Published:Updated:

எடப்பாடியை திட்டி போஸ்டர் ஒட்டியது யார்? எம்.ஆர்.கே பன்னீரின் உறவுகளுக்கே பதவியா? -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

`மாயமான இருக்கைகள்... டோஸ் விட்ட முதல்வர்!' முதல் `வைத்தி ஏரியாவில் வார்டுகளை அள்ளிய அ.ம.மு.க!' வரை... கழுகார் அப்டேட்ஸ்

எடப்பாடியை திட்டி போஸ்டர் ஒட்டியது யார்? எம்.ஆர்.கே பன்னீரின் உறவுகளுக்கே பதவியா? -கழுகார் அப்டேட்ஸ்

`மாயமான இருக்கைகள்... டோஸ் விட்ட முதல்வர்!' முதல் `வைத்தி ஏரியாவில் வார்டுகளை அள்ளிய அ.ம.மு.க!' வரை... கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
மாயமான இருக்கைகள்...
டோஸ் விட்ட முதல்வர்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, பிப்ரவரி 24 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது சுமார் நான்கு மணி நேரம் முதல்வர் நின்றபடியே வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அன்றைய தினம் காலையில் நடந்த இந்த நிகழ்ச்சியை கவர் செய்வதற்காக பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்திரிகையாளர்களும் அமர்ந்தபடியே நிகழ்ச்சியை கவர் செய்தனர். மதிய இடைவேளைக்கு பிறகு இதே நிகழ்வு மீண்டும் மாலையில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் வந்துப் பார்த்தால் இருக்கைகளைக் காணோம். விசாரித்தபோதும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை... அறிவாலய ஊழியர் ஒருவரோ, “முதல்வர் நிக்குறப்ப நீங்க எல்லாம் உட்கார்ந்து இருக்குறதை பார்த்த கட்சி நிர்வாகிகள் சிலர்தான் வேணும்னே சேரை எல்லாம் தூக்கிட்டுப் போயிட்டாங்க...” என்று கிசுகிசுத்தார். இதைக் கேட்டு கடுப்பான நிருபர்கள், தங்களது கேமாராக்களை எல்லாம் ஆன் செய்துவைத்துவிட்டு, பக்கத்து கட்டடத்திலுள்ள படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்ததும், நிருபர்களின் இருக்கைகள் அகற்றப்பட்ட விவகாரம் முதல்வரின் கவனத்துக்குச் செல்ல... சூடானவர், சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து கடும் டோஸ் விட்டிருக்கிறார்.

“நம்மளை திட்டி போஸ்டர் ஓட்டுனது யாரு?”
எடப்பாடி விசாரணை...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு எடப்பாடிதான் காரணம் என்று டெல்டா ஏரியாவில் வைத்திலிங்கம் அண்ட் கோவினர் புலம்பிவருவது ஏற்கெனவே கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், சென்னையின் முக்கிய சாலைகளில் ‘அ.தி.மு.க-வுக்குத் தொடர் தோல்விகளைத் தந்துகொண்டிருக்கும் அ.தி.மு.க-வைப் பிடித்த தரித்திரமே... எடப்பாடி பழனிசாமியே... பதவி விலகு’ என்று செல்வக்குமார் என்பவர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுபற்றிய தகவல் எடப்பாடிக்கும் செல்லவே... ஆத்திரமடைந்தவர் “இதை செய்தது சசிகலாவின் ஆள்களா, இல்லை பன்னீரின் ஆள்களா? யார் அந்த செல்வக்குமார்?” என்று தீவிரமாக விசாரித்து வருகிறாராம்!

கூடலூர் கரும்புள்ளி யார்?
வனத்துறை அமைச்சருடன் மோதும் முபாரக்!

நீலகிரி மாவட்ட தி.மு.க., மாவட்டச் செயலாளர் முபாரக் அணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அணி என இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. குறிப்பாக அமைச்சர் ராமச்சந்திரனை கண்டாலே முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுகிறாராம் முபாரக்.

முபாரக் - சிவப்பு துண்டு அணிந்தவர்
முபாரக் - சிவப்பு துண்டு அணிந்தவர்

இந்த நிலையில்தான், சமீபத்தில் ஊட்டியில் எம்.பி ஆ.ராசா தலைமையில் நடந்த வெற்றி வேட்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய முபாரக், ராமச்சந்திரனை ‘வனத்துறை அமைச்சர்’ என்று சொல்லாமல் பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் வகித்த பதவியான ‘கதர் வாரியத்துறை அமைச்சர்’ என்றே பலமுறை குறிப்பிட்டார். இதைக் கேட்டு கடுப்பான ராமச்சந்திரன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொள்ள... ஆ.ராசாவும் தலையில் கையை வைத்து குனிந்துக்கொண்டார். அதோடு விடவில்லை முபாரக்... ‘‘கூடலூரில் தி.மு.க செல்வாக்கை இழந்ததற்குக் காரணம் சில கரும்புள்ளிகள்தான்’’ என்று கடுமையாகப் பேச... “அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்னை இருக்கலாம்... அதுக்காக இத்தனை பேரு முன்னாடி கட்சி நிகழ்ச்சியில இப்படியா பேசுறது?” என்று முகத்தை சுளித்தார்கள் கட்சி நிர்வாகிகள். இதுபற்றி அறிவாலயம் வரை புகார் சென்றிருக்கிறதாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘அமைச்சரின் உறவுகளுக்கே பதவியா?’’
சிதம்பரம், மயிலாடுதுறை குமுறல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சகோதரி மகன் செந்தில்குமார், சிதம்பரம் தி.மு.க நகரச்செயலாளராக இருக்கிறார். தற்போது அவர்தான் சிதம்பரம் நகராட்சியின் சேர்மன் பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ளதாக பேச்சு பலமாக அடிபடுகிறது. இன்னொரு பக்கம் அமைச்சரின் மற்றொரு சகோதரியின் கணவர் லிங்கராஜன், மயிலாடுதுறை நகராட்சியின் சேர்மன் பதவிக்கு காய் நகர்த்துகிறார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

இதையடுத்து, “அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினரே மொத்த பதவிகளையும் அடைந்துவிட்டால், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் அங்கீகாரம் பெற வேண்டாமா? இதென்ன மன்னர் ஆட்சியா?” என்று குமுறுகிறார்கள் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள்!

கரூரில் தோற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள்...
காரணம் செந்தில் பாலாஜியா?

கரூர் மாநகராட்சியில் தி.மு.க - காங்கிரஸ் சீட் பங்கீடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், எம்.பி ஜோதிமணிக்கும் இடையில் மோதல் வெடித்தது. இறுதியாக, கரூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட... அதில் 9-வது வார்டில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் ஸ்டீபன் பாபுவும், 12 மற்றும் 16 ஆகிய வார்டுகளில் ஜோதிமணியின் ஆதரவாளர்களும் போட்டியிட்டனர். இந்த நிலையில்தான், ஜோதிமணிக்கு செக் வைக்க நினைத்த செந்தில் பாலாஜி தரப்பு, 12 மற்றும் 16 ஆகிய வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தி.மு.க கொடியோடு சென்று வாக்குகள் சேகரித்த அவர்கள் இருவரும் வெற்றிபெற்றுவிட்டார்கள். ஜோதிமணியின் ஆதரவாளர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். இதனால், செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இடையிலிருந்த விரிசல் மேலும் அதிகமாகிவிட்டதாம். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியின் ஆதரவாளர்கள், “காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றதற்கு ஜோதிமணிதான் காரணம்” என்று வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா பிரசாரத்துக்குச் செல்லாதது ஏன்?
காரைக்குடி கலாட்டா...

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஹெச்.ராஜா வரவே இல்லை. இதற்கிடையே ஹெச்.ராஜா குடியிருக்கும் 5-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெறும் 56 வாக்குகள் மட்டுமே வாங்கியிருக்கிறார். இதையடுத்து, அதே வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் கணவர் ஹெச்.ராஜாவுக்கு வேண்டப்பட்டவர் என்பதாலேயே, அவர் பிரசாரத்துக்கு வரவில்லை என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஆனால் மற்றொரு தரப்பினரோ, “ஹெச்.ராஜா பிரசாரத்துக்கு வந்தா, கிடைக்குற ஓட்டும் கிடைக்காம போயிடும்... அவர் பிரசாரத்துக்கு வராம இருக்குறதே நல்லதுனு பா.ஜ.க வேட்பாளர்கள் பலரும் பரவலா பேசிக்கிட்டாங்க. இந்த விஷயம் ஹெச்.ராஜா காதுக்கும் போயிடுச்சு. அதனால்தான் அவர் பிரசாரத்துக்கு வரலை...” என்று கிசுகிசுக்கிறார்கள்!

வைத்தி ஏரியாவில் வார்டுகளை அள்ளிய அ.ம.மு.க!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டுகளில் 9 வார்டுகளை அள்ளியிருக்கிறது அ.ம.மு.க. இங்கு தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் அள்ளிவீசினார்கள். ஆனாலும், இறுதியில் வெற்றிபெற்றுவிட்டது அ.ம.மு.க. இந்த தோல்வியால் தி.மு.க ஒருபக்கம் வருத்தத்தில் இருந்தாலும், அ.தி.மு.க-வோ, “வைத்திலிங்கம் ஏரியாவுல கோட்டை விட்டது எப்படி?” என்று அவர்மீதே சந்தேக பார்வையை வீசியிருக்கிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism