Published:Updated:

அரவக்குறிச்சியில் குறையும் அமைச்சர் செல்வாக்கு|எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர் - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

முதல்வர் கொடுத்த உறுதி... உற்சாக உடன்பிறப்பு! | முதல்வரை அழைத்து வந்த பின்னணி! | “உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு...” | கட்சியைப் புனரமைக்கும் தினகரன்! | கல்லாகட்டும் கவுன்சிலர் கணவர்கள்! | புதுச்சேரியில் வெடித்த இந்தி சர்ச்சை...

அரவக்குறிச்சியில் குறையும் அமைச்சர் செல்வாக்கு|எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர் - கழுகார் அப்டேட்ஸ்

முதல்வர் கொடுத்த உறுதி... உற்சாக உடன்பிறப்பு! | முதல்வரை அழைத்து வந்த பின்னணி! | “உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு...” | கட்சியைப் புனரமைக்கும் தினகரன்! | கல்லாகட்டும் கவுன்சிலர் கணவர்கள்! | புதுச்சேரியில் வெடித்த இந்தி சர்ச்சை...

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
‘போட்டுவைத்த தேர்தல் திட்டம் ஓ.கே கண்மணி...’
முதல்வர் கொடுத்த உறுதி... உற்சாக உடன்பிறப்பு!

தன் இல்லத் திருமணத்தை நடத்திவைக்க வந்த முதல்வர் ஸ்டாலினிடம், மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ.5.55 லட்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார். இதைச் சற்றும் எதிர்பாராத முதல்வர் விழா மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டதோடு, “இனி தேர்தல் நிதி கொட்டப்போகுது” என்றார். மேலும், “படிப்படியாக வளர்ந்து, இந்த இடத்துக்கு வந்திருக்கும் செந்தில்குமாருக்கு, இனி இதைவிடப் பெரிய பொறுப்புகள் தேடிவரும்” என்ற இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.

அரவக்குறிச்சியில் குறையும் அமைச்சர் செல்வாக்கு|எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர் - கழுகார் அப்டேட்ஸ்

‘மாவட்டச் செயலாளர் பதவி கேட்டும் கிடைக்கவில்லை, சட்டமன்றத் தேர்தலிலும் வாய்ப்பு இல்லை’ எனச் சோர்ந்துபோயிருந்த செந்தில்குமார் முதல்வர் கொடுத்த உற்சாகத்தில், `அடுத்து நான்தான் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்’ என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். “இதெல்லாம் அமைச்சர் முத்துசாமி போட்டுக்கொடுத்த ரூட். அதனால்தான் முதல்வரே நேரில் வந்து செந்திலுக்குக் கட்சியில் முக்கியத்துவம் இருப்பதை உறுதிசெய்திருக்கிறார். அந்த நன்றியை மறக்காமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது” என முணுமுணுக்கிறார்கள் ஈரோடு உடன்பிறப்புகள்.

அரவக்குறிச்சியில் குறையும் அமைச்சர் செல்வாக்கு...
முதல்வரை அழைத்து வந்த பின்னணி!

கரூரை தி.மு.க கோட்டையாக மாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சொந்தத் தொகுதியிலேயே செல்வாக்கு குறைந்துவிட்டதாம். இப்போதெல்லாம் அவர் தொகுதிக்கு வந்தால், அவரைப் பார்க்க கட்சிக்காரர்களைத் தாண்டி பொதுமக்கள் யாரும் வருவதில்லையாம். விசாரித்ததில், 2019 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, ‘நான் ஜெயித்தால், வீடில்லாத 25,000 ஏழைகளுக்கு தலா 3 சென்ட் நிலம் தருவேன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலேயே மக்கள் கடுப்பில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார் அமைச்சர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

இதைச் சரிசெய்ய நினைத்தவர், சமீபத்தில் முதல்வரை அழைத்து 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார். “நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகுதுல்ல... இனிமே அக்கறை குப்புறப் பாயும்...” என்று கிண்டலடிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

“உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு...”
எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர்!

தலைநகருக்குப் பக்கத்தில் இருக்கும் மாவட்டத்தில், ஆளுங்கட்சி அமைச்சருடன், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் இருவர் ரகசிய டீலிங்கில் இருக்கிறார்களாம். நடிகை ஒருவர் உயிரிழந்த ஹோட்டலில் ரகசியமாக அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்களாம். அங்குதான் மணல், ரியல் எஸ்டேட், ட்ரான்ஸ்ஃபர் என முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவாம். மாவட்டத்தின் கனிம வளக் கொள்ளை, டெண்டர்கள் தொடங்கி கமிஷன் வரை அ.தி.மு.க-வினருக்கும் ஒரு பங்கு போகிறதாம். ‘பால் வார்த்தவரையே பதம் பார்க்கக் கூடாது’ என்பதால்தான் அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கும், அமைச்சருக்கும் எதிராகப் பல பிரச்னைகள் இருந்தாலும் அ.தி.மு.க-வினர் அதை கையில் எடுப்பதில்லை என்று புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

சீஸன் கடைகளுக்குத் தயாராகும் குமரி...
கல்லாகட்டும் கவுன்சிலர் கணவர்கள்!

சபரிமலை சீஸனையொட்டி, கன்னியாகுமரி கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அவர்களைக் குறிவைத்து சீஸன் கடைகள் அமைப்பதற்கான வேலையில் வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் பலர் இப்போதே குமரியில் சங்கமிக்க ஆரம்பித்துவிட்டனர். இதை நல்வாய்ப்பாகக் கருதி, கன்னியாகுமரி பேரூராட்சிப் பெண் கவுன்சிலர்கள் நால்வரின் கணவர்கள் சிண்டிகேட் அமைத்து, மொத்தமாகக் கடைபோடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அந்தக் கடைகளைக் கூடுதல் வாடகைக்கு வியாபாரிகளுக்குப் பிரித்துக் கொடுத்து, லாபம் பார்க்கும் திட்டத்துடன் செயல்படுகிறார்களாம். “ஆண் கவுன்சிலர்களே அவமானத்துக்கு பயந்து அடக்கி வாசிக்கிறோம். இந்த புருஷன்கள் தொல்லை தாங்க முடியலியே” என்று புலம்புகிறார்கள் மற்ற கவுன்சிலர்கள். “கடை வசூலில் ஒரு பங்கு மாவட்ட அமைச்சருக்கு” என்று சொல்லியே துணிந்து இதைச் செய்கிறார்களாம் கவுன்சிலர் கணவர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு விதை...
கட்சியைப் புனரமைக்கும் தினகரன்!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாழடைந்துபோயிருக்கும் தன் கட்சிக்கு ‘பெயின்ட்’ அடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கட்சிக்கென புதிதாக வெப்சைட்டும் தொடங்கியிருக்கிறார். அவரின் இந்த உற்சாகத்துக்கு, பா.ஜ.க-வின் ஆதரவு முகம்தான் முதன்மையான காரணம் என்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் சீட்டு மட்டுமல்லாமல் தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குவதாக பா.ஜ.க தரப்பு வாக்குறுதி அளித்திருக்கிறதாம்.

அரவக்குறிச்சியில் குறையும் அமைச்சர் செல்வாக்கு|எதிர்க்கட்சிகள் வாயடைத்த அமைச்சர் - கழுகார் அப்டேட்ஸ்

“சசிகலாவுக்குத் தனியாகக் கட்சி இல்லை. அவருக்கென்று வாக்குவங்கி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆறுமுகசாமி ஆணைய விவகாரமும் அவருக்கு எதிராக இருக்கிறது. ஆனால், தினகரனுக்குக் கட்சி இருக்கிறது. கொஞ்சமேனும் வாக்குவங்கி இருக்கிறது. இதுதான் பா.ஜ.க., அ.ம.மு.க-வை அரவணைக்க நினைப்பதற்கும், தினகரன் தன் கட்சியை மராமத்து செய்வதற்கும் காரணம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

புதுச்சேரியில் வெடித்த இந்தி சர்ச்சை...
அப்செட்டான அமித் ஷா!

சிறுபான்மையினர் மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக, புதுச்சேரிக்கு வந்திருந்தார் தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் சாய் சரவணக்குமார் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்தியிலேயே உரையாற்றியிருக்கிறார். அவர் பேசியது புரியாமல் அங்கிருந்த அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள, “புதுச்சேரி அதிகாரிகளுக்கு இந்தி தெரியாது.

ஆய்வுக் கூட்டத்தில் தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர்
ஆய்வுக் கூட்டத்தில் தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர்

அதனால் ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கோரிக்கைவைத்தாராம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். உடனே, “தேசிய மொழி தெரியாமல் எப்படி இந்த வேலைக்கு வந்தீர்கள்?” என்று அதிகாரிகளைப் பொரிந்து தள்ளிவிட்டாராம் சையத் ஷாஹிசாதி. இந்த விஷயம் கசிந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்க, மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. இதனால் நட்சத்திர விடுதியில் நடக்கவிருந்த இரண்டாவது நாள் ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்துக்கு மாற்றினார்கள். இந்த விஷயம் அப்போது சென்னையில் இருந்த அமித் ஷாவுக்கு சொல்லப்பட, `நாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் நேரத்தில் இப்படியா?’ என்று அப்செட்டாகிவிட்டாராம் அவர். புதுச்சேரியில் என்ன நடக்கிறது என்று ஐ.பி-யிடம் அடிக்கடி கேட்டுக்கொண்ட அவர், இந்தியில் பேசிய அந்த தேசிய ஆணையரிடம் கடுகடுத்ததாகவும் சொல்கிறார்கள்.