Published:Updated:

எடப்பாடியிடம் காட்டம் காட்டிய பன்னீர் முதல் உதயநிதியின் சினிமா கமிட்மென்ட் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

‘‘கன மழை பெய்கிறது. செய்திகளை டெலிகிராமில் அனுப்பிவைக்கிறேன்’’ - சுருக்கமாகப் பேசிவிட்டு போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் டெலிகிராமில் வந்து விழுந்தன செய்திகள்.

உதயநிதியின் சினிமா கமிட்மென்ட்
இப்போதைக்கு இல்லை அமைச்சரவை மாற்றம்!

சமீபத்தில் அமைச்சர் ஒருவர் தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தபோது, அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பாக பேச்சு திரும்பியிருக்கிறது. அப்போது உதயநிதி, “அமைச்சரவையில் நானும் வரணும்னு அப்பா விரும்புறார். ஆனா, ஏற்கெனவே நான் சினிமாவுல நிறைய கமிட் ஆகிட்டேன். ஒத்துக்கிட்ட படங்களை முடிச்சுக் கொடுத்தாகணும். அதனால, இப்ப வர முடியாதுனு சொல்லிட்டேன். அதுக்கு அப்பா, ‘அப்ப எதுக்கு இப்ப மாத்திக்கிட்டு? நீ வர்றப்பயே ஒரே வேலையா அமைச்சரவையை மாத்திக்கலாமே...’னு சொல்லியிருக்கார்.

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

இலாகா மாற்றம் இப்போதைக்கு இருக்காதுண்ணே” என்று சொல்லிருக்கிறார். இந்த விஷயம் லீக் ஆனதைத் தொடர்ந்து ‘வடை போச்சே’ ரேஞ்சுக்கு புலம்புகிறார்களாம் சில சீனியர் அமைச்சர்கள்!

அ.தி.மு.க அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்!
பின்னணியில் நடந்த போராட்டம்...

‘‘ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என அறிவிக்கப்பட வேண்டும்’’ என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஜெ.சி.டி.பிரபாகர் உட்பட சிலர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் இதுபற்றி பிரபாகர் பேச, முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்புத் தெரிவித்தது கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., ‘‘என் ஆதரவாளர்கள் ஒரு கோரிக்கை வைத்தால் நிறைவேற்ற மாட்டீர்களா?’’ என்று எடப்பாடியிடம் காட்டம் காட்டியதாகச் சொல்கிறார்கள்.

எடப்பாடியிடம் காட்டம் காட்டிய பன்னீர் முதல் உதயநிதியின் சினிமா கமிட்மென்ட் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

இந்தச் செய்தி வெளியிலும் பரவி, பல்வேறு ஊர்களில் இருந்தும் போன்கால்கள் வரவே, ஒருவழியாக எடப்பாடியும் சம்மதித்தார் என்கிறார்கள். அதன்பிறகே அக்டோபர் 15-ம் தேதி, ‘அ.தி.மு.க அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகை’ என்று அழைக்கப்படும் என்று இருவரின் பெயரிலும் அறிக்கை வெளியானது.

ராசா ஆதரவால் சீட்டு...
ஊராட்சி கவுன்சிலர்கள் வேட்டு!

கோவை மாவட்ட ஊராட்சியின் துணைத்தலைவராக இருந்த அமுல் கந்தசாமி, கடந்த சட்டசபைத் தேர்தலில் வால்பாறை தொகுதியில் நின்று வெற்றிபெற்றதை அடுத்து, கோவை மாவட்ட கவுன்சிலர் பதவி காலியானது. தற்போது நடந்துமுடிந்த மாவட்ட கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் ஆனந்தன் வெற்றிபெற்றார். மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியும் காலியாக உள்ள நிலையில், ஆனந்தன் அந்தப் பதவிக்குக் குறிவைத்துள்ளார்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க நமக்கு தேவை! - ஸ்டாலின் புதுக்கணக்கு...

ஆ.ராசாவின் ஆதரவால்தான் ஆனந்தன் சீட் வாங்கி வெற்றிபெற்றதாகச் சொல்லப்படும் நிலையில், “அவரு ராசா ஆதரவோடு சீட்டு வாங்கியிருக்கலாம்... ஆனா, எங்க ஆதரவு இல்லாம துணைத்தலைவர் ஆக முடியாது... எப்படி அவரு துணைத்தலைவர் ஆகிறாருன்னு பார்ப்போம்” என்று கச்சைக்கட்டுகிறார்கள் கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்!

தி.மு.க பாரம்பர்ய குடும்பத்தில் சம்பந்தியாகும் மகேந்திரன்!

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்த குறுகிய காலகட்டத்திலேயே கட்சிக்குள் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டார் டாக்டர் மகேந்திரன். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்காக மகேந்திரன் மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் இருவருமே ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கியிருந்தாலும்... மகேந்திரனோ, தான் மட்டுமே வெற்றிக்குக் காரணம் என்பதுபோல சமூக ஊடகங்களில் பிராண்டிங் செய்வதாக புலம்புகிறது இன்னொரு தரப்பு. போதாக்குறைக்கு தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே மகேந்திரன் சென்னை சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.

மு.க. ஸ்டாலின் டாக்டர் மகேந்திரன்
மு.க. ஸ்டாலின் டாக்டர் மகேந்திரன்

ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே ஷூட்டிங் வந்தபோது, மகேந்திரன் வீட்டில் சிறப்பு விருந்து நடைபெற்றது. இப்படி மகேந்திரனின் வளர்ச்சி கொங்கு நிர்வாகிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அதைத் தடுக்கவும் முடியாமல் தவித்துவருகிறார்கள். இந்தநிலையில்தான் விரைவில் மகேந்திரன் தி.மு.க பாரம்பர்ய குடும்பம் ஒன்றில் சம்பந்தியாகப் போகிறார் என்று வரும் தகவலால், "இப்பவே இப்படி... இனி சம்பந்தியாகிட்டா என்னவெல்லாம் செய்வாரோ!" என்று மலைத்துப்போயிருக்கிறார்கள் கோவை உடன்பிறப்புகள்!

‘‘அக்கா அமைச்சர்... தம்பி மேயரா?’’
தூத்துக்குடி கலாட்டா

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியைப் பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, 2019 டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘தமிழ்நாடு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி, பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கியது செல்லாது’ என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இதையடுத்து, மேயர் பதவி பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமாக ஆணை வெளியாகவில்லை. அதற்குள் தி.மு.க-வில் மேயர் சீட்டுக்காக அமைச்சர் கீதாஜீவனின் தம்பி ஜெகன் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டாராம். இதையடுத்து, ‘‘அக்கா அமைச்சர், தம்பி மேயரா? குடும்ப அரசியலுக்கு எல்லையே இல்லையா?’’ என்று கட்சியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

அண்ணாமலைக்கு எதிர்ப்பு...
பா.ஜ.க-வில் சலசலப்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க 0.56 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்டு, எட்டு இடங்களை மட்டுமே பிடித்துள்ளார்கள். இது கட்சியின் சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

‘அ.தி.மு.க-விடமிருந்து உரிய எண்ணிக்கையில் இடங்களையும் கேட்டுப் பெறவில்லை. வெற்றிக்கான வியூகங்களையும் வகுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, இந்த வாக்கு சதவிகிதத்தை கையில் வைத்துக்கொண்டுதான் அ.தி.மு.க பேச்சுவார்த்தையே நடத்தும். அப்படி நடந்தால் நகர்ப்புறத் தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பிடிக்க முடியாது. இது அண்ணாமலையின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்’ என்று டெல்லிக்கு, சீனியர் தலைவர்கள் சிலர் புகார்களை அனுப்பியிருக்கிறார்களாம்.

சசிகலா ரீ-என்ட்ரி முதல் செந்தில் பாலாஜியின் அதிமுக பாசம் வரை ! - கழுகார் அப்டேட்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு