Published:Updated:

பூமர் அங்கிள் என பொங்கிய டி.ஆர்.பி.ராஜா முதல் கமலாலயத்தில் குவியும் புகார்கள் வரை -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

கீதா ஜீவனின் `அடடே’ அரசியல்! | மன்னிப்புக் கேட்டு அகற்றிய உதயநிதி! | அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆத்திரமா? | ‘ரெய்டில் சிக்கியவருக்குப் பதவியா?’ | அமைச்சர் மகனின் பிறந்தநாள் அலப்பறைகள்... | கடுப்படித்த மாஜி காக்கி! | கழுகார் அப்டேட்ஸ்

பூமர் அங்கிள் என பொங்கிய டி.ஆர்.பி.ராஜா முதல் கமலாலயத்தில் குவியும் புகார்கள் வரை -கழுகார் அப்டேட்ஸ்

கீதா ஜீவனின் `அடடே’ அரசியல்! | மன்னிப்புக் கேட்டு அகற்றிய உதயநிதி! | அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆத்திரமா? | ‘ரெய்டில் சிக்கியவருக்குப் பதவியா?’ | அமைச்சர் மகனின் பிறந்தநாள் அலப்பறைகள்... | கடுப்படித்த மாஜி காக்கி! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...
கீதா ஜீவனின் `அடடே’ அரசியல்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 10-ம் தேதி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் ‘மாற்றத்துக்கான மாநாடு’ நடந்தது. இந்த மாநாட்டு மேடையில் தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த சில தி.மு.க கவுன்சிலர்கள் பா.ஜ.க-வில் இணையப்போவதாகத் தகவல் கசிந்தது. இதையடுத்து தி.மு.க கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் மாநகரச் செயலாளர் தலைமையில் குற்றாலத்துக்கு டூர் அழைத்துச் செல்ல உத்தரவிட்டார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன். அதே நாளில் தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்த ‘மெகா மருத்துவ முகாமில்’ கவுன்சிலர்கள் இல்லாமல் மேயர் ஜெகன் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

“இந்த நிகழ்ச்சியின் மூலம் பா.ஜ.க-வில் தி.மு.க கவுன்சிலர்களைச் சேரவிடாமல் தடுத்ததோடு, மாநகராட்சி கவுன்சிலர்களெல்லாம் என் பக்கம்தான் என்பதைத் தன் மேயர் தம்பிக்கும் உணர்த்திவிட்டார் அமைச்சர்” என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

மக்களுக்கு இடையூறாக பில்டப் கொடிக்கம்பங்கள்...
மன்னிப்புக் கேட்டு அகற்றிய உதயநிதி!

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலை, வொயிட் சாலை சந்திப்பில் 55 அடி உயரத்தில் ஒரு கொடிக்கம்பமும், சூளைமேடு பகுதியிலுள்ள நெல்சன் மாணிக்கம் நெடுஞ்சாலையில் 45 அடி உயரத்தில் ஒரு கொடிக்கம்பமும் புதிதாக நிறுவப்பட்டன. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிற்றரசு ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட கொடிக்கம்பங்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் கொடியேற்றினார். பொதுவாக பிரமாண்ட கொடிக்கம்பங்களெல்லாம் தனியார் இடத்தில்தான் நிறுவப்படுவது வழக்கம்.

பூமர் அங்கிள் என பொங்கிய டி.ஆர்.பி.ராஜா முதல் கமலாலயத்தில் குவியும் புகார்கள் வரை -கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், நடைமேடையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் வாங்காமல் இந்தக் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இவற்றை அகற்றக் கோரி, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்களும் எழுந்தன. இதையடுத்து, “ஏன் இப்படித் தேவையில்லாத சர்ச்சையில் என்னைச் சிக்கவைத்து தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?” என மா.செ சிற்றரசுவைக் கண்டித்த உதயநிதி, உடனடியாக அந்தக் கொடிக்கம்பங்களை அகற்றவும் உத்தரவிட்டாராம். அவர் சொன்ன சில மணி நேரத்திலேயே அந்தக் கம்பங்களிலிருந்து தி.மு.க கொடிகள் இறக்கப்பட்டன. பிறகு கொடிக்கம்பங்களும் க்ளீன்!

ட்விட்டரில் பொங்கிய டி.ஆர்.பி.ராஜா...
அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆத்திரமா?

தி.மு.க ஐடி விங் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா போட்ட ஒரு ட்வீட் கட்சிக்குள் களேபரத்தை ஏற்படுத்திவிட்டது. தனது கட்சியின் மெத்தப்படித்த அமைச்சரைத்தான் அவர் இப்படிச் சாடுகிறார் என்று சொல்லி, நிறைய பேர் அதை ரீட்வீட் செய்தார்கள். ``ஒரு கட்சி மேடையில் இருந்துகொண்டே, இன்னொரு கட்சிக்குத் தீப்பந்தம் பிடிப்பதில் (Double Degree!) யார் இந்தப் பொழப்பை பெருமையாகச் சுமக்கும் அந்த #boomeruncle?’’ என்பதே அந்த ட்வீட். மேலிடத்திலிருந்து அழைத்து, ‘யார் அந்த பூமர் அங்கிள்?’ எனக் கேட்க, “பா.ஜ.க ஆதரவாளர் ஒருவர் தொடர்ச்சியாக என்னுடன் ட்விட்டரில் விவாதம் செய்வதால், அவரை டார்கெட் செய்தே இந்த ட்வீட்டைப் போட்டேன்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

அது இப்படித் தவறாகப் பொருள் கொள்ளப்படும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்ததோடு ட்வீட்டையும் அழித்திருக்கிறார் டி.ஆர்.பி. ஆனால், “அமைச்சரவை விரிவாக்கத்தில் தனக்கு இடம் கிடைக்காததற்கு இவரே காரணம் என்ற கோபத்தில் டபுள் டிகிரி அமைச்சர் ஒருவரை டார்கெட் செய்தே அந்த ட்வீட் போட்டிருக்கிறார்” என்கிறார்கள் டி.ஆர்.பி.ராஜாவை நன்கறிந்தவர்கள்.

`ரெய்டில் சிக்கியவருக்குப் பதவியா?’
கமலாலயத்தில் குவியும் புகார்கள்!

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட மாவட்டத் தலைவர் விஜயகுமாருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காரணம், மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்பட்ட முருகானந்தம்! அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விஜிலென்ஸ் ரெய்டுக்கு ஆளான அவர், அரசு வேலையிலிருந்து விலகியவர். ரியல் எஸ்டேட், கனிம வளக் கொள்ளையோடு தொடர்புடைய இவர், தன்னுடைய பொருளாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே பா.ஜ.க-வில் இணைந்தாராம். “கட்சியில் சேர்ந்து ஒரு மாதம்கூட ஆகாத முருகானந்தத்துக்கு மாவட்டப் பொருளாளர் பதவி...

கருப்பு முருகானந்தத்தோடு, தொழிலதிபர் முருகானந்தம்.
கருப்பு முருகானந்தத்தோடு, தொழிலதிபர் முருகானந்தம்.

புதுக்கோட்டையில் ஓட்டே இல்லாதவருக்கு நகர் (மேற்கு) தலைவர் பதவி... பா.ஜ.க மீட்புக்குழு ஆரம்பித்து பா.ஜ.க-வுக்கு எதிராகவே செயல்பட்ட இன்னொருவருக்கு நகர் (கிழக்கு) தலைவர் பதவியா... இந்தப் பட்டியலை ரத்துசெய்ய வேண்டும்” என்று மாவட்டத் தலைவருக்கு எதிராக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அதோடு, இது குறித்து கமலாலயத்துக்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறார்களாம். மாநில நிர்வாகிகள் நியமனத்திலேயே அல்லாடிக்கொண்டிருக்கும் தலைமை இந்தப் பிரச்னை வேறா என்று தலையில் அடித்துக்கொண்டதாகத் தகவல்.

அமைச்சர் மகனின் பிறந்தநாள் அலப்பறைகள்...
அரசியல் என்ட்ரிக்கு அடித்தளம்!

உதயநிதி அமைச்சராவதையொட்டி, அவரது பிறந்தநாளை கொண்டாடித்தீர்த்தார்கள் தி.மு.க-வினர். இந்தக் கொண்டாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார் மத்திய மாவட்ட சீனியர் அமைச்சர். ஆனால், அவரின் மகனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர். இத்தனைக்கும் அந்த வாரிசு கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. மாநகர் முழுக்க ஃபளெக்ஸ் பேனர், போஸ்டர் வைத்ததோடு, கேரள செண்டை மேளம், 39 கிலோ பிரமாண்டமான கேக், வெள்ளி வாள் பரிசு, ஐந்தாயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி என்று விழாவை அமர்க்களப்படுத்திவிட்டார்கள் அமைச்சரின் அடிப்பொடிகள். “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகனைக் களமிறக்கத்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தன்னுடைய மகனின் பிறந்தநாளை அமர்க்களப்படுத்துபவர், தலைவரின் மகன் பிறந்தநாளை கொண்டாடாததைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று முணுமுணுத்திருக்கிறார்கள் நிர்வாகிகள் சிலர்.

மதுரையிலும் எதிர்க்கோஷ்டி...
கடுப்படித்த மாஜி காக்கி!

காவிக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் மாஜி காக்கிக்கு, தமிழ்நாடு முழுக்க இருப்பதுபோலவே, மதுரையிலும் எதிர்க்கோஷ்டி ஃபார்ம் ஆகியிருக்கிறதாம். ஒரு ‘சீனி’யர் நிர்வாகிதான் அதன் தளபதியாம். இதனால், அந்த நபரைப் பாய்ந்து, பிராண்டுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார் காக்கி. சென்னையில் சமீபத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘நமக்கு முக்கிய எதிரி தி.மு.க... அவர்களிடம் நம் நிர்வாகிகள் பல விஷயங்களுக்காகச் செல்கிறீர்கள். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் உறவினர்போலக் கலந்துகொள்கிறீர்கள். இனி இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்’ என்று சீறியது அந்த ‘சீனி’யரை நோக்கித்தானாம். அந்த சீனியர் நிர்வாகி, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆருடன் நெருங்கிய தொடர்புவைத்திருப்பதை மதுரைக்கார இளைஞர்கள் சிலர் கொளுத்திப்போட்டதே இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். காக்கியைக் கவிழ்ப்பதற்காக அடிபட்ட புலியாகக் காத்திருக்கிறாராம் அந்த ‘சீனி’யர்.