Published:Updated:

கவித்துவமாகப் புலம்பும் அன்வர் ராஜா... அன்பிலை ஸ்டாலின் புகழ்ந்தது ஏன்? -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

``ஒரு ரகசிய சந்திப்புக்காகத் தலைமைச் செயலகத்தில் இருக்கிறேன்... செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்” என்று சுருக்கமாக சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் கழுகார்.

அதிர்ச்சி வீடியோக்கள்...
சிக்கப்போகும் அதிகாரிகள்!

தீயணைப்புத்துறை இயக்குநர்களின் கையெழுத்தைப் போட்டு, பன்னடுக்கு கட்டடங்களுக்கு போலி லைசென்ஸ் கொடுத்த வழக்கில், தீயணைப்பு வீரர் சுந்தர்ராஜை கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் கைதுசெய்தார்கள். சுந்தர்ராஜின் செல்போன் நம்பரை அவர்கள் ஆய்வு செய்தபோது, கடந்த ஓராண்டில் மட்டும் குறிப்பிட்ட சில உயரதிகாரிகளுக்கு அவர் 500 முதல் 600 தடவைக்கு மேல் போனில் பேசியிருப்பது தெரியவந்தது. அவர் அடிக்கடி தொடர்புகொண்ட ‘உண்மை’யின் பெயரைக்கொண்ட அதிகாரி, ‘வெற்றி’யின் பெயரைக்கொண்ட அதிகாரி, ‘தமிழ்க் கடவுள்’ பெயரைக்கொண்ட அதிகாரி, சென்னை மாவட்ட அதிகாரி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சுந்தர்ராஜ்
சுந்தர்ராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விசாரணை வளையத்திலிருந்த தீயணைப்பு அலுவலர்களின் செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தபோது, ‘உண்மை’யின் பெயரைக்கொண்ட அதிகாரி மட்டும் முரண்டு பிடித்திருக்கிறார். அவரின் செல்போனில் சில வீடியோக்கள் இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த வீடியோக்கள் வெளியானால், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, தலைமைச் செயலக அதிகாரிகள் சிலரும் சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

பொங்கல் விழாவுக்கு `நோ’ சொன்ன மோடி...
சம்மதிக்கவைத்த தமிழக பா.ஜ.க!

ஜனவரி 12-ம் தேதி விருதுநகருக்கு வருகைதரவிருக்கும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, மதுரையில் பா.ஜ.க சார்பில் நடக்கவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறார்.

மோடி
மோடி

மதுரையில் பொங்கல் விழாவுக்காக மாவட்ட ஆட்சியரிடம் பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டபோது, கொரோனா தொற்றைக் காரணம் காட்டி ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பொங்கல் விழாவில் மோடி கலந்துகொள்ள தமிழக பா.ஜ.க தரப்பு பிரதமர் தரப்பில் நேரம் கேட்டபோது, ஆரம்பத்தில் ‘நோ’ சொல்லியிருக்கிறார்கள். ‘தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க இதுவே வாய்ப்பு’ என்று தமிழக பா.ஜ.க தரப்பு மீண்டும் அழுத்தம் கொடுக்கவே... அதன் பிறகே மோடி நேரம் கொடுத்தாராம். “மோடி நேரம் கொடுத்ததால், வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வின் பொங்கல் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

அன்பிலை ஸ்டாலின் புகழ்ந்தது ஏன்?
கொதிக்கும் தஞ்சை உடன்பிறப்புகள்...

தஞ்சாவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புகழ்ந்து தள்ளியது, தஞ்சை தி.மு.க-வினர் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபநாள்களாக அன்பில் மகேஷுக்கு எதிராக தஞ்சை தி.மு.க-வில் முணுமுணுப்புகள் அதிகரித்த நிலையில்தான் அன்பிலைப் புகழ்ந்திருக்கிறார் ஸ்டாலின். இது குறித்துப் பேசும் உடன்பிறப்புகள்.

கவித்துவமாகப் புலம்பும் அன்வர் ராஜா... அன்பிலை ஸ்டாலின் புகழ்ந்தது ஏன்? -கழுகார் அப்டேட்ஸ்

‘‘திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரை, தஞ்சாவூர் மாவட்டத்துக்குப் பொறுப்பாளரா நியமிச்சதை இங்குள்ள சீனியர்களால் சகிச்சிக்க முடியலை. அரசுப் பணிகளைப் பார்வையிடுறது மட்டுமில்லாம, தஞ்சை தி.மு.க-வையும் ஒட்டுமொத்தமா அன்பில் மகேஷ் தன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்துட்டார்னு மாவட்ட சீனியர்கள் புலம்பிவந்தாங்க. இந்த நிலையில, ‘தஞ்சை மாவட்ட தி.மு.க-வைப் பொறுத்தவரைக்கும் இனிமே அன்பில் மகேஷ்தான் பொறுப்பு. இவர் பின்னாடிதான் இங்குள்ள நிர்வாகிகள் செயல்படணும்’கிறதை ஆணித்தரமா ஸ்டாலின் பேசியிருக்குறது நிர்வாகிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்குது. டெல்டாவில் தி.மு.க-வின் அடையாளங்களாக விளங்கிய மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி மாதிரி, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களுக்கும் அன்பில் மகேஷைப் பொறுப்பாளரா கொண்டுவரக்கூடிய யோசனையில ஸ்டாலின் இருக்கார். இதைத்தான் தஞ்சாவூர்ல முதல்வர் வெளிப்படுத்தியிருக்கார்’’ என்கிறார்கள்.

பா.ஜ.க நிகழ்ச்சியில் பா.ஜ.க-வினருக்குத் தடை...
குமரி மாவட்டத்தில் வினோதமான உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜனவரி 2-ம் தேதி வருகைதரவிருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மீனவர்கள் மற்றும் சிறுபான்மையினர் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் சகாயம் என்ற ஐயப்பன், அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த நிலையில்தான் ‘இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க-வினர் யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்ற விநோதமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது மாவட்ட பா.ஜ.க தலைமை.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

கேட்டால், “இது சிறுபான்மையினர் மற்றும் மீனவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி. ஏற்கெனவே கட்சியில் இருப்போரும் கூட்டத்தில் கலந்துகொண்டால், கட்சியில் இணைய வந்தவர்கள் யார், ஏற்கெனவே இருக்கும் கட்சிக்காரர்கள் யார் என்ற விவரம் தெரியாமல் போய்விடும். அதனாலேயே, அப்படியோர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று விளக்கம் கொடுக்கிறது மாவட்டத் தலைமை. ஆனால், உள்ளூர் தாமரை பிரமுகர்களோ, “புது வரவான சகாயம் என்ற ஐயப்பன் மீதான பொறாமையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இது...” என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சொத்துகள் விற்பனைக்கு...
கே.சி.வீரமணியின் பலே பிளான்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியிருந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாராம் வீரமணி. சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் இருக்கும் அவரின் ஆர்.எஸ்.மஹால் திருமண மண்டபத்தை, டிசம்பர் 30-ம் தேதி இரண்டு கார்களில் சிலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

‘‘லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், உள்ளூரிலிருக்கும் சொத்துகளை விற்பனை செய்துவிட்டு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வேறு தொழில்களில் முதலீடு செய்துவிடலாம். அப்போதுதான் சொத்துகளைக் காப்பாற்ற முடியும்” என்று கணக்கு போடுகிறாராம் வீரமணி!

‘‘தினமும் உன்னை நினைக்கிறேன்... என்னை மறக்கிறேன்!”
கவித்துவமாகப் புலம்பும் அன்வர் ராஜா...

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க-வுக்குத் தூதுவிட்டும் எதுவும் நடக்காத நிலையில், ‘‘என்னைக் கட்சியைவிட்டு நீக்குன அன்னைக்கே எடப்பாடி, ஓ.பி.எஸ்-ஸைக் கடுமையாப் பேசி மீடியாவுக்கு பேட்டி கொடுக்க ரெடியா இருந்தேன். ‘அவசரப்படாதீங்க, மீடியாவுல பேசாதீங்க. நீக்கல் அறிவிப்பை ரத்துசெய்து தலைமை அறிக்கைவிடவிருக்கிறது’ என்று கட்சி ஆபீஸிலிருந்து சிலர் பேசினார்கள். அதை நம்பி மீடியாக்காரர்களை வீட்டில் காக்க வைத்துவிட்டு, நான் மாடியில காத்திருந்தேன்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

ஆனா, கடைசி வரை எந்த அறிவிப்பும் வரலை. இப்படி ஏமாத்திப்புட்டாங்க. இப்போ மீடியாக்காரங்க மட்டுமில்லை... தைரியமில்லாதவன்னு சொந்தக்காரங்ககூட மதிக்க மாட்டேங்கறாங்க. இப்ப தனி மரமா இருக்கேன்’’ என்று தன் நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நினைவு தினத்துக்கு அவர் அடித்த போஸ்டரில், ‘தலைவா... கட்சியிலிருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில், நான் தினமும் உன்னை நினைக்கிறேன். அதில், நான் என்னை மறக்கிறேன்...’ என்று கவித்துவமாகப் புலம்பியிருப்பதைப் பார்த்து உள்ளூர் அ.தி.மு.க-வினர் ‘உச்’ கொட்டுகிறார்கள்!

ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி...
நீலகிரியில் அதிகரிக்கும் மரக்கடத்தல்!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டமான நீலகிரியில், காடழிப்பும் மரக்கடத்தலும் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக அதிகரித்துள்ளது. கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் விலையுயர்ந்த காட்டு மரங்களை வெட்டிக் கடத்திவருகிறார்கள்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

கூடலூரில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இரண்டு மர மில்கள் தற்போது தீடீரென திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கியப் புள்ளிகள் சிலரை மாவட்ட வி.ஐ.பி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறாராம். `ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ என்று கொதிக்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!

லைசென்ஸ் விவகாரத்தில் சைலன்ட் ஏன்?
தீயணைப்புத்துறையில் தொடரும் தகிடுதத்தங்கள்...

கடந்த 29.12.2021 தேதியிட்ட ஜூவி-யில் ‘ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போலிக் கையெழுத்து... பெரு நிறுவனங்களுக்கு லைசென்ஸ்... பற்றி எரியும் தீயணைப்புத்துறை!” என்ற தலைப்பில் தீயணைப்புத்துறையில் நடந்துள்ள தில்லுமுல்லுகளைப் பற்றி எழுதியிருந்தோம். இதையடுத்து, தி.நகர் பகுதியிலுள்ள பன்னடுக்குக் கட்டங்களை ஆய்வுசெய்ய தீயணைப்புத்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் இரண்டு நாள்களாக நடத்திய ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பன்னடுக்குக் கட்டங்களை, சாதாரண கட்டடங்கள் என்று கூறி மாவட்ட அளவிலேயே லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், பிரபலமான வணிக நிறுவனத்தின் கிளைகளுக்கு லைசென்ஸே இல்லையாம். இந்தத் தகவலை ஆய்வுக்குழுவினர் தீயணைப்புத்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றதும் “அப்படியா... நாங்க பார்த்துக்குறோம். ஆய்வை முடிச்சுட்டு ஆபீஸுக்கு வந்துடுங்க” என்று சொன்னார்களாம்! `எல்லாம் தெரிந்தும் ஏன் இந்த சைலன்ட்?’ என்று புலம்புகிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.