Published:Updated:

தமிழிசை Vs ஆர்.என்.ரவி ஈகோ யுத்தம் முதல் சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம் வரை - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

‘தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அவர்...’ | எம்.எல்.ஏ-வுக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்... | வாங்கிக் கட்டிக்கொண்ட சு.வெங்கடேசன்! | ஓணம் கொண்டாடத் தயாராகும் ராகுல்... | கமிஷனிலேயே கரைந்துபோன ஆயிரம் கோடி... | கோட்டையில் அசைபோட்ட அதிகாரிகள்! | சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம்

தமிழிசை Vs ஆர்.என்.ரவி ஈகோ யுத்தம் முதல் சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம் வரை - கழுகார் அப்டேட்ஸ்

‘தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அவர்...’ | எம்.எல்.ஏ-வுக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்... | வாங்கிக் கட்டிக்கொண்ட சு.வெங்கடேசன்! | ஓணம் கொண்டாடத் தயாராகும் ராகுல்... | கமிஷனிலேயே கரைந்துபோன ஆயிரம் கோடி... | கோட்டையில் அசைபோட்ட அதிகாரிகள்! | சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
‘தி.மு.க-வின் ஓ.பி.எஸ் அவர்...’
அமைச்சர்மீது பாயும் எதிர்க்கோஷ்டி!

விளம்பர அமைச்சரின் சொந்தத் தொகுதியில், ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வே ‘மாஸ்’ காட்டிவருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அங்கு விசிட் அடித்தபோதுகூட, ஊரே ஸ்தம்பிக்கும் அளவுக்குக் கூட்டத்தை இறக்கிவிட்டனர் அ.தி.மு.க-வினர். ஆனால், தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அப்படியான கூட்டம் கூடுவதில்லை. ‘இங்கே யாருப்பா ஆளுங்கட்சி?’ என்று மக்களே கேட்கும் அளவுக்குத்தான் அமைச்சரின் செயல்பாடுகள் இருக்கின்றனவாம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

கடந்த சில தேர்தல்களாகவே, அமைச்சரின் சொந்த ஊர் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க-வைவிட, அ.தி.மு.க-தான் அதிக வாக்குகளைப் பெற்றுவருகிறது. இதையெல்லாம் பார்த்துக் கடுப்பான அமைச்சரின் எதிர்க்கோஷ்டியினர், “இவர் தி.மு.க-வின் ஓ.பி.எஸ்-போல செயல்படுகிறார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சிக்குத்தான் ஆபத்து” என்று தலைமைக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

தமிழிசை Vs ஆர்.என்.ரவி மோதல்...
உச்சத்தை எட்டும் ஈகோ யுத்தம்!

அரவிந்தரின் 150-வது நினைவுநாள் கூட்டம் சென்னை ராஜ்பவனில் ‘ஆரோவில்’ அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆரோவில் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, ஆளுநர் ரவி இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறது. தமிழிசை உள்ளிட்ட மற்றவர்கள் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்தையும் வெளியிடாததோடு, அவர்கள் பங்கேற்றனர் என்ற குறிப்புக்கூட வெளிவராமல் பார்த்துக்கொண்டாதாம்.

தமிழிசை Vs ஆர்.என்.ரவி ஈகோ யுத்தம் முதல் சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம் வரை - கழுகார் அப்டேட்ஸ்

இது குறித்து விளக்கம் கேட்ட தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைகளுக்கு, உரிய விளக்கமும் அளிக்கவில்லையாம் ராஜ்பவன். அதோடு, விழாவின் புகைப்படங்களையும் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். விசாரித்தால், தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழிசை பங்கேற்பது ஆளுநர் ரவிக்கு விருப்பமில்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள். தமிழிசை தமிழ்நாட்டில் தலைகாட்ட தலைகாட்ட, ஆளுநர்களுக்கு இடையேயான இந்த ஈகோ யுத்தம் வலுக்கும் என்கிறார்கள்.

எம்.எல்.ஏ-வுக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்...
அரங்கேறும் ஆக்கிரமிப்பு பிரச்னை!

9 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரன்ட் போடும் அளவுக்கு பிரச்னையில் சிக்கியவர் மூன்றெழுத்து மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர். தற்போது தி.மு.க கவுன்சிலர்களே இவருக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார்கள். பின்னணி இதுதான். அந்தத் தொகுதி நெடுஞ்சாலையில், 13 பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து பலர் கட்டடங்கள் கட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியபோதுகூட, மேலே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதற்குக் காரணம் தி.மு.க எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்ததுதான் என்று தி.மு.க கவுன்சிலர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆக்கிரமிப்பை அகற்றச்சொல்லி தி.மு.க கவுன்சிலர் ஒருவர், ஆர்.டி.ஓ-விடம் புகார் மனு கொடுத்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

சினிமாக்காரர்களுக்குப் பாராட்டு...
வாங்கிக் கட்டிக்கொண்ட சு.வெங்கடேசன்!

மதுரையில் நடந்த ‘விருமன்’ படவிழாவில் மதுரை தொகுதி எம்.பி-யும், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து படம் எடுத்த ஷங்கரையும், சாதிப் பெருமை பேசும் படங்களை எடுத்துவரும் முத்தையாவையும் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

சமூக ஊடகங்களில் பல்வேறு அமைப்பினர் கடுமையாக விமர்சித்த நிலையில், இப்போது கட்சியிலுள்ள முற்போக்காளர்களும், ``அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஓணம் கொண்டாடத் தயாராகும் ராகுல்...
களைகட்டும் கேரளம்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பக்கத்து மாநிலமான கேரளா வழியாகச் செல்கிறது அவரின் நடைப்பயணம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

8-ம் தேதி கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, அவர் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார்கள் காங்கிரஸார். இது ஆளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், பா.ஜ.க-வினருக்கும் கடுப்பைக் கிளப்பியிருக்கிறது.

கமிஷனிலேயே கரைந்துபோன ஆயிரம் கோடி...
புலம்பலில் வேலூர் மக்கள்!

வேலூர் மாநகராட்சிக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 1,000 கோடி ரூபாயை ‘கமிஷன்’ அடித்தே கரைத்துவிட்டார்கள் கரைவேட்டிகள் என்ற புகார் வலுத்துக்கொண்டிருக்கிறது. ‘கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், தி.மு.க ஒப்பந்ததாரர்களுக்கும் சரிபாதிப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், ஒரு வேலையைக்கூட உருப்படியாகச் செய்து முடிக்கவில்லை. டூ வீலர், ஜீப்மீது ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்ட நிலையில், அடிகுழாயையும் புதைத்து கழிவுநீர் கால்வாய் கட்டியிருக்கிறார்கள்.

அடி குழாயை அகற்றாமல் கால்வாய் கட்டிய வேலூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்!
அடி குழாயை அகற்றாமல் கால்வாய் கட்டிய வேலூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்!

இந்த விவகாரத்தில் பதில் சொல்லவேண்டிய இடத்திலிருக்கும் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவருமே வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள். ``ஆட்சி மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை; அதிகாரிகளும் மாறவில்லை; ஒப்பந்ததாரர்களும் மாறவில்லை; முறைகேடுகளும் தொடர்கின்றன” என்று புலம்புகிறார்கள் வேலூர் மக்கள்.

அரசுமீது அதிருப்தியா?
கோட்டையில் அசைபோட்ட அதிகாரிகள்!

கோட்டையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், அவ்வப்போது தங்களது துறைகளுக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து ஸ்நாக்ஸ், டீயுடன் பேசிக்கொள்வது வழக்கம். அப்படி சமீபத்தில் கூடிப் பேசிய அதிகாரிகள், “அரசு அறிவிக்கும் திட்டங்களெல்லாம் சரியாக மக்களிடம் சென்று சேர்கின்றனவா... திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் இருக்கும் இடைவெளி என்ன... சில நல்ல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும்கூட, அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருக்கக் காரணம் என்ன... இதைச் சரிசெய்வது எப்படி?” என்றெல்லாம் அலசியிருக்கிறார்கள். நீண்ட நேரம் நடந்த அந்த உரையாடலில், முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையாம்.

இறப்பு வீட்டிலுமா அரசியல்?
சலித்துக்கொண்ட மாயத்தேவர் குடும்பம்!

அ.தி.மு.க-வின் முதல் எம்.பி மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்பினர் நடந்துகொண்ட முறை, ‘என்னடா இது இறப்பு வீட்டிலுமா அரசியல்?’ என துக்க வீட்டுக்கு வந்தவர்களை முகம்சுளிக்க வைத்துவிட்டது. முதலில் ஓ.பி.எஸ் இரங்கல் செய்தி வெளியிட, அதன் பிறகே இ.பி.எஸ் தரப்பிலும் இரங்கல் செய்தி வெளிவந்தது. மாயத்தேவருக்கு உதவியாளராக இருந்தவர் என்கிற அடிப்படையில் அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் முதல் நாளே அஞ்சலி செலுத்தினார். மறுநாள் காலையில் இ.பி.எஸ் சார்பில், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்த வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

ஆனால், அதேநேரத்தில் சசிகலா, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் வருவதாக அறிவிப்பு வெளியானதால், ஆர்.பி.உதயகுமார் தரப்பு அங்கு வருவதைத் தள்ளிப்போட்டது. உடலை எடுக்கப்போகும் நேரத்தில் வந்து, இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டது உதயகுமார் தரப்பு . ‘இதோ வருகிறோம்... அதோ வருகிறோம்...’ என்று மாறி மாறி போன் செய்து தொந்தரவு செய்ததால், மாயத்தேவர் குடும்பத்தினர் இரு தரப்பின் வருகையையும் சலிப்புடனேயே எதிர்கொண்டனராம்.