பூட்டு மாவட்டத்தின் பெரிய காக்கிச் சட்டை அதிகாரி, தன் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை கோலாகலமாக நடத்தியதுதான், தென்மாவட்ட போலீஸார் மத்தியில் இப்போது ஹாட் டாபிக்! முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் உள்ளூர் அமைச்சர்கள் இருவர் மட்டுமின்றி, ஆளுங்கட்சிப் புள்ளிகள், தொழிலதிபர்கள் என்று வரிசைகட்டி வந்திருக்கிறார்கள். அதில் சிலர் தாய்மாமன்போல வெயிட்டான சீரும் செய்திருக்கிறார்களாம். ஏற்கெனவே அவர் பணியாற்றிய தூங்கா நகரத்திலிருந்தும் விருந்தினர் வருகை, களைகட்டியிருக்கிறது. பெரிய அதிகாரியைக் காக்கா பிடிப்பதற்காக சின்ன அதிகாரிகளும், குட்டி அதிகாரிகளும் பணமாகவும், தங்கமாகவும் மொய் செய்து அசத்தினார்களாம். ஆயுதப்படை போலீஸார்தான் பாவம். வரவேற்பிலிருந்து பந்தி பரிமாறியது வரை எல்லா வேலைகளுக்கும் அவர்களைத்தான் ஏவலாளிகளாகப் பயன்படுத்தினாராம் பெரிய அதிகாரி.
அறத்துப்பால் பாடியவரின் பெயர் தாங்கிய மாவட்டத்தில் இருக்கிறது கேள்விக்கு பதில் தரும் ஊராட்சி. இந்த ஊரிலிருக்கும் இரண்டு பெரிய ஏரிகளில், சுமார் 300 ஏக்கர் பரப்பில் வேலிகாத்தான் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவற்றை வேரோடு வெட்டி எடுத்துக்கொள்ளும் உரிமத்தை ஊராட்சி நிர்வாகமும், நீர்வளத்துறை அதிகாரிகளும் சமீபத்தில் ஏலம்விட்டார்கள். இப்படி ஏலம்விட்ட தொகை என 50,300 ரூபாயை மட்டும் அரசு கஜானாவில் வரைவோலையாகச் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தனியாருக்கு ஏலம்விடப்பட்ட ஏலத் தொகையோ ரூ.55 லட்சமாம். அதாவது வரைவோலை எடுத்த தொகை போக மீதமிருக்கும் சுமார் 54,49,700 ரூபாயை அதிகாரிகள், அந்தப் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆளுங்கட்சிப் பிரமுகர்களெல்லாம் சண்டை போடாமல் பங்கு போட்டுக்கொண்டார்களாம். கைமேல் கிடைத்த பலனால், ‘எக்ஸ்க்யூஸ் மீ உங்க ஊர் ஏரியில முட்புதர்களை அகற்றணுமா?’ என ஊர் ஊராக அலசிக்கொண்டிருக்கிறதாம் ஓர் அசுரர் படை!
ஒருகாலத்தில் `ஜில்’ மாவட்ட இலைக் கட்சியின் முகமாக வலம்வந்தவர் அந்த முன்னாள் அமைச்சர். மா.செ நாற்காலி பறிபோனதும், ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்று சொல்லி, கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஒருகட்டத்தில் நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக, சொந்த ஊர் ஸ்டேஷனிலேயே வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைதாகும் அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. முன்ஜாமீன் பெற்றுத் தப்பியவர், `இருக்கிற சொத்தைக் காப்பாத்திக்கணும்னா அரசியல் செல்வாக்கு தேவை’ என உணர்ந்திருக்கிறார். உடனே, இலைக் கட்சியின் துணிவான தலைவரிடம் தஞ்சமாகிவிட்டாராம். அவர் கொடுத்த தைரியத்தால் புதுத்தெம்புடன் தனது பழைய ஆதரவாளர்களைத் திரட்டி, மக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறாராம் ‘புத்தி’ மாஜி. ‘எனக்காடா விபூதி அடிக்கப் பாத்தீங்க... இனிதான் என் ஆட்டம் ஆரம்பமாகப்போகுது” எனக் கண்ணில் படுபவர்களிடமெல்லாம் `பன்ச்’ டயலாக் பேசித்திரிகிறாராம் புத்தி!
தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-க்கான ரேஸில் நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்களில் சீனியரான சஞ்சய் அரோரா, மத்திய அரசுப் பணியில் டெல்லி மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றுகிறார். மீண்டும் தமிழகத்தில் பணிபுரிய அவர் விரும்பினாலும், ஆட்சி மேலிடம் விரும்பவில்லை என்கிறார்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள். ‘டெல்லியில், அதிகாரப் பதவியில் இருப்பவர் தமிழகத்துக்கு வர ஏன் துடிக்கிறார்... இதற்குப் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறதோ?’ எனச் சந்தேகப் பார்வையை வீசுகிறதாம் தி.மு.க மேலிடம். அரோராவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பி.கே.ரவி மீது துறைரீதியான இரண்டு விசாரணைக் கோப்புகள் நிலுவையில் இருக்கின்றன. இதனால், அவரையும் விரும்பவில்லையாம் மேலிடம். மீதமிருப்பது, சங்கர் ஜிவாலும் ஏ.கே.விஸ்வநாதனும்தான். தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வுபெற்ற பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சிவ தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படவிருக்கிறார். இந்தச் சூழலில், ‘தமிழ், தமிழர் பெருமையை நாம் பேசுகிறோம். தலைமைச் செயலாளராகவும், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யாகவும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே நியமித்தால், அது திராவிட மாடல் ஆட்சிக்கே கரும்புள்ளியாகிவிடும்’ என முதல்வருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். யாருக்கு ‘பொறுப்பு’ கிடைக்கப்போகிறது... என்பதுதான் காக்கிகள் மத்தியில் ஹாட் டாபிக்!
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அணிலாக உதவியவர்களில் ஒருவரான சசிகாந்த் செந்திலை தமிழக காங்கிரஸ் தலைவராகக் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்ததாம். ஆனால், ‘2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை கர்நாடகாவிலேயே அவர் இருக்க வேண்டும்’ என்று கோரிக்கைவைத்த கையோடு, ‘தமிழக காங்கிரஸ் இருக்கிற நிலைமைக்கு, ராகுலையே தலைவராகப் போட்டாலும் வேலை நடக்காது. நல்ல வேலை பார்க்கிறவரை அங்கே அனுப்பி வீணாக்கிடாதீங்க!’ எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாம் கர்நாடக காங்கிரஸ் தலைமை. ஆனாலும், இன்றைய சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஒரு படித்த இளைஞரைப் போட்டால் நல்லதுதானே என்று தமிழ்நாட்டிலிருந்து சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம். இதில் அடுத்த தலைவர் நாம்தான் என்ற கனவில் இருந்தவர்தான் உச்சகட்ட கடுப்பில் இருக்கிறாராம்.