Published:Updated:

துரை வையாபுரிக்கு சீனியர்கள் அட்வைஸ் முதல் அன்பில் அறையில் குவிந்த அதிகாரிகள் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

`கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கவும்!’ என்ற `கறார்’ அட்வைஸோடு, மெயிலில் செய்திகளை அனுப்பியிருந்தார் கழுகார்.

ஒன்றுகூடிய உறவுகள்...
விருந்து நிகழ்வில் பேசப்பட்டது என்ன?

முதன்மையானவரின் உறவுகளுக்குள் முட்டல் மோதல்கள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. குறிப்பாக, ‘பெரியவர் மறைவுக்குப் பிறகு, உறவுகள் பலரும் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள்’ என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகளே சொல்லிவந்தார்கள். வாரிசுக்கு புரொமோஷன் வழங்க முடிவெடுத்திருப்பதும் உறவுகளுக்கிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வாரிசு வீட்டில் உறவுகள் அனைவருக்கும் விருந்து வைபோகம் நடந்திருக்கிறது. குடும்பத்தின் அதிமுக்கியமான ‘பிரதர்ஸ்’ உள்ளிட்ட உறவுகள் பலரும் அந்த விருந்தில் பங்கேற்று, பல்வேறு தொழில் விஷயங்கள் பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். இதில் பலருக்கும் ஏக திருப்தியாம்!

குடைச்சல் கொடுக்கும் பா.ஜ.க...
காத்திருக்கும் தி.மு.க... புதுச்சேரியில் புது அரசியல் கணக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசுதான் நடக்கிறது என்றாலும், மத்திய அரசின் மறைமுக அழுத்தம் அந்த மாநிலத்தில் இப்போதும் தொடர்கிறது என்கிறார்கள். முன்பு துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைவைத்து அரசியல் ஆட்டம் நடத்திய மத்திய அரசு, தற்போது அதே அரசியலை தலைமைச் செயலரைவைத்து செய்கிறது.

துரை வையாபுரிக்கு சீனியர்கள் அட்வைஸ் முதல் அன்பில் அறையில் குவிந்த அதிகாரிகள் வரை!-கழுகார் அப்டேட்ஸ்

இதனால் பா.ஜ.க மீதான முதல்வர் ரங்கசாமியின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்கள். இவை அனைத்தும் தெரிந்த சங்கதிகள்தான்... இதில் புது விஷயம் என்னவென்றால், இந்த அதிருப்திகளால் பா.ஜ.க கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறுவார் என்று நம்புகிறதாம் தி.மு.க. அப்படி நடந்தால் அந்தக் கூட்டணி வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்பது தி.மு.க கணக்கு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! ஆனால், பா.ஜ.க தரப்போ, ``ரங்கசாமியைக் கூட்டணியிலிருந்து வெளியே போகச் சொல்லுங்களேன் பார்ப்போம்... அவரோட பிடி இப்போ எங்க கையில” என்று சவால்விடுகிறது!

அத்தனை துறைகளிலும் ஆதிக்கம்!
அன்பில் அறையில் குவிந்த அதிகாரிகள்!

புத்தாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 3 அன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த அமைச்சர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகாரிகள் கூட்டம் குவிந்தது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அதேசமயம், அமைச்சர் அன்பில் மகேஷ் அறைக்குள் மட்டும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் குவிந்து, வாழ்த்து தெரிவித்ததை சக அமைச்சர்களே ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். இதைப் பார்த்த அன்பிலின் எதிர்க் கோஷ்டியினரோ, ``ஒரு துறை விடாம அத்தனை துறையிலயும் வாரிசோட பேரைச் சொல்லி ஆதிக்கம் செலுத்துறாரு. அதோட விளைவுதான் இது!” என்று புது விளக்கம் சொல்கிறார்கள்!

``போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு!”
துரை வையாபுரிக்கு சீனியர்கள் அட்வைஸ்...

ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளராக துரை வையாபுரி நியமிக்கப்பட்டதற்கு, கட்சிக்குள் எழுந்த சலசலப்பைச் சரிசெய்யும்விதமாக பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் துரை. தந்தையின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்துச் சமூகத்தினரின் விழாக்கள், கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவுக்கு பதிலாக இவரே தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

துரை வைகோ
துரை வைகோ

அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்திவிழாவில் பசும்பொன்னுக்குச் சென்றவர், இப்போது ஜனவரி 3-ம் தேதி மதுரையில் நடந்த கட்டபொம்மன் பிறந்தநாள்விழாவில் கலந்துகொண்டு, கட்டபொம்மன் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார். இதைப் பார்க்கும் ம.தி.மு.க சீனியர்கள், ``இதெல்லாம் ஆரம்பம்தான்... அரசியல்ல போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு தம்பி...” என்று நிறைய அட்வைஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம்!

``அண்ணனுக்குப் பால் குடம் கொடுக்கலையா?’’
சுரேஷ் ராஜனுக்கு ஆதரவாக வரிந்துகட்டும் உ.பி-க்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜனவரி 2-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்வதற்காக அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சிலரும் கையில் பால் குடம் ஏந்திவந்தார்கள். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ் ராஜன் வெறும் கையுடன் நடந்துவருவது போன்ற புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

அந்த போட்டோவைப் பார்த்த உடன்பிறப்புகள், ``அண்ணனுக்கு பால்குடம் கொடுத்து மரியாதை செய்யவில்லையா?” என்று கொந்தளித்துவிட்டார்கள். ``எனக்குக் கையில் சின்ன பிரச்னை. அதனால், நம் கட்சிக்காரர்கள் பால் குடம் கொண்டுவந்தார்கள். அபிஷேகத்துக்கு நான்தான் பால்குடம் எடுத்துக்கொடுத்தேன்” என்று சுரேஷ் ராஜன் தரப்பில் விளக்கம் கொடுத்தும், அவரின் ஆதரவாளர்கள் சமாதானமாகவில்லை.

``எனக்கு முக்கியத்துவம் இல்லை!’’
புலம்பும் பழநிமாணிக்கம்

தஞ்சாவூர் எம்.பி-யும், தி.மு.க உயர்நிலை செயற்திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முதல்வர் ஸ்டாலின்மீது வருத்தத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் தஞ்சாவூரில் முதல்வர் தலைமையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் செய்தார்கள்.

இதையடுத்து, ‘கட்சியில் சீனியரான எனக்கு விழா ஏற்பாட்டில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை’ என்று பழநிமாணிக்கம் பலரிடமும் புலம்பிவருகிறார். ``மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணிக்கு அடுத்து தஞ்சை மாவட்டத்தில் நான்தான் கட்சியை வளர்த்தேன்.

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்

துரைமுருகனுக்கு முன்பே கட்சிக்கு வந்தவன் என்ற முறையில்கூட எனக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. சிலரின் பேச்சைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் என்னை ஓரங்கட்டுகிறார்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் புலம்பியது, அறிவாலயத்துக்கும் எட்டிவிட்டதாம். இதைக் கேட்ட முதன்மையானவர் தரப்பு விஷயத்தைக் கொண்டுபோனவர்களிடம் “அப்படியா!” என்று கூலாக மட்டுமே கேட்டதில் இன்னும் நொந்துபோயிருக்கிறார் மனிதர்!

ஆ.ராசா Vs சிவசங்கர்
உச்சத்தை எட்டும் பனிப்போர்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிசூடா மன்னனாக வலம்வந்த ஆ.ராசா, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பிறகு பெரம்பலூரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதனால் இந்தப் பகுதியில் அவரின் செல்வாக்கு மெல்ல மெல்லச் சரியத் தொடங்கியது. ராசாவின் ஆதரவாளர்கள் பலரும் இப்போது அமைச்சர் சிவசங்கர் அணியில் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆ.ராசா
ஆ.ராசா

இது ராசாவுக்குக் கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். `ராசாவின் ஆதரவு எம்.எல்.ஏ-வான பெரம்பலூர் பிரபாகரன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’ என்று சிவசங்கர் தரப்பு பிரபாகரனுக்கும் குடைச்சல்களைக் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை ராசா தரப்பில் சொல்கிறார்கள். ராசாவுக்கும் சிவசங்கருக்கும் இடையேயான பனிப்போர் விரைவில் உச்சத்தை எட்டும் என்கிறார்கள் அப்பகுதி உடன்பிறப்புகள்.