Published:Updated:

எடப்பாடியின் `பி' பிளான் முதல்... ஸ்டாலின் சரியாகச் சொன்ன பழமொழி வரை! கழுகார் அப்டேட்ஸ்

``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் இருக்கிறேன். உம்முடைய டெலிகிராமைப் பாரும்...’’ - என்று சொல்லிவிட்டு போனை `கட்’ செய்தார் கழுகார். டெலிகிராமில் செய்திகள் குவிந்திருந்தன.

எடப்பாடியின் `பி’ பிளான்...
பன்னீரின் ஸ்லீப்பர் செல்கள்!

அ.தி.மு.க உட்கட்சிக் குழப்பத்துக்கு முடிவு நெருங்கிவிட்டது. வழிகாட்டுதல்குழுவை அமைப்பதற்கு எடப்பாடி தரப்பு ஓகே சொல்லிவிட்டது. முதல்வர் வேட்பாளராக, பன்னீர் வாயாலேயே தன் பெயரை அறிவிக்கவைத்துவிட்டார் எடப்பாடி.

இது `ஏ’ பிளான் மட்டும்தானாம். இதை மையமாகவைத்து இன்னொரு ரகசிய பிளானைத் தயாரித்திருக்கிறது எடப்பாடி டீம். அதாவது, பன்னீரைச் சுற்றியிருக்கும் நான்கு பேரை மட்டும் வெயிட்டாக கவனித்து, வழிகாட்டுதல்குழுவில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் ஏழு பேரைத் தனது வழிக்குக் கொண்டுவருவதே எடப்பாடியின் `பி’ பிளானாம். அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் அந்த நான்கு பேர் பன்னீரைச் சுற்றியே வலம்வந்தாலும், `சைக்கிள் கேப்’பில் அவர்களிடம் தனித்தனியாக டீல் பேசி முடித்திருக்கிறதாம் எடப்பாடி அண்ட் கோ.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

எட்டுவழிச் சாலையில் சப் கான்ட்ராக்ட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கிரயம், சட்டமன்றத் தேர்தலில் தலா மூன்று சீட் கோட்டா என டீலிங் முடிந்ததில், எடப்பாடி தரப்பு ஏகத்துக்கும் திருப்தியாம். நான்கு பேர் மட்டுமன்றி, நாற்காலி ஆட்டம்கண்ட ஒருவரிடமும், ``பெருசு... கூட்டத்துல எடப்பாடிக்கு சாதகமாத்தான் பேசணும். ஆயுசுக்கும் அந்தப் பதவி உனக்குத்தான்” என்று உத்தரவாதம் அளிக்கப்படவே... இரண்டு நாள்களாக அவர், `என் பதவியை அசைச்சுக்க முடியாது’ என்று சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறார்.

எடப்பாடியின் `பி' பிளான் முதல்... ஸ்டாலின் சரியாகச் சொன்ன பழமொழி வரை! கழுகார் அப்டேட்ஸ்

இந்த விஷயம் கசிந்து பன்னீரின் காதுகளுக்கும் செல்லவே... பதிலுக்கு மர்மப் புன்னகை பூத்தாராம் பன்னீர். விசாரித்தால், ``பிளானின் மாஸ்டர் மைண்டே பன்னீர் அண்ணன்தான். அந்த நாலு பேரையும் ஸ்லீப்பர் செல்லாக மாற்றி, எடப்பாடி பக்கம் சாயவைத்த பிறகே, வழிகாட்டுதல்குழுவுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். இனிமேதான் இருக்கு அண்ணனின் ஆட்டம். இந்த ட்விஸ்ட் எப்படி இருக்கு!” என்று கமுக்கமாகக் கண்சிமிட்டுகிறார்கள் பன்னீருக்கு மிக நெருக்கமானவர்கள்.

யப்பா... கண்ணைக்கட்டுது... ஒரே கும்மிருட்டா இருக்கு. இதுல யாருப்பா அமைதிப்படை அமாவாசை?!

அரசு நிகழ்ச்சியில் `கதர்’ சட்டை!
பொருமும் தி.மு.க-வினர்

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆதரவுடன் மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க கைப்பற்றியதைத் தொடர்ந்து, தி.மு.க - காங்கிரஸ் இடையே மனக்கசப்பு அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேலின் மனைவி உமாமகேஸ்வரிக்குத் துணைத் தலைவர் பதவி கிடைத்தது. ``சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கொண்ட நெருக்கம் காரணமாக, கூட்டணிக்கே துரோகம் செய்துவிட்டார் தர்ம.தங்கவேல்’’ என்று சத்தியமூர்த்திபவனுக்கு ஏகப்பட்ட புகார்க் கடிதங்கள் பறந்தன.

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

அதையடுத்து, சற்று காலம் அ.தி.மு.க-வினருடன் நெருக்கம் பாராட்டாமல் ஒதுங்கியிருந்த தர்ம.தங்கவேல், அக்டோபர் 3-ம் தேதி இலுப்பூரில் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் தொடக்கவிழாவில் முதல் ஆளாகக் கலந்துகொண்டார். இது, கதர்ச் சட்டைகளிடையே அனலைக் கிளப்பியிருக்கிறது. ``அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் மாவட்டத் தலைவருக்கு என்ன வேலை?’’ என்று கூட்டணிக் கட்சியான தி.மு.க-வினரும் சேர்ந்து கொந்தளிக்கிறார்கள். தர்ம.தங்கவேலைப் பற்றி மீண்டும் சத்தியமூர்த்திபவனுக்குப் புகார்க் கணைகள் ஏவப்பட்டுள்ளனவாம். கூட்டணி தர்மத்தில் வேல் பாய்ச்சலாமா தர்ம.தங்கவேல்?

ஆட்டம்போடும் வழக்கறிஞர்!
திருவள்ளூர் கலாட்டா

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வழக்கறிஞர் ஒருவரின் தலையீடு அதிகமாக இருக்கிறதாம். `உயர்’ அதிகாரி ஒருவரின் கணவர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு ஆட்டம்போடுகிறாராம் அந்த வழக்கறிஞர். பழவேற்காடு பகுதியில் துறைமுகம் வரவிருப்பதைத் தெரிந்துகொண்டு, அங்கு பல ஏக்கர் இடத்தை வாங்கியிருக்கும் வழக்கறிஞர், இப்போதே ரியல் எஸ்டேட் வேலையை ஆரம்பித்துவிட்டாராம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினரிடமும் டீலிங் பேசி காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞரின் கொடி பறக்கிறது. பார்த்து... வூட்டுக்காரம்மா வேலைக்கே வேட்டு வெச்சிடப்போறீங்க!

`உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்!’
பழமொழியைச் சரியாகச் சொன்ன `பலே' ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கே.கே.நகர்ப் பகுதி நிர்வாகிகள் சிலர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், `கன்னிகாபுரத்தில் கட்சிக்காக வாங்கப்பட்ட நிலத்தை உள்ளூர் தி.மு.க புள்ளி ஒருவர், தன் உறவினர் பெயருக்கு மாற்றிவிட்டார். இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த நிலத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். புகாரை விசாரிக்கும் பொறுப்பை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் ஸ்டாலின் ஒப்படைத்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இருவரும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுவதால், விசாரணையில் தேக்கம் ஏற்பட்டது. புகாரளித்தவர்கள் ஸ்டாலினிடம் மீண்டும் முறையிட, `நான் பார்த்துக்குறேன். உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்’ என ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின். நல்லவேளை... வழக்கம்போல, `தண்ணி குடிச்சவன் உப்பு தின்பான்’னு பழமொழியை மாத்திச் சொல்லாம போனாரே...

ட்ரெய்னிங்கெல்லாம் சரியாத்தான் போகுதுபோல!

கன்னியாகுமரி காவிகளுக்குப் புது ட்விஸ்ட்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவரை பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்க ஆர்.எஸ்.எஸ் பரிசீலித்துவருகிறதாம். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான அந்த அதிகாரியின் பயோடேட்டா நாக்பூருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

எடப்பாடியின் `பி' பிளான் முதல்... ஸ்டாலின் சரியாகச் சொன்ன பழமொழி வரை! கழுகார் அப்டேட்ஸ்

வேட்பாளராகக் களமிறங்க அந்த அதிகாரியும் சம்மதித்துவிட்டதால், கன்னியாகுமரி பா.ஜ.க புது ட்விஸ்ட்டுக்குத் தயாராகிறது.

பா.ஜ.க-வில் அதிகாரிகளுக்கே அடிக்குது யோகம்!

மிரட்டும் அமைச்சர்கள்...
அப்செட்டில் பெண் அதிகாரி!

சில மாதங்களுக்கு முன்னர், சென்னையை ஒட்டிய `மரியாதை’க்குரிய நகராட்சிக்குப் பெண் அதிகாரி ஒருவர் இடமாறுதலில் வந்திருக்கிறார். வட மாவட்டங்களைச் சேர்ந்த இரு அமைச்சர்களை மீறி இந்த இடமாறுதல் நடந்திருக்கிறது. அதிருப்தியடைந்த அமைச்சர்கள் தரப்பு, அந்தப் பெண் அதிகாரிக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அமைச்சர்கள் தரப்பைச் சந்தித்துச் சமாதானம் பேசிய பெண் அதிகாரி தரப்பு, பசையாக கவனித்ததாம். அதற்குப் பிறகும் குடைச்சல் தொடர்ந்திருக்கிறது. ``இந்தப் பதவிக்குக் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.

`ஓ.பி.எஸ் - எடப்பாடிக்கு ஆளுநரின் அட்வைஸ் முதல் பன்னீரின் மனபாரம் வரை..!' - கழுகார் அப்டேட்ஸ்

பார்த்து செய்யுங்க’’ என்று பெண் அதிகாரி தரப்பு மீண்டும் சமாதானம் பேச... ``சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே நகராட்சியில் நீங்கள் வேலை பார்த்தபோதே உங்கள் பணியில் எங்களுக்கு திருப்தியில்லை. அதனால்தான் இடமாறுதல் செய்தோம். மீண்டும் எங்களை மீறி எப்படி வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். உங்களை இங்கேயிருந்து விரட்டாமல் விட மாட்டோம்’’ என்று பெண் அதிகாரியை மிரட்டியதாம் அமைச்சர்கள் தரப்பு. இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் அந்த அதிகாரி என்ன செய்யலாம் என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துவருகிறாராம்.

பூ புயலாகப் போகிறதோ?

அண்ணா பல்கலை... வி.ஐ.பி கோட்டா
இந்தமுறை இல்லை பேட்டா!

பொறியியல் படிப்புக்கான சேர்க்கை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆண்டுதோறும் வி.ஐ.பி கோட்டாவுக்கு ஒதுக்கப்படும் சீட்களில், இந்தமுறை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு நிபந்தனை ஒன்றை விதித்து, செக் வைத்துவிட்டதாம்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அதாவது, `80 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே கோட்டாவில் சீட் கிடைக்கும்’ என்று முடிவு செய்யப்பட்டிருப்பதால், சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைகிறார்களாம். உயர்கல்வித்துறை அலுவலகம் தொடங்கி கவர்னர் அலுவலகம் வரை இதன் அதிர்வு எதிரொலிக்கிறது.

பொறியியல் `பொறி’யில் சிக்கிக்கொண்ட பெருச்சாளிகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீண்டும் வாரிசு அடாவடி...
வேளாண்துறை புலம்பல்

வேளாண்மைத்துறையில், சுமார் 120 வேளாண் அலுவலர்களுக்கு, வேளாண் உதவி இயக்குநர் பதவி உயர்வு அளிக்கும் கோப்பு சில மாதங்களாகக் கிடப்பில் கிடக்கிறதாம். முதல்வர் அலுவலகத்தின் கண்டிப்பால், சிறிது காலம் அடக்கிவாசித்த அமைச்சர் தரப்பின் வாரிசு பிரமுகர், இந்தக் கோப்பு தேங்கியிருக்கும் விவரத்தை மோப்பம் பிடித்து வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

வேளாண் மண்டலம்
வேளாண் மண்டலம்

ஒவ்வொரு ஏரியாவுக்கும் தகுந்தாற்போல, மூன்று லட்சத்தில் ஆரம்பித்து பத்து லட்ச ரூபாய் வரை வசூல் வேட்டை தூள்பறக்கிறதாம். வாரிசு பிரமுகருக்கு உதவியாளராக இருக்கும் `பெல்’ பிரமுகரிடம், கும்பகோணத்தில்வைத்துப் பணம் கைமாறுவதாகக் கூறுகிறார்கள். `ஆட்சி மேலிடத்துக்குத் தெரிஞ்சா ஆபத்து’ என அமைச்சர் தரப்பிலிருந்தே எச்சரித்தபோது, `தேர்தல் செலவை அவங்களா பார்ப்பாங்க... இந்த முறை நான்தான் நிக்கப்போறேன். செலவு பண்ணணும்ல...’ என்று வாயை அடைத்துவிட்டாராம் வாரிசுப் பிரமுகர்.

அப்பா வாயை அடைக்கலாம்... ஊர் வாயை?

கைவிட்ட டெல்லி!
பின்னணியில் ஓட்டுக் கணக்கு

`அ.தி.மு.க உட்கட்சிக் குழப்பம் பெரிதாகட்டும்’ என்று டெல்லி அமைதி காப்பதன் பின்னணியில் ஓட்டு அரசியல் இருக்கிறது என்கிறார்கள். `அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டாலும், அந்தக் கட்சியால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை’ என்று டெல்லி கருதுகிறதாம். தமிழக அரசியல் விவகாரங்களைக் கையாளும் டெல்லி பா.ஜ.க தலைவர் ஒருவர் சமீபத்தில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரிடம் பேசியிருக்கிறார். அப்போது இந்த ஓட்டு அரசியல் குறித்து விரிவாகப் பேசினாராம். ``உதாரணத்துக்கு கன்னியாகுமரி தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள்... 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லாத பா.ஜ.க கூட்டணி, 37.64 சதவிகித வாக்குகளை கன்னியாகுமரியில் பெற்று வெற்றிபெற்றது.

பா.ஜ.க
பா.ஜ.க

அந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க-வுக்கு 17.79 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்டபோது அந்தக் கட்சியின் வாக்குகள் பா.ஜ.க-வுக்குக் கிடைக்கவில்லை. வெறும் 35.04 சதவிகித வாக்குகளே கிடைத்தன. ஒருவேளை அந்தக் கட்சியின் வாக்குகள் கிடைத்திருந்தால், 45 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருப்பார். அங்கு மட்டுமல்ல... பா.ஜ.க போட்டியிட்ட கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கைத் தொகுதிகளிலும் இதே நிலைமைதான். அ.தி.மு.க-வின் வாக்குகளை பா.ஜ.க-வுக்கு மடைமாற்றும் சக்தி பன்னீர், எடப்பாடிக்கு இல்லாதபோது, இவர்கள் இருவரையும் எதற்குத் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று டெல்லி கருதுகிறது’’ என்று விளக்கமளித்தாராம் அந்த டெல்லி தலைவர்.

ஆளுக்கு ஒரு கணக்கு... இனி அ.தி.மு.க-வோடு பிணக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு