Published:Updated:

பாமக-வை வறுத்தெடுத்த எடப்பாடி முதல் மோடிக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

“செய்திகளை வாட்ஸ் அப்பிலேயே எடுத்துக்கொள்ளும்” என்கிற வாட்ஸ் அப் தகவலை அடுத்து, வாட்ஸ் அப்பிலேயே வந்துவிழுந்தன செய்திகள்... பட்ஜெட் சீசன் என்பதால் அதன் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது!

"இதுதான் கூட்டணி தர்மமா?"
பா.ம.க-வை வறுத்தெடுத்த எடப்பாடி!

அ.தி.மு.க பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தவுடன், தங்களது பிரதான கூட்டணிக் கட்சியான பா.ம.க-வும் வெளிநடப்பு செய்யும் என்று எதிர்பார்த்ததாம். ஆனால், பா.ம.க எம்.எல்.ஏ-க்களோ அ.தி.மு.க தரப்பினர் பக்கம் முகத்தைக்கூட திருப்பாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்த அ.தி.மு.க தரப்பு அதன் பிறகே விருட்டென வெளியேறியது.

எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

இதையடுத்து, அன்றைய தினம் இரவு தனக்கு நெருக்கமான பா.ம.க நபர் ஒருவரை போனில் பிடித்த எடப்பாடி, “இதுதான் கூட்டணி தர்மமா, உங்க முன்னிலேதானே கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிச்சோம். இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லா இல்லை... டாக்டருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என்று வறுத்தெடுத்தாராம்!

எதிர்பார்த்தது அமைச்சர் பதவி
கிடைத்ததோ ‘கைநிறைய லட்டு!’

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவராக சுப்பா ரெட்டி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனங்கள் நடந்துவருகின்றன. கடந்த அ.தி.மு.க அரசு நான்கு உறுப்பினர்களைக் கேட்டுப் பெற்ற நிலையில், தற்போதைய தி.மு.க அரசும் நான்கு உறுப்பினர்களின் பெயர் பட்டியலைத் தயார் செய்து தேவஸ்தானத்துக்கு அனுப்பியிருக்கிறதாம். அதில், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான நந்தகுமாரின் இடம்பெற்றிருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்
தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்

முதல்வரின் தீவிர ஆதரவாளரான நந்தகுமார் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற நிலையில், அமைச்சர் பதவியை பெரிதும் எதிர்பார்த்தார். “பட்ஜெட்டுக்கு பிறகு பார்க்கலாம்” என்று சொன்னவர்கள், தற்போது அதற்கும் யோசிக்கிறார்களாம். அதனால், அப்செட்டில் இருந்தவரை சரிகட்ட இப்போதைக்கு தேவஸ்தான உறுப்பினர் பதவியைக் கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் பதவியை எதிர்பார்த்தவருக்கு கைநிறைய திருப்பதி லட்டை கொடுத்து அனுப்பிவிட்டார் ஸ்டாலின் என்று கிண்டலடிக்கிறார்கள் வேலூர் மாவட்ட உடன்பிறப்புகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அழைப்பு விடுக்கும் மோடி...
பிடிகொடுக்காத ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் தலைமைச் செயலாளர் ஶ்ரீ அஸ்வனி குமாருக்கும் பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு காமராஜர் மணி மண்டபம் திறப்பது பற்றி ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலாளருக்கு அழைப்பு விடுத்த ரங்கசாமி, அவரை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கிறார். இதில் கடுப்பான தலைமைச் செயலாளர் விருட்டென கிளம்பிச் சென்றதுடன், மறுநாள் விடுப்பு போட்டுவிட்டார். இதனால், ரங்கசாமி நினைத்த தேதியில் மணி மண்டபத்தை திறக்க முடியவில்லை.

பிரதமர் மோடியுடன் ரங்கசாமி
பிரதமர் மோடியுடன் ரங்கசாமி

கடுப்பான ரங்கசாமி, தலைமைச் செயலாளரை மாற்றும்படி ஆளுநர் தமிழிசையிடம் புகார் கூறியிருக்கிறார். இன்னொரு பக்கம் புதுச்சேரியில் விரைவில் காலியாகவுள்ள ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெறுவதற்காக பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது. அதுகுறித்துப் பேசுவதற்காக ரங்கசாமியை மோடி டெல்லிக்கு அழைத்தும், அதற்கும் பிடிகொடுக்கமால் வழக்கம்போல மெளனசாமியாக வலம்வருகிறார் ரங்கசாமி!

தமிழக பா.ஜ.க தலைவர் பாரபட்சம்...
ராஜினாமா கடிதம் அனுப்பிய ஊடக பிரமுகர்

தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் புகைச்சல்கள் அதிகமாகியிருக்கிறதாம். புதிய தலைவரின் பாரபட்ச நடவடிக்கைகளால் பாதிப்படைந்த அந்தக் கட்சியின் ஊடக பிரிவை கவனித்துவந்தவர் தனது பதவியை ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

கமலாலயம்
கமலாலயம்

ஆனால், ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல், விடுப்பு மட்டும் தருகிறோம் என்று தலைமையிலிருந்து பதில் வந்திருக்கிறது. இதையடுத்து, “நான் பேச வேண்டிய இடத்தில் பேசிக்கொள்கிறேன்” என்று முகத்தை திருப்பிக்கொண்டு வடக்கு நோக்கி பயணமாகியுள்ளார்.

‘‘அ.தி.மு.க கலந்துக்காததை யூஸ் பண்ணிக்கோங்க!’’
கட்சியினருக்கு கமல் அட்வைஸ்

‘‘அவங்க பெட்ரோல் விலையை அஞ்சு ரூபாய் குறைக்கிறேன்னு சொன்னப்போ லிட்டர் விலை எவ்வளவு இருந்துச்சு? இன்னைக்கு எவ்வளவு? ஆனா, மூணு ரூபாய் குறைச்சதையே சொல்லி விலையை நூறுக்கும் கீழே கொண்டுபோயிட்டோம்னு பெரிய சாதனையா சொல்லிட்டு இருக்காங்க. மக்கள்கிட்ட இதையெல்லாம் நீங்க ஞாபகப்படுத்தணும். அதனால, விவாதங்கள்ல கருத்துகளைத் தெளிவா எடுத்து வையுங்க’’ - மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், தங்கள் கட்சியின் சார்பில் பட்ஜெட் குறித்த விவாதங்களில் கலந்துகொண்ட பொன்ராஜ், செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோரிடம் செய்திருக்கும் அட்வைஸ் இது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதுமட்டுமல்லாமல், ‘‘அ.தி.மு.க-வினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்கள்ல கலந்துக்குறது இல்ல. இதை நமக்குச் சாதகமா பயன்படுத்திக்கோங்க’’ என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

‘‘அண்ணன் பேச்சு சரியா கேட்டிருக்கு!’’
சீமான் பெருமிதம்...

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், இளைஞர்களை, வேளாண்மையை நோக்கி கொண்டுவருவதற்காக, ‘ஊரக இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்’, பனைமரங்களை பாதுகாக்கும் விதமாக, ‘பனை பாதுகாப்புத் திட்டம்’, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, ‘இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்’, `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீமான்
சீமான்

இந்த அறிவிப்புகளை அடுத்து, ‘‘பாரு... நம்ம கட்சியோட வரைவறிக்கையில உள்ள விஷயங்களைதான் அறிவிச்சிருக்காங்க. அண்ணன் பேச்சு யாருக்குக் கேட்கணுமோ, அவங்களுக்கு சரியா கேட்டிருக்கு’’ என தன் தம்பிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எடப்பாடியை காக்கவைத்த பன்னீர்!

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்ததை அடுத்து, எடப்பாடி தன் ஆதரவு எம்.எல்.ஏ-களுடன் செய்தியாளர்களை சந்திக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். ஆனால், பன்னிர் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றுவிட்டு, 15 நிமிடம் வரை அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால், எடப்பாடி வேறுவழியில்லாமல் காத்திருக்க வேண்டியிருந்தது.

எடப்பாடி -  பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

கடந்த ஆட்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்கமாக பன்னீர்தான் எடப்பாடிக்காகக் காத்திருப்பார். ஆனால், இப்போதெல்லாம் எடப்பாடியே பன்னீருக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

அடுத்த கட்டுரைக்கு