Published:Updated:

இடிக்கப்பட்ட ஜெயலலிதா கோயில் முதல் ஊரடங்கு விதிமுறையை மீறினாரா துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

``மெயில் செக் செய்யவும்” - கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்தது. வேறென்ன... சூடான செய்திகளால் தகித்தது இன்பாக்ஸ்!

``இனிமே ரியாக்‌ஷன் வேற மாதிரி!’’
செங்கோட்டையை முட்டும் தமிழகம்...

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எம்.பி-க்கள் குழு, மூன்று முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டு கிடைக்காத நிலையில், ஜனவரி 8-ம் தேதி நடந்த தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் மீண்டும் ஜனவரி 17-ம் தேதி அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.

இடிக்கப்பட்ட ஜெயலலிதா கோயில் முதல் ஊரடங்கு விதிமுறையை மீறினாரா துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இம்முறையும் நேரம் தரவில்லை என்றால் தமிழகத்தின் ரியாக்‌ஷன் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றிருக்கிறார்கள் ஆளும் தரப்புத் தலைமைக்கு நெருக்கமானவர்கள். இதனிடையே தான், வரும் 17-ம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கி இருக்கிறார் அமித் ஷா என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது!

தஞ்சையில் ஜெ.கோயில் அகற்றம்...
போட்டோகூட வாங்க வராத அ.தி.மு.க-வினர்!

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. தஞ்சை மேலவீதியில் அ.தி.மு.க பிரமுகரான சுவாமிநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டி, அதில் ஜெயலலிதாவின் மெகா சைஸ் போட்டோ வைத்திருந்தார். கழிவுநீர் வாய்க்கால் மேல் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகு அகற்றினார்கள்.

ஆனால், ஜெயலலிதா போட்டோவை வாங்குவதற்கு சுவாமிநாதன் உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை. வேறு வழியில்லாமல், சுவாமிநாதனின் வீட்டுக்கே சென்று ஜெயலலிதாவின் போட்டோவை ஒப்படைத்தார்கள் மாநகராட்சி அதிகாரிகள்! இதையடுத்து, ``இதுவே எடப்பாடி, பன்னீர் போட்டோவா இருந்தா ஓடோடிப் போய் வாங்கியிருப்பார். அம்மா மேல் வெச்சுருந்த மரியாதையெல்லாம் சும்மா...” என்று முணுமுணுக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

‘``இது அப்பட்டமான உரிமை மீறல்!’’
கொந்தளிக்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள்

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ‘வருகிற மார்ச் 31 வரை சுகாதாரப் பணியாளர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. மிகவும் தேவையென்றால் மட்டுமே மேலதிகாரியிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

கடந்த ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது, சுகாதாரத்துறையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களில் 80 சதவிகிதம் பேருக்குத்தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறதாம். அப்படியிருக்கும்போது, `யாருமே விடுமுறை எடுக்கக் கூடாது என்பது அப்பட்டமான உரிமைமீறல்’ என்று குமுறிக்கொண்டிருக்கின்றனர் சுகாதாரத்துறையின் முன்களப் பணியாளர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
‘‘துரைமுருகன்மீது நடவடிக்கை பாயுமா?’’
அ.தி.மு.க-வினர் காட்டம்

ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அரசின் உத்தரவை முன்மொழியக்கூடிய இடத்திலிருக்கும் மூத்த அமைச்சர் துரைமுருகனே, அன்றைய தினம் தனது காட்பாடி வீட்டில், மாற்றுக் கட்சியிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்தவர்களைச் சந்தித்திருக்கிறார்.

துரைமுருகன்
துரைமுருகன்

அவரின் வீட்டுக்கு வெளியிலும் கட்சியினர் திரளாகக் கூடியிருந்தனர். அது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட வேலூர் அ.தி.மு.க-வினர், ‘பொதுமக்களுக்கு ஒரு சட்டம்... ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா... ஊரடங்கு விதியை மீறிய துரைமுருகன்மீது தொற்றுநோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்!

‘‘நான்தான் உதயநிதியோட பி.ஏ!’’
கைதுசெய்யப்பட்ட அட்ராசிட்டி ராஜேஷ்

சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் என்று சொல்லி பண மோசடி செய்துவந்தார். அவரிடம் பணத்தை ஏமாந்த தேன்மொழி என்ற பெண்ணிடம் போனில் பேசிய ராஜேஷ், ‘நான் உதயநிதியோட பி.ஏ. உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது’ என்று பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகி, அனலைக் கிளப்பியது. இதையடுத்து, ராஜேஷைக் கைதுசெய்த காவல்துறை, ‘உதயநிதிக்கும் ராஜேஷுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை’ என்று அறிக்கையும் வெளியிட்டது.

ராஜேஷ்
ராஜேஷ்

ஆனால், “ராஜேஷ் தி.மு.க கொடி கட்டிய காரில்தான் பந்தாவாக வலம்வந்திருக்கிறார். சென்னையில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரையும் அவர் சந்தித்திருக்கிறார்... அது மட்டும் எப்படி?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் தி.மு.க இளைஞரணி வட்டாரத்தில்!

‘``ஐந்து சீட் வேண்டும்!’’
அமைச்சர்களை நெருக்கும் இனிகோ

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கும் இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போதே தி.மு.க நிர்வாகிகளை அழைக்காமல், இவரின் சமூகத்தினருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார் என்று சர்ச்சை கிளம்பியது.

ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்
ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்

இந்த நிலையில், தற்போது தனது சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலர் சீட் கேட்டு அமைச்சர்களிடம் அழுத்தம் கொடுத்துவருகிறாராம். இதையடுத்து, ``கட்சிக்காக உழைத்தவர்கள் ஏராளமானோர் சீட் கேட்டு முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சீட் கொடுக்காமல், இனிகோ ஆட்களுக்கு சீட் கொடுத்தால் தலைமைக்குப் புகார் அளிப்போம்” என்று கொந்தளிக்கிறார்கள் மலைக்கோட்டை உடன்பிறப்புகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஃப்ரெண்டை அடக்கிவெய்யுங்க!’’
கரூர் கலகக்குரல்

ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவரின் சகோதரர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், சமீபகாலமாக அமைச்சரின் நண்பரான இனிஷியல் பிரமுகரின் தலையீடும் அதிகரித்துவிட்டது என்று புலம்புகிறார்கள் மாவட்ட அதிகாரிகள். கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறு அரசு திட்டங்கள் தொடங்கி, பெரிய ஒப்பந்தப் பணிகள் வரை இனிஷியல் பிரமுகர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறுவதில்லையாம்.

இதையடுத்து, ``அமைச்சரோட ஃப்ரெண்டை அடக்கிவெக்கலைன்னா கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்” என்று பொங்குகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

சர்ச்சை வளையத்தில் சந்திர பிரியங்கா!

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஏகத்துக்கும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள காரைக்கால் பார்வதீசுவரர் கோயில் இடத்தை மிகக்குறைந்த தொகைக்கு கணவர் பெயரில் குத்தகைக்கு எடுத்தது; இன்றுவரை லட்சக்கணக்கான ரூபாய் குத்தகை வரி செலுத்தாமல் இருப்பது;

சந்திர பிரியங்கா
சந்திர பிரியங்கா

நீதித்துறையில் பணிபுரியும் கணவர் சண்முகம் பணிக்குச் செல்லாமலேயே மாதச் சம்பளம் பெறுவது; சக கட்சி எம்.எல்.ஏ தொகுதியில் அவரைப் புறக்கணித்து தி.மு.க-வினரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது; கூட்டணிக் கட்சியினரை புறக்கணிப்பது; அதிகாரிகள் இடமாற்றத்தில் தலையிடுவது... என அம்மணிமீது நாளுக்கு நாள் புகார்ப் பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்வதால், தலைவலியால் தவிக்கிறாராம் முதலமைச்சர் ரங்கசாமி!

‘``அவர் செய்ததைத்தான் இப்போது அக்கா செய்கிறார்!’’
கப்சிப் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டங்களில் அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளக் கூடாது என்று கறார் காட்டுகிறாராம் அமைச்சர் கீதா ஜீவன்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

``தொகுதி எம்.எல்.ஏ நான் இன்ஸ்பெக்‌ஷன் வந்தா அதிகாரிங்க யாரும் ஏன் வர மாட்டேங்கிறீங்க?’’ என்று கடம்பூர் ராஜூ விளக்கம் கேட்டாலும், அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை. தி.மு.க-வினரிடம் இது குறித்துக் கேட்டால், ‘``கடந்த ஆட்சியில இவர் அமைச்சராக இருந்து என்ன செஞ்சாரோ... அதைத்தான் இப்போ அக்காவும் செய்யறாங்க!” என்கிறார்கள் கூலாக!