Published:Updated:

`காமராஜர்’ சென்டிமென்ட்டில் சிக்குவாரா மோடி? ; டெல்டா புள்ளியின் எஸ்கேப் வியூகம்! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

`செக்ரடேரியட்டில் ஒரு மூத்த அதிகாரியைச் சந்திக்கச் செல்கிறேன். மெயில் செக் செய்யவும்’ என்று டெலகிராமில் மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மெயிலில் அவர் அனுப்பியிருந்த தகவல்கள் அனைத்தும் `அடடே...’ ரகம்...

தேங்காய் நார் லோடில் டாக்குமென்ட் பார்சல்...
டெல்டா புள்ளியின் எஸ்கேப் வியூகம்!

டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆரின் நினைவுநாளுக்கு அஞ்சலி செலுத்த டெல்டா அ.தி.மு.க புள்ளி ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது அ.தி.மு.க தலைவர்கள் இருவரிடமும், ``அரசாங்கத்தோட அடுத்த குறி, நான்தான்னு பேசிக்குறாங்கண்ணே. கேஷ், கோல்டு எல்லாத்தையும் ஆஸ்திரேலியா, துபாய் பக்கம் கொண்டுபோயிட்டேன். ஆனா, முக்கியமான டாக்குமென்ட்டுகளை மட்டும் சேஃப்டி பண்ணலை. உங்க தொடர்புல பேசி, என் மேல லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வர்ற மாதிரி இருந்தா, முன்கூட்டியே தகவலைச் சொல்லச் சொல்லுங்க” என்று கேட்டிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு அந்தத் தலைவர்களோ, ``தகவல் லீக்கெல்லாம் ரெய்டுக்கு முதல்நாள்தாம்ப்பா கிடைக்கும். அதுக்குள்ள எப்படி சேஃப்டி பண்ணுவ? இப்பயிருந்தே சேஃப்டி பண்ற வழியைப் பாரு” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதையடுத்து, ஆந்திராவுக்குச் செல்லவிருக்கும் தேங்காய் நார் லோடில் டாக்குமென்ட்டுகளை பார்சல் செய்ய ஏற்பாடுகளைச் செய்துவருகிறாராம் கர்ம சிரத்தையான அந்த டெல்டா புள்ளி!

```ஐயா... மாவட்டச் செயலாளரை மாத்துங்க!’’’
தைலாபுரத்தில் அடம்பிடிக்கும் பா.ம.க நிர்வாகிகள்!

கோஷ்டிப்பூசலில் சிக்கித்தவிக்கிறது வேலூர் மாவட்ட பா.ம.க. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகனை மாற்றக் கோரி நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். ``கே.எல்.இளவழகன், புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர்.

முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன்
முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன்

பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு உள்ளூர் கட்சி நிலவரமும் தெரியவில்லை; உள்ளூர் கட்சி ஆட்களையும் புறக்கணிக்கிறார். அதனால், அவரை மாவட்டச் செயலாளராக ஏற்க மாட்டோம்” என்று கொந்தளிக்கும் நிர்வாகிகள் பலரும், ‘‘ஐயா... பஞ்சாயத்தைக் கூட்டுங்க. மாவட்டச் செயலாளரை மாத்துங்க’’ என்று தைலாபுரத்துத் தோட்டத்தில் அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வளர்த்த கடா மாருல பாயுது!’’
புலம்பும் ஏ.கே.எஸ்.விஜயன்

நாகை மாவட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஏ.கே.எஸ்.விஜயன். நாகை தொகுதியில் மூன்று முறை எம்.பி-யாக இருந்த இவர், மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்தாலும், மாவட்ட அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, கட்சி நிகழ்ச்சிகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

இந்த நிலையில், சமீபகாலமாக அந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவருகிறதாம். ``ஏ.கே.எஸ்.விஜயனை முன்னிறுத்தினால் தாங்கள் வளர முடியாது என்று நினைத்து, நாகை மாவட்டச் செயலாளர் கௌதமனும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனும் அவரைப் புறக்கணிக்கும்படி வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள் விஜயனின் ஆதரவாளர்கள். ‘‘அந்த ரெண்டு பேரையும் வளர்த்துவிட்டதே நான்தான். இப்போ வளர்த்த கடா மாருல பாயுது’’ என்று விஜயனும் வேதனையுடன் புலம்பிவருகிறாராம்.

காமராஜர் சென்டிமென்ட்...
படபடக்கும் பா.ஜ.க-வினர்!

‘முன்னாள் முதல்வர் காமராஜர் வீட்டுக்குச் சென்றால் பதவி பறிபோய்விடும்; ஆட்சி கைவிட்டுப் போய்விடும்’ என்றொரு சென்டிமென்ட் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது. ‘இதை உடைத்துக்காட்டுவேன்’ என்று சொல்லி, கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காமராஜர் வீட்டுக்குச் சென்று சிலைக்கு மாலை அணிவித்த பிறகே வேட்புமனு தாக்கல் செய்தார். அந்தத் தேர்தலில் வைகோ தோல்வியடைந்தார். இதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் விருதுநகர் வருவதை நாசுக்காகத் தவிர்த்ததாகக் கூறப்பட்டது.

மோடி
மோடி

இந்த நிலையில், அடுத்த மாதம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி வரவிருக்கிறார். அதையடுத்து, ‘விருதுநகர் வரும் மோடி, காமராஜர் இல்லத்துக்குச் செல்வாரா?’ என்ற பேச்சு ஏரியாவில் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. ‘அப்படிச் செல்லும் திட்டம் இருந்தால், இந்த சென்டிமென்ட் விவகாரத்தை முன்கூட்டியே பிரதமர் அலுவலகத்தில் சொல்லிவிட வேண்டும்’ என்று படபடக்கிறார்கள் பா.ஜ.க-வினர்!

அமைச்சர்களின் நீலகிரி விசிட்...
ஆட்டையைப்போடும் மக்கள் தொடர்புத்துறை!
நீலகிரி
நீலகிரி

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் நீலகிரியை நோக்கி அமைச்சர்கள் அடுத்தடுத்து படையெடுத்துவருகிறார்கள். இதைச் சாதகமாக்கிக்கொண்ட மக்கள் செய்தித் தொடர்புத்துறை நபர்கள் சிலர், வசமாக கல்லாகட்டிவருகிறார்களாம். ‘அமைச்சர்களின் நிகழ்ச்சிகளை மீடியாக்களில் வெளியிட வேண்டுமென்றால், பலரையும் கவனிக்கவேண்டியிருக்கிறது’ என்று சொல்லி ஒவ்வோர் அமைச்சரின் பி.ஏ-க்களிடமும் லம்ப்பான தொகையை ஆட்டையைப்போட்டுவருவதால், இவர்களின் தலை தென்பட்டாலே தெறித்து ஓடுகிறார்களாம் பி.ஏ-க்கள்!

``இதுதான் சமூகநீதி காக்கும் கட்சியின் வேலையா?’’
தி.மு.க-வை நக்கலடிக்கும் பா.ஜ.க-வினர்!

நெல்லை மாவட்ட தி.மு.க-வில் வழக்கமான கோஷ்டிகளைத் தாண்டி, இப்போது சமூகரீதியாகவும் கோஷ்டிகள் அதிகரித்துவிட்டன. சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் நெல்லைக்கு வருகை தந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தினர் தனியாகவும், மாவட்டச் செயலாளர் தனியாகவும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வந்தபோது, அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் தனியாக போஸ்டர்களை ஒட்டி வரவேற்றார்கள்.

தி.மு.க
தி.மு.க

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வந்தபோதும், அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் `நவீன பாரதி’ என்ற ரேஞ்சுக்கு வரவேற்று போஸ்டர்களை அச்சிட்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும் பா.ஜ.க-வினர், `இதுதான் சமூகநீதி காக்கும் கட்சியின் வேலையா?’ என்று அந்த போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நக்கலாகக் கேள்வியெழுப்பிவருகிறார்கள்.

ஆர்வம் காட்டாத மாணவர்கள்...
எச்சரிக்கும் திராவிடப் பல்கலைக்கழகம்!

ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியிலிருக்கும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்த்துறை’ மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. திராவிட கலாசாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இங்கு முதுநிலை படிக்கும் தமிழ் மாணவர்களின் கல்வி, தேர்வு, விடுதி, உணவுக் கட்டணம் உட்பட அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையே ஏற்கிறது. அப்படியிருந்தும், தமிழ்த்துறையில் சேர மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்வம் காட்டுவதில்லை. எம்.ஏ படிப்பில் ஓராண்டுக்கு 30 மாணவர்களை அனுமதிக்க முடியும். ஆனால், தொடக்கத்திலிருந்தே 15 மாணவர்கள் அளவுக்குத்தான் சேர்க்கை நடந்தது.

திராவிடப் பல்கலைக்கழகம்
திராவிடப் பல்கலைக்கழகம்

இந்தக் கல்வியாண்டில், அதுவுமில்லை. தற்போது வரை ஐந்து பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் தமிழ்த்துறைக்கு மூடுவிழா நடத்தக்கூடும் என்று திராவிடப் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது பற்றிப் பேசுபவர்களோ, ``கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. கட்சியின் பெயரில் மட்டுமே திராவிடத்தைத் தாங்கியிருந்தால் போதுமா... செயலில் காட்ட வேண்டாமா?” என்று ஆதங்கப்படுகிறார்கள். இதையடுத்து, தி.மு.க-வேனும் இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்!