Published:Updated:

`அன்புமணிக்கு புதுப் பதவி முதல் அனிதா மீது அப்செட்டில் ஸ்டாலின் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்

“கடந்த முறை நீர் கொடுத்த மைசூர்பாகு இன்னமும் நாக்கில் தித்திக்கிறது...” என்ற குறிப்புடன் செய்திகளை மெயிலில் அனுப்பியிருந்தார் கழுகார். அவர் அனுப்பிய செய்தியும் ஸ்வீட் விவகாரத்திலேயே ஆரம்பித்தது! கழுகார் அப்டேட்ஸ்

அதிக விலைவைத்த ஆவின்!
புலம்பும் அரசு அதிகாரிகள்...
ஆவின் அலுவலகம்
ஆவின் அலுவலகம்

தமிழக போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்குத் தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் வாங்குவதில் கமிஷன் பேரம் நடப்பதாக எழுந்த புகார் முதல்வரை டென்ஷனாக்கிவிட்டதாம். அதன் பிறகே ஆவின் நிறுவனத்துக்கு அந்த ஆர்டரைக் கொடுத்திருக்கிறார்கள். டெண்டரில் கலந்துகொண்ட மூன்றெழுத்து நிறுவனம் ஒன்று, அரை கிலோ ஸ்வீட்டை 170 ரூபாய்க்குத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அதே அரை கிலோ ஸ்வீட்டை ஆவினில் 210 ரூபாய்க்கு வாங்குகிறதாம் அரசுத் தரப்பு. இதென்ன கணக்கு என்று புலம்புகிறார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்!

மகனுக்குத் தலைவர் பதவி!
ராமதாஸ் போடும் மனக்கணக்கு...

அன்புமணிக்கு கட்சியில் பதவி உயர்வு கொடுப்பது பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்துவருகிறாராம். அநேகமாக ஜி.கே.மணி வகித்துவரும் தலைவர் பதவி அன்புமணிக்குக் கொடுக்கப்படலாம் என்று கிசுகிசுக்கிறது தைலாபுரம் வட்டாரம். சமீபகாலமாகவே அவர் ராமதாஸின் பிடியிலிருந்து விலகிச் சென்று, தனி ஆவர்த்தனம் செய்வதாலேயே இந்த முடிவு என்கிறார்கள். ஆனால், கட்சியின் இன்னொரு தரப்பினரோ, கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவராக ஜி.கே.மணி இருப்பதால், அவரது பணி அழுத்தங்களைக் குறைக்கவே இந்த ஏற்பாடு என்று கூறுகிறார்கள்.

ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி
ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி

ஒருவேளை ஜி.கே.மணி முரண்டுபிடித்தால், கட்சித் தலைவர் பதவி இல்லையென்றாலும் வேறொரு பவர்ஃபுல்லான பதவியைக் கொடுத்து அன்புமணியை அழகுபார்க்கத் தயாராகிவிட்டாராம் ராமதாஸ். 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்திருக்கும் நிலையில், அன்புமணி முக்கியப் பதவியில் இருந்தால்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறாராம் ராமதாஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க அஸ்திரம்...
தவிக்கும் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து, தி.மு.க-வை வளர்ப்பதுதான் கட்சித் தலைமை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுத்த அசைன்மென்ட். ஆனால், மின் வாரியத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளியிட்டதுபோல, மேலும் பல விவகாரங்களை செந்தில் பாலாஜிக்கு எதிராக வெளியிட தமிழக பா.ஜ.க தரப்பு தயாராகிவருகிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதற்காக சில ஆவணங்களை பா.ஜ.க மாநிலத் தலைவர் தரப்பு கைப்பற்றியிருக்கும் நிலையில், விரைவில் செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அஸ்திரங்கள் வீசப்படலாம் என்கிறது கமலாலய வட்டாரம். இதையடுத்து, பா.ஜ.க-வைச் சமாளிப்பதா, கோவையில் வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்வதா என்று தத்தளிக்கிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி!

தீயணைப்புத்துறை உயரதிகாரியின் வீக்னெஸ்!
வசூலில் வாண வேடிக்கை நடத்தும் உதவியாளர்...
தீயணைப்புத்துறை
தீயணைப்புத்துறை

தீயணைப்புத்துறை உயரதிகாரியின் ‘மூன்றெழுத்து’ உதவியாளர் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறார். வட இந்தியாவைச் சேர்ந்த அந்த உயரதிகாரிக்கு தமிழ் பேசத் தெரியும்; ஆனால், சரியாகப் படிக்கத் தெரியாது. இந்த வீக்னெஸைப் பயன்படுத்திக்கொள்ளும் உதவியாளர், தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறையினர்மீது வரும் புகார்களை உயரதிகாரியின் கவனத்துக்கே கொண்டு செல்லாமல், சம்பந்தப்பட்டவர்களுக்கே போன் செய்து கறக்கவேண்டியதைக் கறந்துவிடுகிறாராம். தவிர, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் உதவியாளரை வகையாக ‘கவனித்தும்’விடுகிறார்கள். தற்போது தீபாவளி சீஸன் என்பதால் வசூலில் வாண வேடிக்கையே நடத்துகிறாராம் அந்த உதவியாளர்!

“இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!”
சர்ச்சையைக் கிளப்பிய மதுரை ஆதீனம்

`மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர்போல அரசியல்ரீதியாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ செயல்பட மாட்டார்; சைவ மத நெறிகளை வளர்ப்பதற்காக மட்டுமே பாடுபடுவார்’ என்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பற்றி ஆரம்பத்தில் கருத்து சொன்னார்கள். ஆனால், அவர் பொறுப்பேற்ற குறுகிய நாள்களிலேயே, ‘ஆலயத்தைவிட்டு அரசுத் தரப்பு வெளியேற வேண்டும். அதற்காக நான் முன்பு நடைப்பயணம் சென்றேன். பிற மதக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் நம் மதத்தை மதிக்க வேண்டும்’ என்று பேசியது, தி.மு.க-வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

இந்த நிலையில், சமீபத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், குறிப்பிட்ட சமூகத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், “உங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது; உங்கள் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று அதிரடியாகப் பேசியிருப்பது, மற்ற சமூகத்தினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

“என்னதான் பிரச்னை அனிதாவுக்கு?”
கடுப்பில் முதல்வர் ஸ்டாலின்!

திருச்செந்தூரில் போக்குவரத்து தலைமைக் காவலர் கன்னத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் அறைவிட்ட சம்பவம் அமைச்சருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிய நிலையில், துறைரீதியாகவும் அனிதாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், கடுப்பில் இருக்கிறராம் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, “ஏன் அனிதா பேரு அடிக்கடி டேமேஜ் ஆகுது... என்னதான் பிரச்னை அவருக்கு?” என்று சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் சீறியிருக்கிறது முதல்வர் தரப்பு. சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்த கனிமொழியும் இது தொடர்பாக அனிதா தரப்பினருக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம். இதில் அப்செட்டான அனிதா, தன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து, `இனியொரு தவறு நடந்தால், வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்’ என்று எச்சரித்திருக்கிறாராம்!

`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா?’; காவலரை அறைந்த  உதவியாளர்! - திருச்செந்தூரில் சர்ச்சை
ரெய்டிலிருந்து காப்பாற்றுமா யாகம்?
ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

கும்பகோணம் அருகேயிருக்கும் பிரசித்திபெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் குடமுழுக்கு அக்டோபர் 23 அன்று நடந்தது. முன்னதாக 22-ம் தேதி நடைபெற்ற யாக பூஜையில் பா.ஜ.க மாநிலத் தலைவருடன், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.காமராஜும் கலந்துகொண்டார். மத்திய அரசின் ஐ.டி ரெய்டிலிருந்து தப்பிக்க அண்ணாமலை உதவுவார் என்று நம்பும் காமராஜ், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டிலிருந்து திருநாகேஸ்வரத்தில் நடத்திய யாகம் காப்பாற்றும் என்று மனக்கணக்கு போடுகிறாராம்.

மிரட்டும் வன அதிகாரி
கண்டுகொள்ளாத அமைச்சர்!

`பத்தாண்டுகளுக்கு மேலாக வேட்டைத் தடுப்பு காவலர்களாக இருப்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தநிலையில்தான், நீலகிரி வனக்கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அந்த இளம் அதிகாரி வேட்டைத் தடுப்பு காவலர்களிடம், `பணி நிரந்தரம் செய்யச் சொல்லி கோர்ட்டுக்குப் போக மாட்டேன். சம்பள உயர்வு கேட்டுப் போராட மாட்டேன். நிலுவைச் சம்பளத்தைக் கேட்க மாட்டேன்‌ உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் நல்ல இடத்தில் டூட்டி போடுவேன்’ என்று மிரட்டுகிறாராம்.

‘காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா?’ - கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்!

ஏற்கெனவே குறைந்த ஊதியம், பணி நிரந்தரமின்மை, பணி அழுத்தங்கள் எனக் கடுமையான மன உளைச்சலில் இருக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு, இவரது நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டால், அங்கிருந்தும் எந்தச் சலனமும் இல்லையாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு