Published:Updated:

அமைச்சரைத் துரத்தும் சாதி முதல் பாஜக பாசத்தில் ஆளுங்கட்சி மேயர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

‘பெரியார் மண்ணிலுமா இந்தக் கொடுமை?’ | துறையை விட்டுவிட்டுத் தன்னை வளர்க்கிறாரா அமைச்சர்? | பா.ஜ.க பாசத்தில் ஆளுங்கட்சி மேயர்! | மிரண்டுபோன இந்து முன்னணி நிர்வாகி! | தெற்கில் பரபரக்கும் கோஷ்டி மோதல்! | சாலைக்கு ‘பவுடர்’ பூசும் அரசு!

Published:Updated:

அமைச்சரைத் துரத்தும் சாதி முதல் பாஜக பாசத்தில் ஆளுங்கட்சி மேயர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

‘பெரியார் மண்ணிலுமா இந்தக் கொடுமை?’ | துறையை விட்டுவிட்டுத் தன்னை வளர்க்கிறாரா அமைச்சர்? | பா.ஜ.க பாசத்தில் ஆளுங்கட்சி மேயர்! | மிரண்டுபோன இந்து முன்னணி நிர்வாகி! | தெற்கில் பரபரக்கும் கோஷ்டி மோதல்! | சாலைக்கு ‘பவுடர்’ பூசும் அரசு!

கழுகார் அப்டேட்ஸ்
‘பெரியார் மண்ணிலுமா இந்தக் கொடுமை?’
அமைச்சர்களைத் துரத்தும் சாதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழுவில், 12 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு ஏரியாவைப் பிரித்துக் கொடுத்திருந்தாலும், “நீங்க வேற ஏரியாவுக்குள் போகக் கூடாது!” என யாருக்கும் எந்தத் தடையும் போடப்படவில்லையாம். ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை மட்டும், ‘குறிப்பிட்ட ஏரியா’வில் வாக்கு சேகரித்தால் போதும் என்று அழுத்திச் சொல்லிவிட்டார்களாம். “தமிழ்நாட்டை, `பெரியார் மண்’ என்கிறார்கள்.

அமைச்சரைத் துரத்தும் சாதி முதல் பாஜக பாசத்தில் ஆளுங்கட்சி மேயர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

பெரியாரின் சொந்த ஊரில், அவருடைய பேரனுக்கு ஓட்டுக் கேட்பதில்கூட இப்படிப் பாகுபாடு காட்டுகிறார்களே?” என்று புலம்புகிறதாம் கயல்விழியின் தரப்பு. பட்டியலினத்தைச் சேர்ந்த மற்றோர் அமைச்சரான மதிவேந்தனின் சமூக வாக்குகள் தொகுதி முழுக்க விரவிக்கிடப்பதால், அவருக்கு இப்படியான தடையேதும் விதிக்கப்படவில்லை என்றும் கிசுகிசுக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

புது கார்... பெரிய சொத்து... புதிய நிறுவனங்கள்...
துறையை விட்டுவிட்டுத் தன்னை வளர்க்கிறாரா அமைச்சர்?

சீனியர் இனிஷியல் அமைச்சர் ஒருவருக்குப் பொங்கல் பரிசாக 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான ‘டொயோட்டா வெல்ஃபயர்’ காரை பரிசளித்திருக்கிறாராம், ‘கல்வித் தாயான’ அவரின் மனைவி. கார் மட்டுமல்ல, தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டுக்குள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், மூன்று இடங்களில் சொத்து வாங்கியிருக்கிறாராம் அமைச்சர். ஏற்கெனவே, பல கல்வி நிறுவனங்களை நடத்திவருபவர், இப்போது புதிதாகப் பொறியியல் கல்லூரி, மருத்துவமனை கட்டும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். “மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்கிறாரோ இல்லையோ, தனது சொத்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வளப்படுத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

‘நான் சூரியன் நீ தாமரை...’
பா.ஜ.க பாசத்தில் ஆளுங்கட்சி மேயர்!

நெல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி மேயர், உட்கட்சிப் பிரச்னை காரணமாக சொந்தக் கட்சி எம்.எல்.ஏ உள்ளிட்டவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லையாம். ஆனால், தாமரை கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியை மட்டும் அழைக்க மறப்பதே இல்லையாம். மாநகர எல்லைக்குள் நடக்கும் விழாக்களுக்குத் தன்னை சிறப்பு விருந்தினராக அழைப்பவர்களிடமும், அந்தத் தாமரை நிர்வாகியையும் அழைக்குமாறு வற்புறுத்துகிறாராம்.

சொந்தக் கட்சிக்காரர்களைக் கடுப்பேற்றுவதற்காக இதைச் செய்கிறாரா அல்லது தாமரைக் கட்சிக்குத் தாவிச் செல்ல திட்டம் போடுகிறாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அந்த மாவட்ட உடன்பிறப்புகள்!

ஏக வசனத்தில் பேசிய அமைச்சர்...
மிரண்டுபோன இந்து முன்னணி நிர்வாகி!

புதுச்சேரி பா.ஜ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் இந்து முன்னணியின் மூத்த நிர்வாகி ஒருவர், “அரசின் சலுகைகளைப் பெற உதவும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் கட்சிக்காரர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். டென்ஷனான முருகக் கடவுள் பெயர்கொண்ட அமைச்சர், வேட்டியை மடித்துக்கொண்டு ஏக வசனத்தில் வசைபாடித் தீர்க்க, வாயடைத்துப் போய்விட்டார் அந்த மூத்த நிர்வாகி. “கட்சியில் என் அனுபவத்தைவிட அவருக்கு வயது குறைவு. பொதுவெளியில் என்னை இப்படித் திட்டுகிறார். அதைக் கேட்கவும் நாதியில்லை. கட்சியில் பணத்துக்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள். சீனியாரிட்டிக்கு எந்த மதிப்பும் இல்லை” எனப் பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பிவருகிறாராம் அந்த மூத்த நிர்வாகி.

முன்னாள் அமைச்சர் - அமைச்சர் - மேயர்...
தெற்கில் பரபரக்கும் கோஷ்டி மோதல்!

தென்கோடி மாவட்டத்தில் அமைச்சர் ஒருவரும், ஆளுங்கட்சி மேயரும் ஓரணியில் நின்றுகொண்டு முன்னாள் அமைச்சராக இருந்தவரின் மாவட்டச் செயலாளர் பதவியை காலி செய்தார்கள் அல்லவா... இப்போது அந்த அமைச்சருக்கும், மேயருக்கும் இடையிலேயே உரசல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஆளுங்கட்சியின் அணி நிர்வாகிகள் நியமனத்தில் அவர்களுக்குள்ளான மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. இதனால், முன்னாள் அமைச்சர் அணி, இந்நாள் அமைச்சர் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த மாவட்டக் கட்சி அரசியலில், இப்போது புதிதாக `மேயர் அணி’ என மூன்றாவது அணி ஒன்று உருவாகிவிட்டது. ‘இரண்டு அணிகளாக இருந்தபோதே கோஷ்டி மோதலைத் தாங்க முடியாது. இப்போது கூடுதலாக ஓரணி வேறு சேர்ந்துகொண்டதே?’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

புதுச்சேரியிலும் குஜராத் மாடல்...

புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு சாலைகளெல்லாம் பழுதடைந்து கிடக்கின்றன. இந்த நிலையில் திடீரென அவசர அவசரமாக சில சாலைகளை மட்டும் சர்வதேசத் தரத்தில் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது அரசு. என்னவென்று விசாரித்தால், வருகிற 30, 31-ம் தேதிகளில் ஜி20 தொடக்கநிலை மாநாடு புதுச்சேரியில் நடக்கிறது. உலகப் பிரதிநிதிகளெல்லாம் வருவார்கள் என்பதால், விமான தளத்திலிருந்து அவர்கள் வரும் சாலை, தங்கும் விடுதிகளுக்குச் செல்லும் சாலை, மாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்லும் சாலைகளை மட்டும் அவசர அவசரமாக ‘மேக்கப்’ செய்துவருகிறார்களாம்.

அமைச்சரைத் துரத்தும் சாதி முதல் பாஜக பாசத்தில் ஆளுங்கட்சி மேயர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கடந்த 2020-ல் அமெரிக்க அதிபர் குஜராத்துக்கு வந்தபோது, அவரது பார்வையில் குடிசை வீடுகள் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சாலையோரம் சுவர் கட்டியதைப்போல, புதுச்சேரியிலும் நகாசு வேலைகள் நடப்பதால், “இது ஜி20 மாநாடா... இல்லை 420 மாநாடா..?” என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.