Published:Updated:

அதிமுக-வில் அடுத்த வாரிசு முதல் அமைச்சரின் பழைய பாசம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

அ.தி.மு.க-வில் அடுத்த வாரிசு... | திணறி நின்ற டாக்டர் சரவணன்... | கலக்கத்தில் குவாரி உரிமையாளர்கள்! | தேர்தலுக்குத் தயாராகும் தென்னவர்... | அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்குத் தாரை வார்த்த அமைச்சர்! | கழுகார் அப்டேட்ஸ்

அதிமுக-வில் அடுத்த வாரிசு முதல் அமைச்சரின் பழைய பாசம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

அ.தி.மு.க-வில் அடுத்த வாரிசு... | திணறி நின்ற டாக்டர் சரவணன்... | கலக்கத்தில் குவாரி உரிமையாளர்கள்! | தேர்தலுக்குத் தயாராகும் தென்னவர்... | அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்குத் தாரை வார்த்த அமைச்சர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
அ.தி.மு.க-வில் அடுத்த வாரிசு...
ஜெயபிரதீப்பைக் களமிறக்கும் ஓ.பி.எஸ்!

மூத்த மகன் ரவீந்திரநாத்தை எம்.பி-யாக்கியிருக்கும் ஓ.பி.எஸ்., அடுத்த தேர்தலில் தன் இளைய மகன் ஜெயபிரதீப்பை களமிறக்கும் முடிவில் இருக்கிறாராம். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயபிரதீப் சார்பில் சென்னையிலும் தேனியிலும் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அப்போது சூழல் சரியில்லை என்று சொல்லி, தேர்தல் பிரசார திட்டங்களை வகுக்கும் வேலையை மட்டும் ஜெயபிரதீப் வசம் ஒப்படைத்தார் ஓ.பி.எஸ்.

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

இந்த முறை ஜெயபிரதீப்பை நேரடியாகக் களமிறக்க முடிவு செய்திருக்கும் ஓ.பி.எஸ்., அதற்கு அச்சாரமாகப் பல நிகழ்ச்சிகளில் அவரை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறாராம். பிரதமர் மோடியின் தாயார் இறப்புக்கு துக்கம் விசாரிக்க, எம்.பி ரவீந்திரநாத்தையோ, தன் அணியின் மூத்த நிர்வாகிகளையோ அனுப்பாமல், ஜெயபிரதீப்பை குஜராத்துக்கு அனுப்பியதுகூட இதற்குத்தான் என்கிறது பன்னீர் வட்டாரம். குஜராத்தில், பிரதமரின் தம்பியை மட்டுமல்லாமல், பா.ஜ.க-வின் முக்கியப் புள்ளிகளையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறாராம் ஜெயபிரதீப்.

திணறி நின்ற டாக்டர் சரவணன்...
கோத்துவிட்ட முன்னாள் அமைச்சர்கள்!

பா.ஜ.க-விலிருந்து விலகிய பிறகு எங்கே செல்வது எனத் தெரியாமல் அலைபாய்ந்துகொண்டிருந்த மருத்துவர் சரவணன், ஒருவழியாக அ.தி.மு.க-வில் அடைக்கலமாகியிருக்கிறார். ஆளுங்கட்சியான தி.மு.க-வில் எப்படியாவது மீண்டும் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே அவரது முதல் இலக்காக இருந்தது. ஆனால், பி.டி.ஆரை முதலில் போய்ப் பார்த்துவிட்டார் என்பதற்காக, மூர்த்தி வகையறா அவருக்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தது. தன் மகனின் கல்யாணத்துக்கு அனைத்துக் கட்சியினரையும் அழைத்து கெத்து காட்டியும்கூட சரவணனின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

அதிமுக-வில் அடுத்த வாரிசு முதல் அமைச்சரின் பழைய பாசம் வரை...  கழுகார் அப்டேட்ஸ்

இந்த நேரத்தில்தான் உதயகுமாரும், செல்லூர் ராஜூவும் சரவணனை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். பசையுள்ள பார்ட்டி, முக்குலத்தோர் (அகமுடையார்) ஓட்டு என்று அவர்கள் சொன்னதாலேயே அடைக்கலம் கொடுத்தாராம் எடப்பாடி. பா.ஜ.க எப்படிப் பயன்படுத்திக்கொண்டதோ அதேபோல, கூட்டம் கூட்டவும், தேர்தல் செலவுக்கும் டாக்டரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே ஓகே சொல்வதற்குக் காரணமாம்!

ஆய்வுசெய்த மத்திய அமைச்சர்...
கலக்கத்தில் குவாரி உரிமையாளர்கள்!

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, புதுக்கோட்டை, சிவகங்கைத் தொகுதிகளின் பொறுப்பாளராக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் அந்த வேலையாக புதுக்கோட்டைக்கு வந்தவர், அப்படியே தமிழக சட்டத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியான, வி.லட்சுமிபுரம், ஓடைப்பட்டி பகுதிகளில் ஆய்வுசெய்திருக்கிறார்.

வி.கே.சிங்
வி.கே.சிங்

அப்போது, அங்கிருக்கும் கல்குவாரிகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் ஏரியா மக்கள் புலம்பியிருக்கிறார்கள். ‘பசுமை தீர்ப்பாயம் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதியளித்துவிட்டுச் சென்றிருக்கிறாராம் வி.கே.சிங். இதனால், மாவட்டம் முழுவதுமுள்ள குவாரி உரிமையாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பிரச்னை வந்தால் எப்படிச் சமாளிப்பது என ஆலோசித்துவருகிறார்களாம்.

தேர்தலுக்குத் தயாராகும் தென்னவர்...
காலை வாரக் காத்திருக்கும் சின்னவர்!

நாட்டின் தென்கோடி முனையிலிருந்து எம்.பி-யாகி, இரண்டு முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்த ‘தங்கமான’ அரசியல்வாதிக்கு இன்னமும் ஆசை தீரவில்லையாம். கடைசி வாய்ப்பாக 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் கனவில் இருக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து தனது விருப்பத்தைப் பணிவுடன் முன்வைத்தாராம். போய்விட்டு வந்த வேகத்தில், கடந்த தேர்தலில் தன் காலை வாரிய பிரச்னைகளையெல்லாம் கையிலெடுத்து, அதற்கு நேர் எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டாராம்.

குறிப்பாக, ‘அந்த வர்த்தகத் துறைமுகம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர மாட்டோம்’ என்று சொல்லி தொகுதி மக்களை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் தென்னவர். ‘அவருக்கு வயசு 70 ஆகுது... இன்னும் ஆசை விடலியா... இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு’ என்று இப்போதே கட்டையைப் போடுகிறாராம் மாஜி காக்கி!

காற்றைக் காசாக்கும் திட்டம்...
அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு தாரை வார்த்த அமைச்சர்!

அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்து இங்கும் ‘பவர்ஃபுல்’ அமைச்சராக இருக்கும் அவர், பழைய பாசத்தில் ரத்தத்தின் ரத்தங்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறாராம். திருப்பூர், கரூர் என இரண்டு மாவட்டங்களில் ‘காற்றைக் காசாக்கும்’ மெகா திட்டத்துக்கான ஒப்பந்தம், அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவரின் கம்பெனிக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. அமைச்சரும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வும் பரஸ்பரம் பேசிக்கொண்டு இந்த டீலை முடித்துக்கொண்டதாகக் கொதிக்கிறார்கள், ஆளுங்கட்சி ஆதரவு ஒப்பந்ததாரர்கள். “சொந்தக் கட்சிக்காரர்களிடம் சின்னச் சின்ன வேலைக்கும் கமிஷன் எதிர்பார்க்கிறார். ஆனால், அ.தி.மு.க-காரர்கள் கேட்டால் மிகப்பெரிய பிசினஸை முடித்துக்கொடுக்கிறார். இதையெல்லாம் தலைமையும் கண்டுகொள்வதில்லை” என நொந்துகொள்கிறார்கள் உடன்பிறப்புகள்.