அமலாக்கத்துறை, சி.பி.ஐ இயக்குநர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் மூன்றாண்டுகள் என்றிருந்ததை, ஐந்தாண்டுகள் வரை நீட்டித்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகள் தொடர்ந்து பணியில் நீடிக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். தற்போது அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு ஏற்கெனவே ஒரு வருடம் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

சஞ்சய் குமார் மிஸ்ரா
சஞ்சய் குமார் மிஸ்ரா

அதன்படி வரும் நவம்பர் 17-ம் தேதியோடு அவர் ஓய்வுபெறவிருக்கிறார். இவரைத் தொடர்ந்து இந்தப் பதவியில் நீட்டிக்கச் செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்களாம். அடுத்த வருடம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், அதையும் மனதில்வைத்தே இந்தச் சட்டத் திருத்தம் நடந்திருக்கிறது என்கிறார்கள் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

முதல்வரின் கடலூர் விசிட்...
கொந்தளிக்கும் தி.மு.க-வினர்!

நவம்பர் 13-ம் தேதி, கடலூர் மாவட்டத்துக்கு வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்படியே குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட அரங்கமங்கலம் கிராமத்தில் இலவச மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அந்தப் பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், முதல்வர் வருகிறார் என்பதற்காக, முதல்நாள் இரவு கற்களையும் மண்ணையும் கொட்டி சகதியை மறைக்க முயன்றிருக்கிறது. இது ஒருபுறமிருக்க... “கடந்த முறை உதயநிதி வந்தபோதும் சரி... தற்போது முதல்வர் ஸ்டாலின் வந்தபோதும் சரி... அவர்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது சொந்தத் தொகுதியான குறிஞ்சிப்பாடிக்கே அழைத்துச் செல்கிறார். கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதி மட்டும்தான் இருக்கிறதா... வேறு எந்தத் தொகுதியிலும் மழை பாதிப்பு இல்லையா?” என்று வெளிப்படையாகவே கொந்தளித்தனர் தி.மு.க-வினர்.

திசைமாறும் வைகோ விவகாரம் முதல் வைத்திக்கு தண்ணிகாட்டிய பன்னீர் வரை கழுகார் அப்டேட்ஸ்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு