Published:Updated:

பவர்ஃபுல் அமைச்சரின் ஒன் மேன் ஷோ முதல் குளுகுளு மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழல்வரை!- கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

‘கப்சிப்’ ஆன சீனியர்! | மலர்க் கட்சிப் பிரமுகர் கட்டுப்பாட்டில் காவல்துறை... | நிர்வாகிகளை எச்சரித்த முதன்மையானவர் | அண்ணன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை! | வேகமெடுத்த ‘ஆபரேசன் தாமரை’! | கூட்டுறவுத்துறையில் 50 லட்சம் ரூபாய் ஊழல்... |முதல்வருடன் மேடையில் அமர்ந்த தாமரை எம்.எல்.ஏ...

பவர்ஃபுல் அமைச்சரின் ஒன் மேன் ஷோ முதல் குளுகுளு மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழல்வரை!- கழுகார் அப்டேட்ஸ்

‘கப்சிப்’ ஆன சீனியர்! | மலர்க் கட்சிப் பிரமுகர் கட்டுப்பாட்டில் காவல்துறை... | நிர்வாகிகளை எச்சரித்த முதன்மையானவர் | அண்ணன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை! | வேகமெடுத்த ‘ஆபரேசன் தாமரை’! | கூட்டுறவுத்துறையில் 50 லட்சம் ரூபாய் ஊழல்... |முதல்வருடன் மேடையில் அமர்ந்த தாமரை எம்.எல்.ஏ...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கொங்கு மண்டலத்தின் பவர் அமைச்சர்...
‘கப்சிப்’ ஆன சீனியர்!

கொங்கு மண்டலத்தில், ஆளும் தரப்பில் ஐந்து பேர் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், ‘பவர்’ஃபுல்லான அமைச்சரின் அதிகாரம்தான் ஒன் மேன் ஷோ-வாக ஓங்கி ஒலிக்கிறது. சீனியர்களான மஞ்சள் ஊராரும், மலை ஊராரும் ‘கப்சிப்’ ஆகிவிட்டனர். மற்றொரு சீனியரான விளம்பரக்காரர், பவர் அமைச்சருக்கு விஸ்வாசியாகவே மாறிவிட்டாராம். மேலும், தனக்கு டம்மியான துறை ஒதுக்கப்பட்டிருப்பதாக வருத்தப்பட்ட அந்த சீனியர் விளம்பரப்புள்ளி, பவர்ஃபுல் அதிகாரத்தின் வழியே மாப்பிள்ளையிடம் பேசி பசையான துறையைப் பெறத் தூண்டிலும் போட்டிருக்கிறாராம்!

மலர்க் கட்சிப் பிரமுகர் கட்டுப்பாட்டில் காவல்துறை...
உச்சத்துக்குப் பறந்த புகார்!

நெற்களஞ்சியக் காவல் சரகத்தில், மலர்க் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் தலையீடு அளவுக்கதிகமாக இருக்கிறதாம். துறையில் டிரான்ஸ்ஃபர் முதல் அனைத்து உள் விவகாரங்களையும் அவர்தான் கவனித்துக்கொள்கிறாராம். இதற்குக் காரணம்... அங்குள்ள ஐ.பி.எஸ் அதிகாரிக்கு மலர்ப் பிரமுகர் மிகவும் வேண்டப்பட்டவராம். காவல்துறையில், இவர் தலையீடு குறித்து துறையின் உச்ச அலுவலகத்துக்கும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்!

“புகார் வந்தால் கடும் நடவடிக்கை..!”
நிர்வாகிகளை எச்சரித்த முதன்மையானவர்

முதன்மைப் பதவிக்கு வந்தபிறகு, முதன்முறையாக நெல்லைக்குச் சென்றவர் வழக்கமாகத் தங்கும் சிமென்ட்ஸ் கெஸ்ட் ஹவுஸில் தங்காமல், அரசு விருந்தினர் மாளிகையிலேயே தங்கியிருக்கிறார். இரவு உணவுக்கு முன்பாகக் கட்சியினரைச் சந்தித்தார். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்லாமல், ஒன்றியச் செயலாளர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

அப்போது சிலர், கட்சிக்குள் நடக்கும் உள்ளடி வேலைகள் குறித்துப் புகார் சொன்னதும், ``உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், ஆளுக்கு ஆள் அடுத்தவர்களைப் பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தால், மக்கள் பணியை எப்படி செய்வீர்கள்? இனி யார் மீதாவது புகார் வந்தால், நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என்று தடாலடியாகப் பேசியதைக் கேட்டு, மாவட்ட நிர்வாகிகள் ஆடிப்போனார்களாம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அண்ணன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை!
சிறுத்தைகள்மீது புகார்கள்

“பிறந்தநாள் விழாவுக்குச் செலவு அதிகமாயிடுச்சு. அண்ணனோட செலவுகள்ல நாமளும் பங்கெடுக்க வேண்டாமா? அண்ணனுக்கும் கட்சித் தலைமைக்கும் பணம் கொடுக்கணும்” என மாவட்டத்தில் உள்ள சிறுத்தைத் தம்பிகள் சிலர், அரியலூர் சிமென்ட் ஃபேக்டரிகள் மற்றும் பணபலம் படைத்த உரிமையாளர்கள் சிலரிடம் வசூல் வேட்டை ஆடிவருகிறார்களாம். அண்ணனின் பெயரைச் சொல்லி பணம் கறக்கும் சிறுத்தைத் தம்பிகளைப் பற்றிய தகவல்களை அண்ணனுக்குப் புகாராக அனுப்பியிருக்கிறார்களாம் சில தொழிலபதிர்கள்!

வேகமெடுத்த ‘ஆபரேஷன் தாமரை’!
தள்ளிவைக்கச் சொன்ன டெல்லி

பக்கத்து குட்டி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி ஒராண்டைக் கடந்துவிட்ட நிலையில், ‘ஆபரேஷன் தாமரை’யைச் செயல்படுத்தி, முதன்மையான சாமியை பதவியிலிருந்து இறக்கி கல்தா கொடுத்துவிடலாமா என மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதாம் கட்சித் தலைமை. அதற்கு ஒருசில மூத்த நிர்வாகிகள் உற்சாகத்துடன் பச்சைக்கொடி காட்டினார்களாம். ஆனால், “அப்படிச் செய்தால், பெரும்பான்மைச் சமூகமான வன்னியர் சமூகம் ஒட்டுமொத்தமாக நமக்கு எதிராகிவிடும். நாமே நமக்குக் குழி தோண்டிக்கொள்வது போலாகிவிடும்” என்று டெல்லி தலைமையிடம் கூறினாராம் சபையின் நாயகர். அதனால் வேகமெடுத்த ‘ஆபரேஷன் தாமரை’ தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறதாம்!

கூட்டுறவுத்துறையில் 50 லட்சம் ரூபாய் ஊழல்...
மூடி மறைக்கும் எதிர்க்கட்சிப் புள்ளி!

குளுகுளு மாவட்டத்தின் கூட்டுறவுத்துறையை மொத்தமாகக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்களாம் உள்ளூர் இலைக்கட்சி நிர்வாகிகள். எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கோ உடனடியாக லட்டுகள் பார்சலில் அனுப்பப்படுகிறதாம். இதனால், முறைகேட்டை முழு நேரத் தொழிலாகச் செய்துவருகிறாராம் கூட்டுறவிலும் இலைக்கட்சியின் மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் புள்ளி ஒருவர். கொரோனா ஊரடங்குச் சமயத்தில், நிவாரணப் பொருள்களைக் கொள்முதல் செய்ததில் மட்டும் சுளையாக 50 லட்சம் ரூபாயைக் கல்லா கட்டியிருக்கிறார்களாம்.

ஆய்வின்போது குட்டு அம்பலமானதால், நடவடிக்கை என்ற பெயரில் விற்பனை அதிகாரி ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்து கண்துடைப்பு செய்திருக்கிறார்களாம். ‘தவறு செய்தவரை விட்டுவிட்டு எங்களைப் பழி வாங்குகிறார்களே....’ எனப் புலம்புகிறார்கள் அதிகாரிகள். வினோதமா இருக்கே!

முதல்வருடன் மேடையில் அமர்ந்த தாமரை எம்.எல்.ஏ...
மலர்க் கட்சிக்குள் புகைச்சல்!

அல்வா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வருடன், ஒரே மேடையில் அமர்ந்தார் அந்த மலர்க் கட்சி எம்.எல்.ஏ. ஏற்கெனவே, ‘அவர் கட்சி மாறப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்’ என்று செய்திகள் கசிந்துகொண்டிருக்கும் சமயத்தில், முதல்வரோடு மேடையில் அமர்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், முதல்வருக்குப் பொன்னாடையும் போர்த்தி வரவேற்றது மலர்க் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “சொந்த மாவட்டத்துக்கு வந்தவரை எப்படித் தவிர்க்க முடியும்?” என எம்.எல்.ஏ கேட்க, ‘இலைக்கட்சியிலும் அந்த வாரிசு இப்படிச் சொல்லித்தான் கட்சிக்குள் மிகப்பெரிய பிளவே ஏற்பட்டிருக்கிறது. இனி, இப்படி எதுவும் செய்துவிட வேண்டாம்’ என மலர்க் கட்சியின் மாநிலத் தலைமையிலிருந்து அறிவுரை சென்றிருக்கிறது!