Published:Updated:

ஜகா வாங்கிய இந்து முன்னணி முதல் கறைபட்ட கைக்கு சிபாரிசு செய்த பி.டி.ஆர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

தொடர்பு எல்லைக்கு வெளியில் எம்.எல்.ஏ... | ஜகா வாங்கிய இந்து முன்னணி... | நேத்திக்கடனை நிறைவேற்றிய அமைச்சர்... | இலவு காத்த கிளியான கவுன்சிலர்கள் கதை... | கூட்டணி அமையும் முன்பே குழப்பம்... | மதுரை அதிகாரியின் மாற்றல் நாடகம்! | கழுகார் அப்டேட்ஸ்

ஜகா வாங்கிய இந்து முன்னணி முதல் கறைபட்ட கைக்கு சிபாரிசு செய்த பி.டி.ஆர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

தொடர்பு எல்லைக்கு வெளியில் எம்.எல்.ஏ... | ஜகா வாங்கிய இந்து முன்னணி... | நேத்திக்கடனை நிறைவேற்றிய அமைச்சர்... | இலவு காத்த கிளியான கவுன்சிலர்கள் கதை... | கூட்டணி அமையும் முன்பே குழப்பம்... | மதுரை அதிகாரியின் மாற்றல் நாடகம்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
தொடர்பு எல்லைக்கு வெளியில் எம்.எல்.ஏ...
புலம்பித் தீர்க்கும் ர.ர-க்கள்!

மஞ்சள் மாவட்டத்தின் ‘பெரிய’ தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ., வெற்றிபெற்ற பிறகு பொதுமக்கள் யார் போன் அடித்தாலும் எடுப்பதில்லையாம். அ.தி.மு.க நிர்வாகிகளின் தொலைபேசிக்கும் நோ ரெஸ்பான்ஸ். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருடைய செல்போனில் பதிவுசெய்திருக்கும் எண்களைத் தவிர மற்றவர்களின் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ. ஆனால் தி.மு.க அமைச்சர்கள் போன் செய்தால் மட்டும் விழுந்தடித்து அட்டன் செய்து, அன்பொழுகப் பேசுகிறாராம். “மக்களை மதிக்காதவர்களின் நிலைமை கடைசியில் என்னவாகும் என்று பாவம் இவருக்குத் தெரியவில்லைபோல” என்று சொந்தக்கட்சிக்காரர்களே புலம்பித் தீர்க்கின்றனர்.

ஜகா வாங்கிய இந்து முன்னணி...
உடன்பிறப்புகள் புடைசூழ வலம்வந்த ராசா!

தி.மு.க துணை பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஆ.ராசாவுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு அளிக்க உடன்பிறப்புகள் தயாரானார்கள். இன்னொரு பக்கம் ‘சர்ச்சைக்குரிய’ கருத்துக்காக மாவட்ட எல்லையிலேயே அவரது வாகனத்தை முற்றுகையிடவும், மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டது பா.ஜ.க - இந்து முன்னணி. ஏற்கெனவே கடையடைப்பு போராட்ட வெற்றியால் நெருக்கடியில் இருந்த காவல்துறை பர்லியார் முதல் கூடலூர் வரை போலீஸ் படையைக் குவித்ததோடு, போராட்டம் நடத்தினால் கடுமையான வழக்குகள் பாயும் என்றும் எச்சரித்திருக்கின்றனர்.

ஜகா வாங்கிய இந்து முன்னணி முதல் கறைபட்ட கைக்கு சிபாரிசு செய்த பி.டி.ஆர் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இதைக் கேட்டு இந்து முன்னணியினர் ஜகா வாங்கியிருக்கிறார்கள். கடைசியில் கொஞ்சம் பா.ஜ.க-வினர் மட்டும் வாயில் கறுப்புத்துணியைக் கட்டிப் போராடி, கலைந்திருக்கிறார்கள். உடன்பிறப்புகள் புடைசூழ பல பகுதிகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் பந்தாவாகப் பங்கேற்று, பத்திரமாக மலை இறங்கியிருக்கிறார் ஆ.ராசா.

நேத்திக்கடனை நிறைவேற்றிய அமைச்சர்...
கொண்டாட்டத்தில் உடன்பிறப்புகள்!

சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் அமைச்சரானால், தூங்கா நகர முனீஸ்வரர் கோயிலுக்கு கிடா வெட்டி பொங்கல்வைப்பதாக வேண்டியிருந்தார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் அமைச்சர். வேண்டுதல் நிறைவேறினாலும், நேர்த்திக்கடனை நிறைவேற்ற நேரம் கிடைக்காமல் இருந்திருக்கிறார். சமீபத்தில் அடுத்தடுத்து சில சர்ச்சைகளில் சிக்க, ‘எல்லாவற்றுக்கும் முனீஸ்வரர் கோபம்தான் காரணம்’ என்று பயந்தவர், சமீபத்தில் கோயிலுக்குப் போய் கிடா வெட்டி விருந்து படைத்து வேண்டுதலையும் நிறைவேற்றிவிட்டார். கூடவே, கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி‌ப் பரிசாக தகுதிக்கேற்ப லட்டுகளும், பூந்தியுமாக வழங்கி மனம் குளிரச் செய்தாராம். ஒரு தொகுதியில் மட்டும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கச் சொன்ன இனிப்புகளை எம்.எல்.ஏ-வும், அவரின் சிஷ்யரும் அமுக்கிவிட, விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பதறிப்போனாராம் அமைச்சர். இப்போது விடுபட்ட ஆட்களுக்கும் இனிப்பு போய்ச் சேர்ந்திருப்பதால், கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

இலவு காத்த கிளியான கவுன்சிலர்கள் கதை...
அமைச்சரும் சேர்மனும் கைவிட்ட சோகம்!

‘புரம்’ நகர்மன்றக் கூட்டத்தில் பெண் சேர்மனை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. டெண்டர் ஒன்றில் பெறப்பட்ட ஸ்வீட் பாக்ஸில், கவுன்சிலர்கள் யாருக்கும் அவர் பங்கு தராததாலேயே இந்த எதிர்ப்பு என்கிறார்கள் உள்விவகாரம் தெரிந்தவர்கள். “இப்போதைக்குக் கூட்டத்தை முடித்துக்கொடுங்கள். என் அப்பா வந்ததும் உங்களுக்குச் சேரவேண்டியதை ‘க்ளியர்’ பண்ணச் சொல்லுறேன்” என்று அந்த இளம் சேர்மன் சொன்னதை ஏற்று தி.மு.க கவுன்சிலர்கள் மட்டும் காத்திருந்தார்களாம்.

லஞ்சம்
லஞ்சம்

பல மணி நேரம் காத்திருந்தும் அப்பா நிர்வாகி வராததால், கடுப்பான அவர்கள் மாவட்ட அமைச்சரைப் பார்த்து புகார் வாசித்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சரோ... “அவரு கொடுக்கிறதை வாங்கிக்கிட்டுப் போங்கய்யா... சும்மா பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. எதிர்க்கட்சிகூடச் சேர்ந்து ஒத்து ஊதுறீங்களா?” எனச் சீறிவிட்டாராம். “நாங்க என்ன ‘ஓசி’ வாங்கவா வந்தோம், எங்க பங்கைத்தானே கேட்டோம்?” என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

கூட்டணி அமையும் முன்பே குழப்பம்...
ஐ.ஜே.கே - பா.ஜ.க மோதல்!

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து பல ஆண்டுகளாக வேலை பார்த்துவந்தார் பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர். ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து நழுவி பா.ஜ.க கூட்டணியில் ஒட்டிக்கொண்ட ஐ.ஜே.கே அதே தொகுதியைக் கேட்டிருக்கிறதாம். “அவங்க நினைச்சதைச் சாதிச்சுட்டா, இந்தவாட்டியும் நாம எம்.பி-ஆக முடியாதே...” என்று கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் அந்த மாநில நிர்வாகி.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

எனவே, “பாரிவேந்தருக்குத் தொகுதியில் நல்ல பெயர் இல்லை. தி.மு.க கூட்டணியில் வெற்றிபெற்றதோடு சரி. எதுவுமே மக்களுக்குச் செய்யவில்லை. அவர் நின்றால் நிச்சயம் தோல்வியைச் சந்திப்பார்” என்று ஐ.ஜே.கே-வுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தலைமையிடம் ஓதிக்கொண்டிருக்கிறாராம் அவர். கூட்டணி உறுதியாகும் முன்பே பிரித்துவிடுவார்போல என்று காவிக் கட்சிக்காரர்களே சிரிக்கிறார்கள்.

கறைபட்ட கைக்கு சிபாரிசு செய்தாரா பி.டி.ஆர்?
மதுரை அதிகாரியின் மாற்றல் நாடகம்!

‘ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட மதுரை மாநகராட்சியில் நடந்த அனைத்து முறைகேடுகளிலும் அந்தப் பொறியாளருக்கும் பங்கு உண்டு’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு குற்றம்சாட்டினார் அன்றைய எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தி.மு.க ஆட்சி அமைந்ததும், அந்த அதிகாரி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், சீனியர் அமைச்சர் ஒருவரிடம் சில ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டார் அந்த அதிகாரி.

மதுரை
மதுரை
மணிகண்டன்

அவர்மீது மீண்டும் பல்வேறு முறைகேடு புகார்கள் தலைமைச் செயலாளருக்குச் செல்ல, உடனடியாகக் கோவைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், அவர் மறுபடியும் மதுரைக்கு வந்திருக்கிறார். விசாரித்தால், மேயர் வழியாக பி.டி.ஆரை கன்வின்ஸ் செய்துதான் அவர் மதுரைக்கு மாற்றல் வாங்கியதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தன்மீது புகார் வாசித்த அமைச்சரின் சிபாரிசையே பிடித்து மதுரைக்கு வந்திருப்பதால், கொஞ்சம்கூட பயமே இல்லாமல், கெத்தாக நடந்துகொள்கிறாராம் அந்த அதிகாரி.