இலைக் கட்சி ஆட்சியிலிருந்தபோது, பல அரிய அறிவியல் கருத்துகளைச் சொல்லி தமிழ்நாட்டை என்டர்டெய்ன் செய்த ‘அரசியல் விஞ்ஞானி’யின் பதவி விரைவில் பறிக்கப்படும்’ என்கிறார்கள் தூங்கா நகர ரத்தத்தின் ரத்தங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில், இவர் லிமிட்டில் இருந்த நான்கு தொகுதிகளில் மூன்றில் சூரியன் உதித்தது. அதாவது, அவரைத் தவிர யாரும் ஜெயிக்கவில்லை. இதையடுத்து, ‘தொடர்ந்து 20 வருடங்களாக மா.செ பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அவர், கட்சிக்காக எந்தச் செலவும் செய்வதில்லை. ஈரோடு இடைத்தேர்தலிலும் பெரிய அளவில் பசையை இறக்கவில்லை. கட்சி அலுவலகம் கட்டுவதற்காகக் கொடுத்திருந்த இடத்தைக்கூடத் திருப்பி வாங்கிவிட்டார். உட்கட்சிப் பிரச்னையைச் சரிசெய்து கட்சியை வளர்க்காமல், தனக்கென்று ஒரு கோஷ்டியை மட்டுமே வளர்த்துக்கொண்டுபோகிறார்’ என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்கள் துணிவானவரின் டேபிளுக்குச் சென்றிருக்கின்றன. எனவே, ‘பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்ததும், சீரமைக்கும் மாவட்டப் பட்டியலில் தூங்கா மாநகர்தான் முதலிடம் பிடிக்கும்’ என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகைவாசிகள். அப்படிச் சீரமைக்கும்பட்சத்தில், விஞ்ஞானியின் நாற்காலியை நாம் கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்கு போட்டு காய்நகர்த்துகிறாராம் புதிதாகக் கட்சிக்கு வந்திருக்கும் வைத்தியப் புள்ளி ஒருவர்.
மலர்க் கட்சியின் மாஜி காக்கிக்கு, நாளுக்கு நாள் எதிர்ப்புகள் தீவிரமடைந்துவருகின்றன. வீடியோ, ஆடியோ சர்ச்சைகளைத் தாண்டி, ‘பூத் கமிட்டியை வலுப்படுத்தவில்லை’ என்ற புகாரும் இப்போது அவரைச் சுழன்றடிக்கிறது. முந்தைய தலைவர், பூத் கமிட்டிக்கு தனிகவனம் கொடுத்தாராம். அவர் பதவிக்காலம் முடியும்போது, பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் பணிகள் 40% முடிவடைந்திருந்தன. இப்போதிருக்கும் காக்கி தலைவரோ அதைப் பொருட்படுத்தாமல், தன்னை மட்டுமே புரொமோட் செய்துகொண்டிருந்ததால், பூத் கமிட்டிகளின் நிலை படுபாதாளத்துக்குப் போய்விட்டதாம். ‘இதே நிலை நீடித்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திப்போம்’ என்று காக்கி மாஜிக்கு எதிரான மீசைக்கார சீனியர், டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாராம். இதுவரையிலான புகார்களைப்போல, இந்தப் புகார் சாதாரணமானதல்ல என்பதால் சோகத்தில் இருக்கிறாராம் காக்கி.
வெயில் மாநகராட்சியிலுள்ள எதிர்க்கட்சிப் பெண் கவுன்சிலர் ஒருவர், அண்மையில் நடைபெற்ற முதன்மையானவரின் பிறந்தநாள் விழாவின்போது, இனிஷியல் அமைச்சர் முன்னிலையில் ஆளுங்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரைப் பின்பற்றி, எதிர்க்கட்சியில் மீதமிருக்கும் ஆறு ‘இலை’ கவுன்சிலர்களும், ஆளுங்கட்சிப் பக்கம் தாவும் முடிவில் ‘பேர’ பஞ்சாயத்தில் ஈடுபட்டுவருகிறார்களாம். இதேபோல தூத்துக்குடியில், மலர்க் கட்சி நிர்வாகி ஒருவர், ‘நுட்பமான’ அமைச்சர் தலைமையில் ஆளுங்கட்சியில் இணைந்திருக்கிறார்.
இந்த இணைப்புக் காட்சிகளின் பின்னணி குறித்து விசாரித்தால், ‘அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியான நம்மோடு சேராமல், அண்மைக்காலமாக மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் இலைக் கட்சியில் இணைந்து வருகிறார்களே... என்ன செய்வீர்களோ தெரியாது; விரைவில் நம் பக்கமும் சிலர் சேர வேண்டும்’ என ஆளுங்கட்சித் தலைமை கொடுத்த அசைன்மென்ட்டின் பலன்தான் என்கிறார்கள் தேனாம்பேட்டை உடன்பிறப்புகள்!
‘அல்வா’ நகரில் முதன்மையானவரின் சகோதரி நடத்திய சேலைக் கண்காட்சி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக இரு வாரங்களுக்கு முன்பாகவே இடத் தேர்வு, விளம்பரம் என அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு முன்னின்று செய்திருக்கிறார் சமூகத்தைக் கட்டிக்காக்கும் அமைச்சர். மாநகரத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் அமைச்சரின் தம்பியோ, இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கவில்லையாம். “தன் தம்பியுடனான சமீபத்திய மோதல் போக்கிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மேலிடத்தோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாகிவிட்டார் அக்கா. அதற்கு என்னவெல்லாம் வழிகள் இருக்கின்றனவோ அத்தனையையும் செய்ய அக்கா எடுக்கும் முயற்சிகள்தான் இவையெல்லாம்” எனப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தலைவர் பதவியில் நீடிக்க முடியும். அதன்படி கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து அந்தப் பதவிக்காக ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்ல குமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. விரைவில் தலைவர் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அது மேலும் தள்ளிப்போகும் என்கிறார்கள் கதர்ப் புள்ளிகள்.

காரணம் கேட்டால், “வீட்டில் விரைவில் சுபகாரியம் நடக்கவிருக்கிறது. அதுவரை நான் பொறுப்பில் இருந்துகொள்கிறேன்” என டெல்லியிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் தலைவர். அந்தக் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதால், ‘இப்போதைக்குத் தலைவரிடமிருந்து பதவி பறிக்கப்படாது’ என்கிறார்கள் கதர்கள்.
குளிர் மாவட்டத்தில், முதன்மையானவரின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்தது. இதில், முதன்மையானவர் குறித்தும், கட்சி, ஆட்சி குறித்தும் எதுவும் பேசாமல், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மன்னர் பிரமுகரைப் புகழ்ந்துதான் எல்லோரும் பேசியிருக்கிறார்கள். இந்த விழாவில் பேசிய ‘ரக்’டான மாவட்டச் செயலாளர், துணை மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஒருபடி மேலே சென்று, ‘‘மன்னர் பிரமுகருக்கே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” எனப் பிரசாரம் வேறு செய்திருக்கிறார்கள். ‘‘முதன்மையானவர் பிறந்தநாள் விழா என அழைத்து வந்து மன்னர் பிரமுகருக்குத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்களே... இதெல்லாம் தலைமைக்குத் தெரிந்துதான் நடக்கிறதா...’’ என முகம் சுளித்திருக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!