Published:Updated:

ஸ்டாலினுக்காகத் தயாராகும் ஈ.சி.ஆர் வீடு முதல் குழப்பத்தில் செந்தில் பாலாஜி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
News
கழுகார் அப்டேட்ஸ்...

`உடனே மெயிலைப் பார்க்கவும்’ என்று வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மெயிலில் அவர் அனுப்பிய அசத்தல் செய்திகள் இங்கே...

முதல்வருக்காகத் தயாராகும் ஈ.சி.ஆர் வீடு...
லண்டன் விசிட்டுக்கு மாற்று ஏற்பாடு!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்வதை தள்ளிப்போட்டுக்கொண்டேயிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லண்டனில் அவருக்கு வழக்கமாகச் செய்யப்படும் உடல் பரிசோதனைகளை சென்னையில்வைத்தே செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் லண்டன் மருத்துவர்களோடு ஆலோசனை செய்து, சென்னையிலேயே சிகிச்சை அளிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள முதல்வரின் மகள் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.

பா.ஜ.க மாநிலத் தலைவரின் பேட்டி...
அ.தி.மு.க-வுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

பா.ஜ.க மாநிலத் தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ‘அ.தி.மு.க-வின் அனைத்துத் தலைவர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க வலுவாக இருக்க வேண்டும்’ என்று அக்கறையோடு பேசியதற்கு பின்னணியே, அ.தி.மு.க-வுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கைதானாம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-விலுள்ள சில மூத்த தலைவர்கள், `பா.ஜ.க கூட்டணி வேண்டாம்’ என்று சொல்லிவருகிறார்கள். ஒருவேளை தங்களைக் கழற்றிவிட அ.தி.மு.க முயன்றால், ‘சசிகலாவைக் கையில் எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க தலைமைக்குச் சுட்டிக்காட்டவே அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் மாநிலத் தலைவர் என்கிறார்கள் பா.ஜ.க தரப்பினர்.

நாம் தமிழர் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்...
உளவுத்துறையின் சூழ்ச்சி?

நாம் தமிழர் கட்சியில் தனக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக யாரும் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் சீமான் கவனத்துடன் செயல்படுவார்.

சீமான்
சீமான்

ஆனால், சமீபகாலமாகத் தொடர்ச்சியான கைதுப் படலத்தில் சிக்கிவரும் ‘சாட்டை’ துரைமுருகனை சீமானுக்கு அடுத்தகட்ட தலைவராக உருவாக்கிவிட, அவரைச் சுற்றியிருக்கும் சிலரே முயல்கிறார்கள் என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள் சிலர். ஆனால், கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களோ, ‘‘இதெல்லாம் உளவுத்துறை ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம். எங்கள் கட்சியில் அண்ணனைத் தவிர யாருக்கும் இடமில்லை’’ என்று விசுவாசம் காட்டுகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
``மூக்கை நுழைக்கிறாரா அன்பில் மகேஷ்?’’
கொந்தளிக்கும் டெல்டா தி.மு.க-வினர்...

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பின் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி... இந்த மூன்று பேரின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு, டெல்டா மாவட்டங்களிலுள்ள உடன்பிறப்புகளின் மத்தியில் சூடான விவாதம் அனல் பறக்கிறது. ‘‘கொங்கு மண்டலப் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி, அங்கு நடைபெறும் அரசுப் பணிகளை ஆய்வுசெய்வதோடு, கட்சி நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டிவருகிறார். மாற்றுக்கட்சியினரை திமுக-வுக்குக் கொண்டுவருவதிலும் மும்முரமாக இருக்கிறார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆனால் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இங்குள்ள மாற்றுக்கட்சியினரை தி.மு.க-வுக்குக் கொண்டுவர எந்த முயற்சியுமே செய்யவில்லை. அதேசமயம் தஞ்சை தி.மு.க-வின் உட்கட்சி நடவடிக்கைகளில் அதிகமாகவே முக்கை நுழைக்கிறார். இங்கு பல சீனியர்கள் இருக்கும்போது, மாவட்டம்விட்டு மாவட்டம் வந்து, தி.மு.க கூட்டங்களை நடத்த உத்தரவிடுவதை எப்படிச் சகித்துகொள்ள முடியும்? ஒன்று செந்தில் பாலாஜிபோல், முழு மூச்சாகக் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணிபோல், அரசுப் பணிகளை ஆய்வுசெய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.

‘``நண்பரா... தம்பியா?’’
குழப்பத்தில் செந்தில் பாலாஜி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி, கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகள், உள்ளாட்சிப் பதவிகள் என்று அனைத்திலும் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றிபெற்றுள்ளன. இந்த நிலையில், கரூர் மாநகராட்சி மேயர் பதவியையும் தி.மு.க-வே கைப்பற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜி காய்நகர்த்திவருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில், அந்தப் பதவிக்குத் தன் நண்பரும், கரூர் மேற்கு நகரச் செயலாளருமான தாரணி சரவணனை நிறுத்தலாம் என்று செந்தில் பாலாஜி நினைக்க... தாரணி சரவணனோ, “அண்ணே வேணாம்... உங்க தம்பி அசோக்குமாரை நிறுத்துங்க” என்று பாசமழை பொழிந்திருக்கிறார். இதற்கு செந்தில் பாலாஜியும் சம்மதிக்கவே... அசோக்குமாரும் ஆர்வமாகி, அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை... தற்போது அசோக்குமார், ‘‘எனக்கு மேயர் பதவி வேண்டாம். தாரணி சரவணனுக்கே கொடுங்க’’ என்று சொல்லிவருகிறாராம். இதனால் செந்தில் பாலாஜி, ‘‘நண்பரை மேயராக்குவதா, தம்பியை மேயராக்குவதா?” என்று குழம்பிப்போயிருக்கிறார் என்கிறார்கள்!

மயிலாடுதுறை யூனியனில் ஈகோ யுத்தம்!

மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி இருவரும் தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றியத் தலைவர் காமாட்சி மூர்த்திக்கு எந்த ஒத்துழைப்பும் அளிப்பதில்லையாம். கடந்த ஆறு மாதங்களாக ஒன்றியத்தில் நடைபெறவேண்டிய அடிப்படைப் பணிகளையும் நடைபெறவிடவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை தலைவர் இல்லாமலேயே நிறைவேற்றி, பிறகு அவரிடம் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள்.

கையெழுத்து போட மறுத்த காமாட்சி மூர்த்தி, தன் ஆதரவாளர்களுடன் கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து முறையிட்டிருக்கிறார். விசாரணையில் இறங்கிய கலெக்டர் ரெஜினா ராணி, விஜயலட்சுமி இருவரையும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கோஷ்டி அரசியலை ஓரங்கட்டிய சாதி அரசியல்!
சிவகங்கை காங்கிரஸ் கலாட்டா...

காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறார்கள் கதர்ச் சட்டைக்காரர்கள். ‘``ப.சிதம்பரம் கட்டுப்பாட்டில் இருந்தவரை இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எந்தச் சச்சரவும் எழுந்ததில்லை. ஆனால், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி-யான பிறகு மாவட்டம் முழுவதுமே கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் அதிகரித்துவிட்டது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சமீபத்தில் சிவகங்கை நகரக் கட்சி நிர்வாகிகள் சிலரை கார்த்தி சிதம்பரம் கட்சியைவிட்டு நீக்கினார். இதனால் கொதித்தெழுந்த அவர்கள் சார்ந்த சமூக அமைப்பினர், ‘சாதி வெறியைக் கட்சிக்குள் காட்டுகிறார் கார்த்தி’ என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே, கார்த்தி சிதம்பரம் தலைமையில் தேவகோட்டையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இப்போது சாதி அரசியல் கட்சிக்குள் புகுந்துவிட்டது’’ என்று வருத்தப்படுகிறார்கள் கட்சியின் சீனியர்கள்.