Published:Updated:

''திமுக-வோடு ஓ.பி.எஸ்-ஸுக்கு 'டீலா, நோ டீலா'?'' - கேள்வி எழுப்புகிறார் கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

``வேலுமணி மீதான் ரெய்டு என்பதே கண்துடைப்பானதுதான்! ரெய்டு வருவதற்கு முன்பே, வேலுமணிக்குத் தகவல் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆக, தமிழக அரசு இந்த விஷயத்தை சரிவரக் கையாளவில்லையா அல்லது வேலுமணியோடு கூட்டா?'' என்று கேட்கிறார் கே.சி.பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம், உட்கட்சித் தகராறுகள் எனத் தொடர்ச்சியாக அதிமுக-வுக்கு இது சோதனை காலம்! இதற்கிடையே, அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களும் கட்சியின் ரகசியங்களையெல்லாம் பொதுவெளியில் கொட்டி, குடைச்சல் கொடுத்துவருகின்றனர்.

இந்தநிலையில், கொடநாடு விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்களைக் கூறிவரும் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பேசினேன்...

''கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மூவரும் இருப்பதாக எப்படிச் சொல்கிறீர்கள்?''

''எடப்பாடி பழனிசாமி, முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டது 2017 பிப்ரவரி மாதம். கொடநாடு சம்பவம் நடைபெற்றது 2017 ஏப்ரல் மாதம். ஆக, அந்தக் காலகட்டத்தில் சசிகலாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுவந்திருக்கிறார். எனவே, சசிகலாவுக்குத் தெரியாமலோ அல்லது அவர் ஒப்புதல் இல்லாமலோ கொடநாடு சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை!

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு வழக்கில், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை முறையாக விசாரணை நடத்தி செய்யப்படவில்லை. ஏனெனில், கொடநாடு எஸ்டேட்டில் மானேஜராக இருந்துவரும் நடராஜன், உரிமையாளர்களில் ஒருவரான சசிகலா ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்திலேயே ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடக்கிறது என்றால், அது பற்றி நூற்றுக்கு நூற்று இருபத்தைந்து சதவிகிதம் முழுமையான அளவில் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இந்தச் சம்பவத்தில் வெறும் 40% விசாரணையை மட்டுமே நடத்தி முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆக, யாரையோ காப்பாற்றுவதற்காக காவல்துறை விசாரணை முடக்கப்பட்டிருக்கிறது என்ற ஆதங்கம் அதிமுக-வின் ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் எழுந்துள்ளது. அந்தத் தொண்டர்களில் ஒருவனாகத்தான் நான் இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பிவருகிறேன். மேலும் ஜெ. மர்ம மரணத்தில் இருக்கும் உண்மையையும் தமிழக அரசு விரைவில் வெளியே கொண்டுவர வேண்டும்.''

''சசிகலாவின் சொந்த எஸ்டேட்டில், சசிகலாவே ஏன் கொள்ளையடிக்கத் திட்டமிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறதே?''

''நல்ல கேள்வி.... கொடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் சசிகலாவும் ஒருவர். ஆனால், நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் சசிகலா, தனக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவர வேண்டும் என்று ஏன் ஒரு பேட்டிகூட கொடுக்கவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா?

கொடநாடு எஸ்டேட் பங்களா
கொடநாடு எஸ்டேட் பங்களா

இந்த சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்பவர்கள், 'கொடநாடு எஸ்டேட்டில்தான் பல கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. 2016-ல் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்ததும் அந்தப் பணத்தையெல்லாம் வெளிக்கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டது' என்கிறார்கள். மேலும், 'சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஏற்கெனவே ஜெயலலிதா நடவடிக்கையின் பலனாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களும் அந்த எஸ்டேட்டில்தான் இருந்தன. அவற்றை மீட்பதற்காக சசிகலாவின் உறவுகளே இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தினார்கள்' என்றும் இன்னொரு தரப்பில் சொல்கிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில், சசிகலாவோடு முரண்டு பிடித்து நின்ற ஓ.பன்னீர்செல்வத்தை வழிக்குக் கொண்டுவருவதற்காக சசிகலா - எடப்பாடி தரப்பே இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியிருந்திருக்கலாம். அதனால்தான் ஆவணங்களைக் காட்டி மிரட்டியே ஓ.பி.எஸ்-ஸையும் வழிக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஆக, சசிகலா - எடப்பாடி - ஓ.பி.எஸ் மூவருக்குள்ளுமே இந்த விவகாரத்தில் டீலிங் இருக்கிறது.

சசிகலா, அவரின் குடும்பத்தினர் - எடப்பாடி, தங்கமணி, வேலுமணி போன்ற அவரது டீம் - ஓ.பி.எஸ்-ஸைச் சார்ந்தவர்கள் என இந்த மூன்று அணியினருமே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எல்லோருமே ஒன்று சேர்ந்துதான் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கிறார்கள்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''கடந்த ஆண்டு நீங்கள் சிறையில் இருந்தபோது, கொடநாடு வழக்கு குற்றவாளியான சயான் உங்களிடம் என்ன ரகசியம் சொன்னார்?''

'' `கொடநாடு விவகாரத்தில், நான் தவறு செய்தது உண்மை. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இந்தத் தவறுகளையெல்லாம் நான் செய்தேன். எனவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கின்ற வரையிலும் என்னை சிறையிலிருந்து வெளியே வரவிட மாட்டார்’ என்றார்.''

சயான்
சயான்

''முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஏற்கெனவே கூறியிருந்தீர்கள். ஆனால், ரெய்டு நடத்தப்பட்டுவிட்டதே?''

''புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 'திமுக அரசு நேர்மையாக செயல்படும்' என அறிவித்துத்தான் வேலுமணி மீது ரெய்டு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், கடந்த ஆட்சியின்போது ஊழல் செய்ததாகச் சொல்லப்படும் ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் தி.மு.க அரசிலும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவது ஏன்?

உதாரணமாக, வேலுமணியின் பொருளாதார வலதுகரமான ஒப்பந்ததாரர் வடவள்ளி சந்திரசேகருக்கு, அண்மையில்கூட ஒப்பந்தப் பணிகளுக்காக 150 கோடி ரூபாய் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறதே... அதற்கு என்ன காரணம்? ஆக, வேலுமணி மீதான் ரெய்டு என்பதே கண்துடைப்புதுதான்! ரெய்டு வருவதற்கு முன்பே, வேலுமணிக்குத் தகவல் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆக, தமிழக அரசு இந்த விஷயத்தை சரிவரக் கையாளவில்லையா அல்லது வேலுமணியோடு கூட்டா?''

`மன உளைச்சலுடன்தான் சென்றார்; இப்போது ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளார்!'- வீராங்கனை சமீஹா பர்வினின் தாய்

''தி.மு.க அரசு திட்டமிட்டுப் பழிவாங்குகிறது என அ.தி.மு.க தலைவர்கள் கொதிக்கின்றனர். ஆனால், நீங்கள் தி.மு.க மீதே சந்தேகம் எழுப்புகிறீர்களே..?''

''அடுத்தடுத்து அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்றால், கடந்த ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏன் இன்னும் ரெய்டு நடக்கவில்லை... அப்படியென்றால், தமிழக அரசுக்கு விவரம் தெரியவில்லையா? குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டியதில் முறைகேடு என்று செய்தி வருகிறது. உடனே, சட்டசபையில் கருணாநிதியையும் துரைமுருகனையும் வானளாவப் புகழ்ந்து பேசுகிறார் ஓ.பி.எஸ். அப்படியென்றால் இவர்களுக்கிடையே 'டீலா... நோ டீலா' என்றுதானே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கஜானாவில் பணமே இல்லை என்று சொல்லித்தான் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால், இப்போது கருணாநிதி நினைவிடம் கட்டுவதற்கு 39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறார்கள். சட்டசபையில் இருக்கிற அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., 'நிதி நெருக்கடி இருக்கும் சூழலில், அடுத்த பட்ஜெட்டில்கூட இதை அறிவிக்கலாமே... அல்லது உங்கள் கட்சி சார்பிலேயேகூட நினைவிடம் கட்டலாம்தானே' என்ற அளவில்கூட விமர்சிக்காமல் வெறுமனே பாராட்டிக்கொண்டிருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் புளியந்தோப்பு கட்டட விவகாரம்தானே இருக்க முடியும்!''

மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை… பாராலிம்பிக்ஸில் தொடரும் பதக்க வேட்டை!

''ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அவை நாகரிகத்தோடு செயல்பட்டுவருவதைக்கூட குற்றச்சாட்டாக மாற்றுகிறீர்களே?''

''அவை நாகரிகம் என்றால், குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகைநாடி மிக்கவும் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக துரைமுருகனைப் பாராட்டுவது என்றால்கூட, `சட்டசபை உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் 50 வருடங்கள் ஆகின்றன. சட்டசபை உறுப்பினராக 40 ஆண்டுகள் மட்டுமேதான் இருந்திருக்கிறீர்கள்’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்... அடுத்து எம்.ஜி.ஆரின் உதவித்தொகையால் படித்து முன்னேறியவர் துரைமுருகன். ஆக, அவரது கல்விக்கும் அறிவுக்கும் காரணமானவர் எம்.ஜி.ஆர்.

கருணாநிதி - துரைமுருகன்
கருணாநிதி - துரைமுருகன்

ஆனாலும் கருணாநிதியின் அரசியலைப் பின்பற்றித்தான் துரைமுருகன் வந்திருக்கிறார். கடந்தகாலத்தில் சட்டசபையிலேயே எங்கள் கட்சித் தலைவரை அநாகரிகமான முறையில் நடத்தியவர் துரைமுருகன். `இந்தக் குறைகளெல்லாம் இருந்தாலும்கூட தொடர்ந்து திராவிடக் கட்சியிலேயே பயணித்துவருபவர் என்பதால், நாங்களும் உங்களைப் பாராட்டுகிறோம்’ என்றுதான் ஓ.பி.எஸ் சொல்லியிருக்க வேண்டும். இந்த உண்மையையெல்லாம் சொல்லாமல் இருந்ததுதான் தவறு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு