Published:Updated:

அக்கா கீதா ஜீவனுடன் மோதும் மேயர் தம்பி! அடிப்பொடிகளையும் கைவிட்ட பன்னீர்! - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்!

``மறுபடியும் போட்டியிட வேண்டாம்!”; தந்தை மகனுக்காற்றும் அரசியல் உதவி...; அடிப்பொடிகளையும் கைவிட்ட பன்னீர்!; நீலகிரியில் வெறித்தனமாக வெட்டப்படும் மரங்கள்...;

அக்கா கீதா ஜீவனுடன் மோதும் மேயர் தம்பி! அடிப்பொடிகளையும் கைவிட்ட பன்னீர்! - கழுகார் அப்டேட்ஸ்!

``மறுபடியும் போட்டியிட வேண்டாம்!”; தந்தை மகனுக்காற்றும் அரசியல் உதவி...; அடிப்பொடிகளையும் கைவிட்ட பன்னீர்!; நீலகிரியில் வெறித்தனமாக வெட்டப்படும் மரங்கள்...;

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
``மறுபடியும் போட்டியிட வேண்டாம்!”
மா.செ-வுக்கு உத்தரவிட்ட அறிவாலயம்...

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் குவிந்துவரும் நிலையில், சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரான மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ மீது வரும் புகார்களால் ஏக கடுப்பில் இருக்கிறதாம் கட்சித் தலைமை.

மாதவரம் சுதர்சனம்
மாதவரம் சுதர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ புழல் நாராயணனின் மகள் கவிதா நாராயணன் 17-வது வார்டில் போட்டியிட்ட நிலையில், உள்ளடி வேலை செய்து அவரைத் தோற்கடிக்கவைத்துவிட்டதாக வந்திருக்கும் புகார் தலைமையை அப்செட் ஆக்கியிருக்கிறது. தவிர, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இவரது வடகிழக்கு மாவட்டத்துக்குள் மட்டுமே ஏழு வார்டுகளை அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. இதையடுத்து, ஸ்டாலின் துபாய்க்குச் செல்வதற்கு முன்னதாக அறிவாலயம் தரப்பிலிருந்து அழைத்தவர்கள், ``உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மறுபடியும் போட்டியிட வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்களாம்!

``மகன் போட்டோவை பெருசா போடுங்கப்பா!”
தந்தை மகனுக்காற்றும் அரசியல் உதவி...

தனது அரசியல் பயணம் ஆரம்பமான செஞ்சியிலேயே தன் மகன் மொக்தியார் அலியையும் பேரூராட்சித் தலைவராக அமரவைத்துவிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், தற்போது மகனை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். கட்சியில் மாவட்ட தகவல் தொடர்புத்துறை அமைப்பாளர் பொறுப்பிலிருக்கும் தன் மகனின் புகைப்படம் இல்லாமல் கட்சி பேனர்கள், போஸ்டர்கள் அடிக்கக் கூடாது என்று உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

செஞ்சி மஸ்தான் - ஸ்டாலின்
செஞ்சி மஸ்தான் - ஸ்டாலின்

சமீபத்தில் போஸ்டர் ஒன்றில் மகனின் புகைப்படம் சிறிதாக இருந்ததைப் பார்த்தவர், ``ஏம்ப்பா... நல்லா பெருசா படத்தைப் போடுங்கப்பா...” என்று கட்சியினருக்கு உத்தரவிட்டாராம். சுவர் விளம்பரங்களிலும் அமைச்சரின் பெயருக்கு அடுத்து மகனின் பெயர்தான் பெரிதாக இடம்பெறும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெயர்களும்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இதையடுத்து, “இப்படியே போனால் கட்சியில் இவ்வளவு நாள் வேலை பார்த்த நாமெல்லாம் என்னதான் செய்யறது?’’ என்று புலம்புகிறார்கள் விழுப்புரம் மாவட்ட உடன்பிறப்புகள்.

அடிப்பொடிகளையும் கைவிட்ட பன்னீர்!

சென்னையில் நடுக்குப்பம் ரமேஷ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழலாக வலம்வருபவர்கள்; அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், லோக்கல் பஞ்சாயத்துகளையும் இவர்களே பேசித் தீர்ப்பார்களாம். மார்ச் 24 அன்று இவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் ரமேஷை, கிருஷ்ணமூர்த்தி தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரமேஷை நேரில் சென்று நலம் விசாரித்த ஓ.பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தியை அழைத்து ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை என்கிறார்கள். தொடர்ந்து ரமேஷ் தரப்பினர், கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியும்கூட “விடுங்கப்பா...” என்று கூலாகச் சொல்லிவிட்டாராம். இதையடுத்து, “தன்னை நம்பி வந்த அ.தி.மு.க தலைவர்களைத்தான் தொங்கல்ல விட்டாருன்னா, அவரைச் சுத்தி பாதுகாப்புக்காக இருந்தவங்களையும் கண்டுக்கறது இல்லை. இவரெல்லாம் நமக்கு நல்லது செய்வாரா?” என்று புலம்புகிறார்கள் பன்னீரின் அடிப்பொடிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முக்கியப் புள்ளியுடன் மீட்டிங் போட்ட வியாபாரிகள்!
நீலகிரியில் வெறித்தனமாக வெட்டப்படும் மரங்கள்...

நீலகிரியில் கடந்த பத்தாண்டுகளாக அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மரக்கடத்தல் மாஃபியாக்கள் அட்டூழியம் செய்துவந்தன. இடையே தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்கள் மரக்கடத்தல்கள் குறைந்திருந்தன. இடையில் என்ன நடந்ததோ... கடந்த ஓரிரு மாதங்களாகவே மரக்கடத்தல்கள் பலமடங்கு அதிகரித்துவருகின்றன. கடந்த ஆட்சியில் இரவு நேரங்களில் படுதா போர்த்தியபடி மர லோடு ஏற்றிச் சென்ற லாரிகள், இப்போது பட்டப்பகலில் வெளிப்படையாகவே மரங்களை ஏற்றிச் செல்கின்றன. இது பற்றிப் பேசும் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் சிலர், “காட்டைக் காப்பத்தவேண்டிய பொறுப்புல இருக்குறவரே மரம், ஃபர்னிச்சர் பிசினஸ் பண்றாரு.

நீலகிரி
நீலகிரி

சமீபத்துல பக்கத்து சமவெளி ஊர்லவெச்சு, பெரிய பெரிய மர வியாபாரிங்கல்லாம் அவரைச் சந்திச்சு கூட்டம் போட்டாங்க. அதுக்குப் பின்னாடிதான் இப்படி வெறிபிடிச்ச மாதிரி மரத்தை வெட்டுறாங்க. இதை எதிர்த்து கேள்வி கேட்ட முக்கியமான வனத்துறை அதிகாரி ஒருத்தரை மிரட்டி ஆஃப் பண்ணிட்டாங்க!” என்று முணுமுணுக்கிறார்கள்!

பா.ஜ.க-வுக்குத் தாவுகிறாரா ஆர்.பி.உதயகுமார்?

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதும் சரி... தற்போது முன்னாள் அமைச்சராக இருக்கும்போது சரி... ஆர்.பி.உதயகுமார் பா.ஜ.க-வை விட்டுக்கொடுத்ததே இல்லை. அ.தி.மு.க-வினர் பலரும் பா.ஜ.க-வை உரசிப்பார்க்கும் வகையில் பேசியிருந்தாலும், இவர் மட்டும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக, வெளிப்படையாகவே பேசிவந்தார். இந்த நிலையில்தான் தற்போது உதயகுமார் பா.ஜ.க-வுக்கு செல்லப்போகிறார் என்கிற தகவல் மதுரை வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது. ‘‘நயினார் நாகேந்திரன் மூலம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் தொடர்பில் இருந்துவரும் உதயகுமார், சமீபத்தில் மதுரை வந்திருந்த ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அது மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களுக்கு வரும் பா.ஜ.க தலைவர்களிடமும் பேசிவருகிறார். கட்சி நிர்வாகிகளிடமும் மோடியின் பெருமைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருகிறார்’’ என்று சொல்லும் மதுரை அ.தி.மு.க-வினர், ‘‘இதற்கெல்லாம் முன்னோட்டமாக, சினிமாவில் நடித்துவரும் தன் தம்பி யோகியை பா.ஜ.க-வில் இணைக்கத் திட்டமிட்டுள்ளார்’’ என்றும் கிசுகிசுக்கிறார்கள்!

‘‘நான் கும்பிட்ட சாமி என்னைக் கைவிடலை!”
கண்கலங்கிய சசிகலா...

சமீபகாலமாகவே சசிகலா பல்வேறு தென் மாவட்டக் கோயில்களுக்கு ஆன்மிக விசிட் அடித்தார். ‘விஸ்வாமித்திரர் கோயில், நரசிம்மர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினால், வழக்கு உள்ளிட்ட சிக்கல்களிலிருந்து விடுபடலாம்’ என்று சசிகலாவின் ஆன்மிக வழிகாட்டிகள் ஆலோசனை வழங்கியதே இந்த ஆன்மிக விசிட்டுக்குக் காரணமாம்.

சசிகலா
சசிகலா

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் பன்னீர் தனக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்ததைக் கேட்டவர், “நான் கும்பிட்ட சாமி என்னைக் கைவிடலை... என் மேல இருந்த களங்கம் நீங்கிடுச்சு...” என்று கண்கலங்கினாராம். இதையடுத்து, சசிகலா வழிபடவிருக்கும் கோயில்களின் லிஸ்ட் பெரிதாகியிருக்கிறதாம்... கேட்டால் நேர்த்திக்கடன் என்கிறார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் அக்காவுக்கும், மேயர் தம்பிக்கும் சண்டை!
தூத்துக்குடியில் களைகட்டும் களேபரம்...

அமைச்சர் கீதா ஜீவனுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயரான அவரின் தம்பி ஜெகனுக்கும் இடையே பனிப்போர் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஜெகனுக்கு சீட் கொடுத்தபோதே, ‘‘அக்கா அமைச்சர், தம்பி மேயரா?’’ என்று கட்சியில் உடன்பிறப்புகள் முணுமுணுத்தார்கள். ஜெகன் மேயர் பதவியில் அமர்ந்தபோது, ‘‘அக்காவுக்கும் தம்பிக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கலாம். அதை வெட்டவெளிச்சமாக்கி கட்சி பெயரைக் கெடுத்துடாதீங்க” என்று இருவரையும் அழைத்து அறிவுறுத்தினாராம் கனிமொழி.

மேயராகப் பொறுப்பேற்ற ஜெகன்
மேயராகப் பொறுப்பேற்ற ஜெகன்

இந்த நிலையில், மாநகராட்சி விவகாரங்களில் அக்காவைத் தலையிடவிடாமல் தம்பி ஜெகன் பார்த்துக்கொள்வதால், இரு தரப்பும் தற்போது முறைத்துக்கொண்டு நிற்கின்றன. இது பற்றிப் பேசும் மாநகராட்சி அதிகாரிகளோ, “அக்கா சொன்னாங்கன்னு செஞ்சா தம்பி கூப்பிட்டு திட்டுறாரு... செய்யலைன்னா `ஏன் செய்யலை?’னு அக்கா கூப்பிட்டு சத்தம் போடுறாங்க. இவங்களுக்கு நடுவுல நாங்க மாட்டிக்கிட்டு படாதபாடு படுறோம்” என்கிறார்கள் அழாத குறையாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism