Published:Updated:

ஜெயலலிதா நினைவுநாள் குழப்பம் முதல் ஆட்டம்போடும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

ஸ்நேக் Vs தாடி... கமலாலயத்தில் அடுத்த மல்லுக்கட்டு! | ஜெயலலிதா நினைவுநாள் எப்போது? | மூன்று மா.செ-க்களுடன் முண்டா தட்டும் மூர்த்தி! | கடுப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! | தி.மு.க பக்கம் சாய்கிறாரா முக்கியப் புள்ளி? | கழுகார் அப்டேட்ஸ்

ஜெயலலிதா நினைவுநாள் குழப்பம் முதல் ஆட்டம்போடும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வரை! - கழுகார் அப்டேட்ஸ்

ஸ்நேக் Vs தாடி... கமலாலயத்தில் அடுத்த மல்லுக்கட்டு! | ஜெயலலிதா நினைவுநாள் எப்போது? | மூன்று மா.செ-க்களுடன் முண்டா தட்டும் மூர்த்தி! | கடுப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! | தி.மு.க பக்கம் சாய்கிறாரா முக்கியப் புள்ளி? | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
ஸ்நேக் Vs தாடி...
கமலாலயத்தில் அடுத்த மல்லுக்கட்டு!

சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் என்றால், கமலாலயத்தில் தனித்தனி மல்யுத்தமே நடக்கும்போல. சென்னையில், தான் கலந்துகொள்ள இயலாத நிகழ்ச்சிகளுக்குத் தன் வலதுகரமான ‘ஸ்நேக்’ பிரமுகரை அனுப்பிவைக்கிறாராம் அண்ணாமலை. இது, கட்சிக்குள் புதிதாக நாற்காலியைப் பிடித்திருக்கும் ‘தாடிக்காரரி’ன் வயிற்றில் பொறாமைப் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. ‘ஸ்நேக்’ பிரமுகரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக, கட்சி வட்டாரங்களில் புரளியைப் பரப்பிவருகிறாராம் ‘தாடிக்காரர்.’

கமலாலயம்
கமலாலயம்

டென்ஷனான ‘ஸ்நேக்’ பிரமுகர், ‘தாடிக்காரரி’ன் கடந்தகால வண்டவாளங்களை எடுத்து வெளியேவிட ஆரம்பித்துவிட்டார். அரை டஜன் கட்சிப் பிரமுகர்களுக்கு ‘பணிவிடை’களைச் செய்தது, அந்த நெட்வொர்க் மூலமாக ‘கமிஷன்’ அடிப்படையில் டெண்டர் விவகாரங்களை முடித்தது, உயர்கல்வித்துறையைச் சுண்டுவிரலில் வைத்திருந்த ‘முனிவர்’ பிரமுகருடன் சேர்ந்துகொண்டு போட்ட ஆட்டம், என ‘தாடிக்காரரின்’ வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. “அவன் தாடியைப் பிய்க்காமல் விட மாட்டேன்” என ‘ஸ்நேக்’ பிரமுகர் சூளுரைத்திருப்பதால், கமலாலயத்தில் கதகளி!

ஜெயலலிதா நினைவுநாள் எப்போது?
ஜெ.தீபா கிளப்பும் புதிய சர்ச்சை!

டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க தயாராகிவருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் வரவிருப்பதால் சண்டை சச்சரவுகளைத் தடுப்பதற்காக, காவல்துறையிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருக்கிறது ஆட்சி மேலிடம்.

தீபா
தீபா

இந்தச் சூழலில், டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதாவின் நினைவுதினத்தை அனுசரிக்க வேண்டுமெனப் பேசுகிறார்களாம் அவரின் உறவுகள். ஜெயலலிதாவுக்குத் திதி கொடுப்பது தொடர்பான ஆலோசனை, அவரின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் இல்லத்தில் நடந்தபோது, “ஆறுமுகசாமி ஆணையத்திலேயே அத்தையோட நினைவுநாள் டிசம்பர் 4-ம் தேதிதான்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எதுக்கு டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கணும்?” எனப் பேசப்பட்டிருக்கிறது. விஷயத்தை மோப்பம் பிடித்த உளவுத்துறை, டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தச் சொல்லி சென்னை காவல்துறைக்கு `நோட்’ போட்டிருக்கிறது.

மதுரையில் தொடரும் கோஷ்டி மோதல்...
மூன்று மா.செ-க்களுடன் முண்டா தட்டும் மூர்த்தி!

மதுரையில் உதயநிதி கலந்துகொள்ளும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை, பிரமாண்டமாக நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி , “20 வருடங்களுக்குப் பிறகு மதுரை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்துவது நம் கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

மூர்த்தி.பி
மூர்த்தி.பி

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை மாநாடுபோல நடத்த வேண்டும்” என்றார். கூடவே, “மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒற்றுமையாகியிருக்கிறோம். இனி இங்கு யாரும் ஆட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது” என்று பி.டி.ஆரை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியது மதுரை மாவட்ட தி.மு.க-வில் மீண்டும் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “மாறி மாறி மோதிக்கொள்கிறார்கள்... எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருவேளை இவர்களின் மோதலைத் தலைமையே ரசிக்கிறதோ?” என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்!.

`நாங்க என்ன கட்சிக்காரங்களா?'
கடுப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

‘அரசி’ மாவட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று அகிம்சை அமைச்சரின் மகன்தான் இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தார். ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலிருந்தும், குறைந்தபட்சம் ஓர் ஆசிரியரும், இரண்டு மாணவர்களும் கட்டாயம் வர வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வாய்மொழி உத்தரவு போடவைத்திருக்கிறார் வாரிசு. ஆசிரியர்களும் வேறு வழியில்லாமல் பள்ளி விடுமுறை நாள் அன்று அரசியல் நிகழ்ச்சிக்கு மாணவர்களைச் சீருடைகளில் அழைத்து வந்திருக்கிறார்கள். “மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் பள்ளிக்கே வந்து கொடுத்திருக்கலாமே... ஏன் கட்சிக்காரர்கள் மாதிரி எங்களை விடுமுறை நாளிலும் இப்படி அலைக்கழிக்கிறார்கள்?” எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்!

காசு வந்து கொட்டுகிற நேரமிது...
ஆட்டம்போடும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!

சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் ‘மதி’யான எம்.எல்.ஏ ஒருவருக்கு சமீபத்தில் கட்சிப் பதவியும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அது தானாகக் கிடைத்த பதவி இல்லையாம், முன்பு அந்தப் பதவியில் இருந்தவர் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூல்வேட்டை நடத்தியதை போட்டுக்கொடுத்துத்தான் இவர் அந்தப் பதவிக்கு வந்தாராம்.

பொறுப்புக்கு வந்ததும், முன்னவரை மிஞ்சும் அளவுக்கு வேட்டையாடுகிறாராம். ஆனால், யார், யாருக்கு எவ்வளவு என்று சரியாகப் பங்கீடு செய்துவிடுவதிலும் கில்லாடியாக இருப்பதால், “தம்பியை யாரும் அசைச்சுக்க முடியாது” என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும் பதவியை இழந்தவர் தரப்போ, எம்.எல்.ஏ எந்த விவகாரத்தில் சிக்குவார் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறதாம்.

ஓ.பி.எஸ் கூடாரத்துக்குள் கடமுடா...
தி.மு.க பக்கம் சாய்கிறாரா முக்கியப் புள்ளி?

ஓ.பி.எஸ் அணியில் முட்டல் மோதல் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள். இங்கிருந்தால் வளர்ச்சி இருக்காது என்று ஒரு கூட்டம் இ.பி.எஸ் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அணியை கேப்டன்போல வழிநடத்தவேண்டிய ட்ரீட்மென்ட் புள்ளியே இப்போது குழப்பம் ஏற்படுத்துகிறாராம். “எடப்பாடி பழனிசாமியை முழுவதுமாக வீழ்த்துவதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் யோசனை சொன்னதுதான் பிரச்னையின் தொடக்கம். “இருக்கும் வரைக்கும் அ.தி.மு.க-வில்தான் இருக்க வேண்டும். தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என மனோஜ் பாண்டியனிடம் சொல்லி ட்ரீட்மென்ட் புள்ளியின் காதில் போடச் சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதனால் ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன் இருவர் மீதும் கடுப்பில் இருக்கிறாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. இந்த நிலையில் பவர்ஃபுல் அமைச்சர் ஒருவருடன் அந்தப் புள்ளி அடிக்கடி தொலைபேசியில் பேசிவருகிறார் என்ற தகவலும் ஓ.பி.எஸ்-ஸுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் ஓ.பி.எஸ் கூட்டத்தில் பிரச்னை வெடிக்கும் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.