Published:Updated:

செல்லூர் ராஜூவின் அமைதி முதல் பாஜக நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

சந்தேக வளையத்துக்குள் வைத்த இ.பி.எஸ்! | பெண் அதிகாரியின் ‘வெல்த்’ ரகசியம்! | தகவல்களைத் திரட்டும் உடன்பிறப்புகள்! | வாக்குறுதியை மீறிய அமைச்சர்... | போட்டுக்கொடுத்த போலீஸ்! | பா.ஜ.க நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம்... | கழுகார் அப்டேட்ஸ்

செல்லூர் ராஜூவின் அமைதி முதல் பாஜக நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

சந்தேக வளையத்துக்குள் வைத்த இ.பி.எஸ்! | பெண் அதிகாரியின் ‘வெல்த்’ ரகசியம்! | தகவல்களைத் திரட்டும் உடன்பிறப்புகள்! | வாக்குறுதியை மீறிய அமைச்சர்... | போட்டுக்கொடுத்த போலீஸ்! | பா.ஜ.க நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம்... | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
அமைதியாக இருக்கும் செல்லூரார்...
சந்தேக வளையத்துக்குள் வைத்த இ.பி.எஸ்!

தீர்ப்பு சாதகமாக வந்ததும், ‘எல்லோரும் ஒன்றிணைவோம்’ என்று ஓ.பி.எஸ் அழைப்புவிடுத்தார் அல்லவா... அதை மறுத்தும், ஓ.பி.எஸ்-ஸை எதிர்த்தும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேட்டி அளித்தார்கள். ஆனால், எப்போதும் ‘எகிடு தகிடாகப்’ பேசும் செல்லூர் ராஜூவோ சமீப நாள்களாக வார்த்தைகளை அளந்து பேசுகிறார். ஓ.பி.எஸ்-ஸை ஒரு வார்த்தைகூட விமர்சித்துப் பேசவில்லை.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

இது எடப்பாடி தரப்புக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “இறுதித் தீர்ப்பு வரும் வரைக்கும் யாரைப் பற்றியும் பேசாமல் செல்லூரார் காய்நகர்த்திவருகிறார். ஓ.பி.எஸ் தரப்போடும் உறவில் இருக்கிறார்” என்று கிளம்பிய செய்திகளெல்லாம் உண்மையாக இருக்குமோ என அவரைச் சந்தேக வளையத்துக்குள் வைத்திருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

மலைப்பிரதேசத்தில் நிலம்...
பெண் அதிகாரியின் ‘வெல்த்’ ரகசியம்!

பசுமையான துறையின் பெண் அதிகாரி, சமீபத்தில் குளு குளு மாவட்டத்தில் வி.வி.ஐ.பி-கள் வாழும் பகுதியில், பினாமி பெயரில் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறாராம். துறையின் ஆளுங்கட்சிப் பிரதிநிதியையும் தாண்டி, அந்தப் பெண் அதிகாரி பவர் சென்டராக வலம்வருவதே எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார்கள். வெளியில் நேர்மையானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், திரைமறைவில் புகுந்து விளையாடுகிறாராம். டிரான்ஸ்ஃபர்களுக்கே 5 முதல் 20 லட்டுகள் வரை வாங்கிவிடுகிறாராம்.

நிலம் வாங்கிய அமைச்சர்...
தகவல்களைத் திரட்டும் உடன்பிறப்புகள்!

‘டிராவல்’ அமைச்சர், தனது மாவட்டத்தின் மெயின் ஏரியாவில் 35 ஏக்கர் நிலத்தை வாங்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறாராம். தனது பெயரில் அதைப் பதிவு செய்யாமல், நெருக்கமான நண்பர்கள் சிலரின் பெயரில் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். “அமைச்சருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது... நமக்குச் சிறு பங்குகூடத் தரலியே?” என்று சொந்தக் கட்சி நிர்வாகிகளே விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். விவரங்கள் கைக்கு வந்ததும், இந்த ‘நில’ விவகாரத்தை அறிவாலயம் வரை கொண்டுசெல்லும் திட்டத்தோடு தீயாக வேலை செய்கிறது ஒரு டீம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எம்.பி தேர்தலுக்கு அஸ்திவாரம்...
அரசு நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் அமைச்சரின் வாரிசு!

கைத்தறித்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளருமான காந்தி தன் மகன் வினோத்தை அரசியல்ரீதியாக முன்னிலைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஏற்கெனவே, கட்சியில் பல மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டதாக அமைச்சர்மீது புகார் வாசிக்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த நிலையில், தற்போது அரசாங்க நிகழ்ச்சிகளிலும் தனக்கு பதிலாக மகனை அனுப்பி அதிகாரிகளையும் ‘சலாம்’ போட வைத்திருக்கிறாராம் அமைச்சர்.

செல்லூர் ராஜூவின் அமைதி முதல் பாஜக நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

சமீபத்தில் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில், அதிகாரிகள் புடைசூழ தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார் வினோத். “ஏன் இப்படி எல்லா இடங்களிலும் வாரிசை முன்னிறுத்துகிறார் அமைச்சர்?” என்று விசாரித்தால், “அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் அடுத்த வேட்பாளரே அவர்தான்” என்று கண்ணடிக்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

வாக்குறுதியை மீறிய அமைச்சர்...
படு குஷியில் பா.ஜ.க!

பட்டாசு மாவட்டத்தில் பெருவாரியாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிக்கும், மாவட்டத்தின் மூத்த அமைச்சருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. குறிப்பிட்ட அந்தச் சமூகம் சார்ந்த சங்கத்து பிரச்னையிலோ, ஊர் விஷயத்திலோ தலையிட மாட்டோம் என உறுதி கொடுத்துத்தான், தேர்தலில் அவர்களின் ஆதரவை பெற்றிருந்தாராம் அமைச்சர். ஆனால், சமீபத்தில் கட்சிப் பிரதிநிதி ஒருவரைச் சங்கத்துக்குள் நுழையவிட்டு ஆழம் பார்த்தாராம். இதனால் டென்ஷனான சங்கத் தரப்பு, ‘அதிகாரத்தை அதிகாரத்தாலதான் ஒடுக்கணும்’ என்று பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஒரு கூட்டத்தோடு பா.ஜ.க-வில் சேரவும் நாள் குறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால், அமைச்சர் வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், மாவட்டத்தில் ஒரு பெரும் சமூகத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது என்று படுகுஷியில் இருக்கிறார்கள் உள்ளூர் பா.ஜ.க-வினர்.

கவனிக்கச் சொன்ன அதிகாரி...
போட்டுக்கொடுத்த போலீஸ்!

அல்வா மாவட்டத்தில் பணியாற்றிவரும் பெரிய காவல் அதிகாரி, முக்கியப் பிரச்னைக்காகத் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், வசூல் செய்வதற்கு தனக்கு விசுவாசமான ஒரு டீமையே வைத்திருக்கிறாராம். “கவனிங்க...” என்பதன் அர்த்தம் புரிபவர்களுக்கு உடனடி ஆக்‌ஷனாம். மற்றவர்களுக்கு இழுத்தடிப்பாம். இந்தத் தகவலை மேலிடத்துக்குச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள். அவர்களில் ஒருவர், பூனைக்கு மணி கட்டிய கதையாக இந்தத் தகவலை டி.ஜி.பி அலுவலகத்துக்குப் போட்டுக் கொடுத்துவிட்டாராம்.

``உங்க மேல நடவடிக்கை எடுத்தா எனக்குத்தான் அசிங்கம்...’’
கடுப்பில் கத்திய ஐ.பி.எஸ் அதிகாரி!

சென்னைக்கு ஆந்திராவிலிருந்து தினம்தோறும் மூட்டை, மூட்டையாக கஞ்சா கடத்திவரப்படுகிறதாம். காய்கறி லாரிகளில் மூட்டையோடு மூட்டையாக வரும் கஞ்சா குறித்து போலீஸாருக்குத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருக்கிறார்களாம். இது குறித்த புகார் டி.ஜி.பி அலுவலகத்துக்கே போயிருக்கிறது.

கஞ்சா போலீஸ் பட்டியலில் இருந்த திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய அதிகாரிகள், ஆவடி மாநகர போலீஸ் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார் பெரிய அதிகாரி ஒருவர். “ஊரெல்லாம் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவு போட்டால், நீங்களும் சேர்ந்து கடத்துறீங்களா... ச்சீ... உங்க மேல நடவடிக்கை எடுத்தால் எனக்கும், நம்ம துறைக்கும்தான் அசிங்கம். போய்த் தொலைங்க...” என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

பா.ஜ.க நிர்வாகிகளின் ரௌடிகள் சகவாசம்...
கடுப்பிலிருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள்!

புதுச்சேரி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் பலர் ரௌடிகளுடனும், குற்றவாளிகளுடனும் வெளிப்படையாகக் காட்டிவரும் நெருக்கம், அந்தக் கட்சியினரை அதிருப்தியடைய வைத்திருக்கிறதாம். அது குறித்து அந்தக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் சிலர் பட்டும் படாமலும் புத்திமதி கூறியும் அந்த முக்கியத் தலைவர்கள் கண்டுகொள்வதில்லையாம். அந்த முக்கிய நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், வட்டிக்கு விட்டிருக்கும் பணத்தை வசூலிக்கவும் அந்த ரௌடிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். அதனால் ஏக கடுப்பில் இருக்கிறார்களாம் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.