Published:Updated:

உற்சாகத்தில் சுரேஷ்ராஜன் முதல் அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

``அ.தி.மு.க-வை அலைக்கழித்த தமிழக அரசு; மாமூல் கேட்டு பார் உரிமையாளருக்கு மிரட்டல்; “யோவ், நான் அமைச்சருக்கே பி.ஏ-வா இருந்தவன்”; மன உளைச்சலில் அனிதா; அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி அமைச்சர்; “சிவாஜியைத் தோற்கடித்தவன் நான்” - கழுகார் அப்டேட்ஸ்

உற்சாகத்தில் சுரேஷ்ராஜன் முதல் அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

``அ.தி.மு.க-வை அலைக்கழித்த தமிழக அரசு; மாமூல் கேட்டு பார் உரிமையாளருக்கு மிரட்டல்; “யோவ், நான் அமைச்சருக்கே பி.ஏ-வா இருந்தவன்”; மன உளைச்சலில் அனிதா; அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி அமைச்சர்; “சிவாஜியைத் தோற்கடித்தவன் நான்” - கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கலெக்டர் ஆபீஸ்... சேப்பாக்கம்... சைதாப்பேட்டை...
அ.தி.மு.க-வை அலைக்கழித்த தமிழக அரசு!

தமிழக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஏப்ரல் 5 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க-வினர் அரசிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். முதலில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள்... சட்டம்-ஒழுங்கு பிரச்னையைச் சுட்டிக்காட்டி அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பிறகு சேப்பாக்கத்தில் அனுமதி கேட்டிருக்கிறார்கள்... அதற்கு அதிகாரிகள் வெளிப்படையாகவே, “சேப்பாக்கம் உதயா சார் தொகுதியாச்சே... ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா, தம்பி கோவிச்சுக்குவாரு” என்று சொல்லி மறுத்திருக்கிறார்கள்.

உற்சாகத்தில் சுரேஷ்ராஜன் முதல் அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி வரை! - கழுகார் அப்டேட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு, ‘போக்குவரத்து நெரிசல் ஏற்படும்’ என்று சொல்லி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே ஒருவழியாக நுங்கம்பாக்கத்தில், அதுவும் 30 நிமிடங்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அனுமதி அளித்திருக்கிறார்கள். இதையடுத்து, “ஆளுங்கட்சியா இருந்த எங்களுக்கே இப்படி தண்ணி காட்டுறாங்க...” என்று புலம்பித் தவித்திருக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்!

மாமூல் கேட்டு பார் உரிமையாளருக்கு மிரட்டல்!
தி.மு.க எம்.எல்.ஏ-மீது தொடரும் புகார்...

சென்னை மாநகராட்சி செயற்பொறியாளரைத் தாக்கியதாக திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் கிளம்பி, அவரது கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஜோஷ்வா என்ற டாஸ்மாக் பார் உரிமையாளர், கே.பி.சங்கர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘சங்கர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றதிலிருந்து, மாதம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டிவருகிறார். அப்படி மாமூல் தரவில்லையென்றால் பாரை அவரின் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இது பற்றி சங்கர் தரப்பில் விசாரித்தால், “சங்கர் பதவியேற்றதிலிருந்தே மிரட்டியிருந்தால், அப்போதே புகார் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து பல மாதங்கள் கழித்து இப்போது புகார் கொடுக்கும்போதே, இதன் பின்னணி தெரியவில்லையா... மாதவரம் சுதர்சனம் கோஷ்டிதான், ஜோஷ்வா பின்னாலிருந்து இயக்கிவருகிறது. சங்கரைக் கட்சியைவிட்டே நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்” என்கிறார்கள்.

``யோவ், நான் அமைச்சருக்கே பி.ஏ-வா இருந்தவன்!”
மாரியம்மன் கோயில் நகராட்சியில் வெடிக்கும் மோதல்...

சென்னை அருகே உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் நகராட்சியில், உள்ளூர் அமைச்சருக்கும் கமிஷனருக்கும் முட்டல் மோதல் உச்சத்தை அடைந்திருக்கிறது. சமீபத்தில் அமைச்சர் தரப்பு, நகராட்சி தொடர்புடைய கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள், “சார்... இது அமைச்சர் கொடுத்த ஃபைலுங்க...” என்று கோப்புகளை கமிஷனரிடம் நீட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்த கமிஷனரோ, “யோவ்... மத்த அதிகாரிங்களை மாதிரி என்னை டீல் பண்ண வேணாம்னு அவர்கிட்ட சொல்லுங்க. நான் பவர்ஃபுல் அமைச்சருக்கே பி.ஏ-வா இருந்தவன்” என்று ஃபைலை திருப்பி அனுப்பிவிட்டாராம். கொதித்துப்போன உள்ளூர் அமைச்சர் மேலிடத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இறுகும் பிடி...
மன உளைச்சலில் அனிதா!

மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரின் குடும்பத்தினரின் 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அனிதா எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஏற்கெனவே தன் ஆதரவாளர்களின் அட்ராசிட்டியால், மூன்று முறை தலைமையால் எச்சரிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையின் பிடியும் இறுகுவதால், கடும் மன உளைச்சல் அடைந்திருக்கிறார் அனிதா.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்கிடையே கால்நடைத்துறையில் நடந்துவரும் பணி நியமனங்கள் தொடர்பாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இரு நாள்களுக்கு முன்பு தலைமையிலிருந்து அழைத்து விசாரித்திருக்கிறார்கள். இதையடுத்து, “அமைச்சரா இல்லாதப்ப இருந்த நிம்மதிகூட அமைச்சரான பின்னாடி இல்லை... பதவி, சொத்து பறிபோனாக்கூடப் பரவாயில்லை. இந்த வழக்குல குடும்பத்தினர் மேல நடவடிக்கை எடுத்துட்டா என்ன செய்யறதுன்னு தெரியலை” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம் அனிதா.

திருமணவிழாவில் முதல்வர் குடும்பம்...
உற்சாகத்தில் சுரேஷ் ராஜன்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சில புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த சுரேஷ் ராஜனின் பதவியைக் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி பறித்தார் கட்சித் தலைவர் ஸ்டாலின்.

சுரேஷ் ராஜன் மகனின் திருமணத்தில் துர்கா ஸ்டாலின்
சுரேஷ் ராஜன் மகனின் திருமணத்தில் துர்கா ஸ்டாலின்

இந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி நாகர்கோவிலில் நடந்த சுரேஷ் ராஜனின் மகன் நீலத்தமிழரசனின் திருமணத்தில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் சகோதரி செல்வி, மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு பாசமழை பொழிந்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு புறப்பட்டுச் சென்ற செல்வியை, சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி மண்டபத்துக்கு வெளியே வந்து காரில் ஏற்றி வழியனுப்பிவைத்தார். அப்போது பாரதியைக் கட்டிப்பிடித்து விடைபெற்றார் செல்வி. இதையடுத்து, “சுரேஷ் ராஜனின் மனைவியைக் கட்டிப்பிடித்த செல்வி, அவரது காதில் நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறார். அண்ணனுக்கு மீண்டும் முக்கியப் பதவி கிடைக்கப்போகிறது” என்று உற்சாகத்துடன் சொல்கிறார்கள் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள்.

கட்சி நிர்வாகியிடம் கமிஷன் கேட்ட எம்.எல்.ஏ!
கொதிப்பில் உடன்பிறப்புகள்...

திருச்சி அருகிலிருக்கும் ஒரு முக்கியமான ஊர் எம்.எல்.ஏ-வின் வசூல் வேட்டை தாங்காமல் கொதிப்பில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். சமீபத்தில் அந்த ஊரின் அருகிலுள்ள ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவர், “எனது விவசாய நிலத்துக்காக ஏரியில் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி தர மறுக்கிறார்கள்” என்று அந்த எம்.எல்.ஏ-விடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு அவர், “அதிகாரிகள்கிட்ட நான் பேசிக்கிறேன்... பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்துட்டுப் போ’ என்று கேட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகி, “உங்களுக்காகத் தேர்தல்ல எப்படியெல்லாம் வேலை பார்த்தோம்... எங்ககிட்டயே காசு கேட்குறீங்க?” என்று கேட்டதற்கு, “நீ சும்மாவா வேலை பார்த்தே... பணத்தை வாங்கிட்டுதானே வேலை பார்த்தே... ஒழுங்கா பணத்தை கொடுத்துட்டு போய்யா” என்று எகிறினாராம் எம்.எல்.ஏ. இதையடுத்து, ``சொந்தக்கட்சிக்காரன்கிட்டயே வசூல் பண்றதுமில்லாம, மரியாதை இல்லாம பேசுறாரு. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ!” என்று குமுறுகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனையைத் திறப்பதில் சிக்கல்...
அன்பானவரிடம் டீல் பேசிய மாஜி அமைச்சர்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குடன் வலம்வந்த அமைச்சர் ஒருவர், தன் இரு மகன்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைக் கட்டிவந்தார். அப்போது அவரின் ஆதரவாளர்கள், “அண்ணன் ஆஸ்பத்திரியைக் கட்டி முடிக்குறப்போ திரும்பவும் நம்ம ஆட்சிதான் இருக்கும். ஆஸ்பத்திரியைத் திறக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே வருவாரு...” என்றெல்லாம் உற்சாகமாகச் சொல்லிவந்தார்கள். ஆனால், ஆட்சி மாறிய நிலையில் எந்நேரமும் அந்த மாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பாயலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.

இதனால், அந்த மருத்துவமனையையும் திறக்க முடியாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார் மாஜி. இதையடுத்து, சிக்கலைத் தீர்ப்பதற்காக சமீபத்தில் அந்த மாஜியும், அவரின் மகன்களும் அன்பான அமைச்சர் ஒருவரை அணுகியிருக்கிறார்கள். நீண்ட ‘பேச்சுவார்த்தை’க்கு பிறகு “கவலைப்படாதீங்க, சீக்கிரமாகவே ஹாஸ்பிடலைத் திறந்துடலாம்” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பினாராம் அன்பான அமைச்சர். இதன் பின்னணியில் என்ன டீல் பேசினார்களோ... என்று கிசுகிசுக்கிறார்கள் டெல்டா ஏரியா கரைவேட்டிகள்!

“சிவாஜியைத் தோற்கடித்தவன் நான்!”
அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் எம்.எல்.ஏ...

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கரன் ஆகியோரது இலாகாக்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் விரைவில் மாற்றப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம். இதையடுத்து, அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளரான திருவையாறு எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் தரப்பு, “நடிகர் சிவாஜியை தோற்கடித்த எனக்கு, தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதுமே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நடக்கவில்லை... இப்போது நேரு மூலமாக அமைச்சர் பதவியைப் பெறுவதற்கான வேலைகளை முடித்துவிட்டேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார்.

இதற்கிடையே தனக்குப் போட்டி ஏற்படாமல் இருக்க, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவாளரான தஞ்சாவூர் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகத்தைப் பற்றி கட்சித் தலைமைக்கு புகார்களை அனுப்பியிருக்கிறாராம். இதனால் கடுப்பான நீலமேகம், இந்த விவகாரததை மகேஸிடம் கொண்டுசெல்ல... “அமைதியாக இருங்க, நான் முதல்வர்கிட்ட பேசிக்கிறேன்” என்று சொல்லிச் சமாதானப்படுத்தினாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism