Published:Updated:

கழுகார் அப்டேட்ஸ்: அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி முதல் மா.செ-வை மிரட்டும் டிரைவர் வரை!

கழுகார் அப்டேட்ஸ்

கேலிக்குள்ளாகும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர்! | ‘உதயநிதி பிறந்தநாள் கொண்டாடினால்' | மா.செ-வை மிரட்டும் டிரைவர்... | தூத்துக்குடியில் வீக்காக இருக்கும் தி.மு.க... | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:

கழுகார் அப்டேட்ஸ்: அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி முதல் மா.செ-வை மிரட்டும் டிரைவர் வரை!

கேலிக்குள்ளாகும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர்! | ‘உதயநிதி பிறந்தநாள் கொண்டாடினால்' | மா.செ-வை மிரட்டும் டிரைவர்... | தூத்துக்குடியில் வீக்காக இருக்கும் தி.மு.க... | கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
‘இது அட்வான்ஸ்தான்... இன்னொரு ரவுண்ட் வரும்!’

ஈரோடு இடைத்தேர்தலில், “வேட்பாளரை அறிவித்ததில் வேண்டுமானால் திமுக கூட்டணி முந்தியிருக்கலாம். ‘ரோஸ் மில்க்’ விநியோகத்தில் நாங்கள்தான் ஃபர்ஸ்ட்” என்று பீற்றிக்கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஸ்பான்ஸர் செய்வது மணி & மணி கம்பெனிதான் என்றாலும், இஷ்டத்துக்கு வாரியிறைக்காமல் அதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான் சுவாரஸ்யமே. ஒவ்வொரு வார்டிலும், ‘அ.தி.மு.க வாக்கு’ என்று உறுதிசெய்யப்பட்டவர்களின் விவரங்களை எடுத்து அவர்களுக்கு மட்டுமே முதலில் ‘ரோஸ் மில்க்’ தருகிறார்களாம். ஆனாலும், ‘அ.தி.மு.க-வுக்குத்தான் எங்கள் ஓட்டு’ என்று சத்தியம் வாங்காத குறையாக உறுதிசெய்த பிறகே கொடுக்கிறார்களாம். அதற்கு அத்தாட்சியாகக் குடும்பத்தினரின் செல்போன் எண்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் ர.ர-க்கள். “இது அட்வான்ஸ்தான். மற்ற மாஜிக்களிடமிருந்தும் ‘ரோஸ் மில்க்’ வந்த பிறகு, இன்னொரு ரவுண்ட் வரும்” என்றும் சொல்லியிருப்பதால், அ.தி.மு.க முகாமில் உற்சாகம் கரைபுரள்கிறது.

‘இதுக்கு மட்டும் பணம் இருக்குதா..?’
கேலிக்குள்ளாகும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர்!

‘அ.தி.மு.க-வை மீட்பதே லட்சியம்’ என்று சொல்லி புதிய கட்சி தொடங்கிய அந்த ட்ரிபுள் இனிஷியல் தலைவர், `கட்சிக்குச் செலவு செய்வதில் கஞ்சர்’ என்று பெயர் வாங்கியவர். ஆனால், குடும்பத்தை கவனிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை என்கிறார்கள் கட்சியில். தன் மகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி தஞ்சைக்கு வரும் அவர், ஒவ்வொரு முறையும் அங்கிருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

“ஹோட்டலுக்குச் செய்யும் செலவில் இங்கேயே இடத்தை வாங்கி, அதில் ஒரு வீட்டைக் கட்டிவிட்டால் செலவும் குறைவு, டெல்டா பகுதியில் கட்சிப் பணிகளைக் கவனிக்கவும் வசதியாக இருக்குமே?” என குடும்பத்தினர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து சமீபத்தில் தஞ்சையில் ஓரிடத்தை வாங்கியிருக்கும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர், அங்கே சகல வசதிகளோடு வீடு கட்டுவதற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கிவிட்டாராம். “கட்சிக்குக் காசு கேட்டால் பஞ்சப்பாட்டு பாடுகிறார். இதுக்கு மட்டும் பணம் இருக்குதா?” என்று நக்கலாகச் சிரிக்கிறார்கள் கட்சியின் தஞ்சை நிர்வாகிகள்!

உதயநிதி பிறந்தநாள் கொண்டாடினால்...
சட்டம்-ஒழுங்கு கெடும்

நெல்லையில், `உதயநிதி பிறந்தநாள்’ என்ற பெயரில், பொதுக்கூட்டமும், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றமும் நடத்த முடிவுசெய்து அதற்காக, காவல்துறையின் அனுமதி கேட்டுக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள், மானூர் வடக்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள். ஆனால், “எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி அந்தக் கூட்டம் நடந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் காவல்துறை பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது. “மேயருக்கும் மா.செ-வுக்கும் இடையேயான கோஷ்டி மோதல் உச்சத்தில் இருப்பதே எல்லாவற்றுக்கும் காரணம். ஆளுங்கட்சிக்கு... அதுவும் உதயநிதி பிறந்தநாளுக்கு போலீஸ் அனுமதி மறுக்கும் அளவுக்கு இது வளர்ந்துவிட்டது. தலைமை இதில் ஒரு முடிவெடுத்தால்தான் நம்மால் இங்கே அரசியல் செய்ய முடியும்” என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். காவல்துறையின் கடிதத்தோடு தலைமைக்குப் புகார் ஒன்றைத் தட்டிவிட்டிருப்பதாகவும் தகவல்.

மா.செ-வை மிரட்டும் டிரைவர்...
பின்னணியில் வீடியோ!

கடல் சூழ்ந்த மாவட்டத்தில் எதிர்க்கட்சி மாவட்டச் செயலாளராக இருக்கிறார் அந்தத் ‘தங்கமான’ நிர்வாகி. அவரின் அந்தரங்க வீடியோ ஒன்று, அவரின் முன்னாள் டிரைவரிடம் சிக்கியிருக்கிறதாம். அதைவைத்து மீட்டர் போடலாம் என நினைத்தவரை அழைத்து மிரட்டியெடுத்திருக்கிறது மாவட்டச் செயலாளர் தரப்பு. “அப்படி எந்த வீடியோவும் என்னிடம் இல்லை. என்னைப் போய் இப்படித் தவறாக நினைத்துவிட்டீர்களே?” எனச் சொல்லி எஸ்கேப்பாகி வந்த முன்னாள் டிரைவர், “எனது உயிருக்கு மாவட்டச் செயலாளரால் ஆபத்து இருக்கிறது. எனக்கு ஏதாவது ஆனால், அவர்தான் காரணம்” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடமெல்லாம் இப்போது சொல்லிவருகிறாராம். “இன்னொருவாட்டி கூப்பிட்டுப் பேசுவோம். சண்டையா, சமாதானமான்னு அப்ப முடிவு பண்ணிடலாம்” என மா.செ-வுக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள் ர.ர-க்கள்!

தூத்துக்குடியில் வீக்காக இருக்கும் தி.மு.க...
அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி!

தூத்துக்குடி எம்.பி கனிமொழி, வரும் மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இதற்காக, தொகுதியில் தி.மு.க-வின் வாக்குவங்கி எப்படி இருக்கிறது என அவரது சென்னை அலுவலகத்திலிருந்து வந்த டீம், சைலன்ட் சர்வே செய்திருக்கிறது. ‘கீதா ஜீவன் கட்டுப்பாட்டில் இருக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், தி.மு.க படு வீக்காக இருப்பதாக’ ரிப்போர்ட் வந்திருக்கிறதாம்.

கனிமொழி
கனிமொழி

இதில் கடுப்பான கனிமொழி, “உங்க கன்ட்ரோல்ல இருக்குறா ஏரியாவுல அ.தி.மு.க-தான் பலமா இருக்கு. இப்படி இருந்தா வர்ற எலெக்‌ஷன்ல எப்படி ஓட்டு விழும்... கட்சி வளர்ப்புல நீங்க காட்டுற அக்கறை இதுதானா?” என வறுத்தெடுத்துவிட்டாராம். இதைச் சாக்காகவைத்து, “கட்சி நிர்வாகிகளை கீதா ஜீவன் அனுசரிப்பதும் இல்லை. ‘கவனிப்பதும்’ இல்லை. அதுதான் கட்சி வீக் ஆகக் காரணம்” என்று கனிமொழி தரப்பிடம் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள் சில நிர்வாகிகள்.