Published:Updated:

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு முதல் செயல் தலைவராகும் பிரேமலதா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்!

முந்திக்கொண்ட மா.செ! | நெருங்க முடியாமல் திணறும் காவல்துறை! | பா.ஜ.க புராணம் பாடும் பன்னீர் மகன்... | முட்டி மோதும் எடப்பாடி டீம்! | ஓ.பி.எஸ் இடத்தில் ஆர்.பி.உதயகுமார்! | ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! | கழுகார் அப்டேட்ஸ்

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு முதல் செயல் தலைவராகும் பிரேமலதா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

முந்திக்கொண்ட மா.செ! | நெருங்க முடியாமல் திணறும் காவல்துறை! | பா.ஜ.க புராணம் பாடும் பன்னீர் மகன்... | முட்டி மோதும் எடப்பாடி டீம்! | ஓ.பி.எஸ் இடத்தில் ஆர்.பி.உதயகுமார்! | ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
பயணத் திட்டத்தை அறிவித்த அமைச்சர்...
முந்திக்கொண்ட மா.செ!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய தென்மேற்குப் பருவமழையால், பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக ஒரு பயணத் திட்டம் வெளியிடப்பட்டது.

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு முதல் செயல் தலைவராகும் பிரேமலதா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உஷாரான ஆளுங்கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளரும், அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்பவருமான முபாரக், உடனடியாக வண்டியைக் கிளப்பி அரசு மருத்துவக் கல்லூரியில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர், மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம் என ஒரு வலம் வந்துவிட்டார். கூடவே, அங்கு எடுத்த போட்டோக்களையெல்லாம் கட்சிக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிட்டார். கடுப்பான அமைச்சர், வேறு வழியின்றி அதே இடங்களைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

கஞ்சா விற்பனையில் கரூர் தி.மு.க புள்ளி...
நெருங்க முடியாமல் திணறும் காவல்துறை!

`கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் இந்த ஆட்சியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன’ என்று காவல்துறை சொல்கிறது. ஆனால் கரூர் மாநகராட்சியில் மன்னர் பெயர்கொண்ட தி.மு.க கவுன்சிலர் தரப்பு, கஞ்சா மற்றும் கள்ள லாட்டரி விற்பனையில் தீவிரம்காட்டுகிறதாம். கரூர் மட்டுமின்றி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ராஜ்ஜியம் நடக்கிறது என்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியின்போது அந்தக் கட்சியில் உறுப்பினராக இருந்தபடியே தொழிலை நடத்திவந்தவர், தி.மு.க ஆட்சி அமைந்ததும் அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பாய்ச்ச போலீஸார் முனைந்ததைத் தெரிந்துகொண்டு, தி.மு.க-வுக்குத் தாவி, கவுன்சிலரும் ஆனார். அமைச்சர் ஒருவரது ஆசியும் இருப்பதால், வழக்குகள் இருந்தும் அவர் தரப்பை போலீஸாரால் நெருங்கக்கூட முடியவில்லையாம்.

பா.ஜ.க புராணம் பாடும் பன்னீர் மகன்...
அடுத்த மூவ் கமலாலயமா?

அ.தி.மு.க-வுக்கு இருந்த ஒரே மக்களவை எம்.பி-யான ஒ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து, ‘கோமாளிக் கூட்டத்துக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை’ என பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து முகநூலில் பதிவிட்டிருந்தார் ரவீந்திரநாத். பொதுவாகவே பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க ஆதரவுப் பதிவுகளைப் போடும் வழக்கமுள்ள ரவீந்திரநாத், இப்போது அதே வேலையாகவே இருக்கிறாராம்.

ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்
ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்

இதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், எம்.பி பதவிக்கு எவ்வித பாதிப்புமில்லை... பா.ஜ.க-வில் இணைந்தாலும்கூட எம்.பி பதவியில் தொடரலாம்’ என்று பா.ஜ.க தரப்பிலிருந்து சிலர் பேசுகிறார்களாம். “ ‘சேர்த்துவைத்ததை’க் காப்பாற்ற பா.ஜ.க-வின் ஆதரவு தேவை என்ற நிலை இருப்பதால், டெல்லியில் ஏதாவது பதவியை வாங்கிக்கொண்டு ரவீந்திரநாத் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் தேனி ர.ர-க்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
குமரியில் மா.செ பதவி...
முட்டி மோதும் எடப்பாடி டீம்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரான அசோகனைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் எடப்பாடி. காலியான அந்தப் பதவியைப் பிடிக்க முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசெல்வராஜன் எனப் பலரும் முட்டி மோதுகிறார்கள்.

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு முதல் செயல் தலைவராகும் பிரேமலதா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

யாருக்கு அந்தப் பதவியைக் கொடுத்தாலும், மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், மேற்கு மாவட்டச் செயலாளரான ஜான் தங்கத்திடமே, கிழக்கு மாவட்டப் பொறுப்பையும் தற்காலிகமாகக் கொடுத்துவிடலாமா என்கிற யோசனையில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

பலநாள் கனவு நிறைவேறியது...
ஓ.பி.எஸ் இடத்தில் ஆர்.பி.உதயகுமார்!

தன் அணியில் இருப்பவர்களுக்குச் சமூகரீதியாகப் பார்த்துப் பார்த்துப் பொறுப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கே.பி.முனுசாமிக்கு, கிட்டத்தட்ட அதே பொறுப்பு போன்ற துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்த எடப்பாடி, வைத்திலிங்கம் இருந்த இடத்தில் அதே சமூகத்தைச் சேர்ந்த நத்தம் விசுவநாதனை அமர்த்தியிருக்கிறார்.

ஆர்.பி. உதயகுமார் - அ.தி.மு.க
ஆர்.பி. உதயகுமார் - அ.தி.மு.க

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஏற்கெனவே இருந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு பதில், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் எடப்பாடி. உதயகுமாருக்கு, பன்னீர்செல்வம் இடத்தைப் பிடிப்பது பலநாள் கனவாக இருந்ததாம். எடப்பாடியால் தற்போது அது சாத்தியமாகியிருக்கிறது.

செப்டம்பரில் பொதுக்குழு...
செயல் தலைவராகும் பிரேமலதா!

தி.மு.க - அ.தி.மு.க-வைப்போலவே, தே.மு.தி.க-விலும் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜூலை 10 முதல் 24 வரை முதற்கட்டமாக கிளை, ஒன்றியப் பொறுப்புகளுக்குத் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, வட்டம், பகுதி, மாநகரம், மாவட்டம் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். ஆகஸ்ட் இறுதிக்குள்ளாக உட்கட்சித் தேர்தலை முடித்துவிட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவைக் கூட்ட முடிவெடுத்திருக்கிறார் பிரேமலதா.

பிரேமலதா
பிரேமலதா

உடல்நிலை பாதிப்படைந்து, விஜயகாந்த் நீண்ட ஓய்வில் இருப்பதால், பிரேமலதாவைச் செயல் தலைவராகவும், தற்போதைய இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ்-ஐ பொருளாளராகவும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை இளைஞரணிச் செயலாளராகவும் நியமிக்கும் திட்டமிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘எல்லாப் பதவிகளும் ஒரே குடும்பத்துக்கா?’ என்ற விமர்சனம் எழக் கூடாது என்பதால், விஜயகாந்தின் குடும்ப விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோருக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

ஜாக்டோ ஜியோ மாநாடு...
கலந்துகொள்வாரா முதல்வர்?

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்றும் என்று நம்பியிருந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், தி.மு.க அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை’ என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதிபடக் கூறிவிட்டார்.

இந்த நிலையில், ‘ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதற்கான மாநில மாநாடு’ ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கும் ஜாக்டோ ஜியோ, அதில் முதல்வரையே சிறப்பு அழைப்பாளராக அழைத்து, மேடையிலேயே அதற்கொரு தீர்வைப் பெற்றுவிடும் முடிவில் இருக்கிறார்கள். ஆனால், முதல்வர் இதில் கலந்துகொள்வாரா என்பதுதான் கேள்வியே!

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு...
ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

‘ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைத் தஞ்சாவூரில் கட்டியிருக்கிறார் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் காமராஜ். மருத்துவமனையைத் திறந்துவைக்குமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அவர்.

உறுதி கொடுத்த வெங்கைய நாயுடு முதல் செயல் தலைவராகும் பிரேமலதா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

வெங்கைய வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், சமீபத்தில் காமராஜ் வீடு, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், வெங்கைய நாயுடு மருத்துவமனைத் திறப்புவிழாவுக்கு வருவது சந்தேகம் எனச் சொல்லப்படுகிறது.