Published:Updated:

விஐபி தொகுதி: ஜோலார்பேட்டையில் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

கே.சி.வீரமணி
News
கே.சி.வீரமணி

தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களே இங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கிறார்கள்

எதிர்க்கட்சி வி.ஐ.பி-யுடன் உள்ளடி ஒப்பந்தம் போட்டு, ஜோலார்பேட்டை தொகுதியில் மீண்டும் தெம்பாகக் களமிறங்கியிருக்கிறார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. தொடர்ந்து இரண்டு முறை ஜோலார்பேட்டையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் வீரமணி, ‘ஹாட்ரிக்’ அடிப்பதற்காக கரன்சியை தாராளமாக இறைக்கிறார். இருப்பினும், “அதிகாரத்தில் இருந்தபோது தொகுதிக்காக எதையும் செய்யாமல், இப்போது குட்டிக்கரணம் அடிக்கிறார் வீரமணி” என்ற விமர்சனக் குரல்கள் எழுகின்றன.

தேவராஜு
தேவராஜு
தென்னரசு சாம்ராஜ்
தென்னரசு சாம்ராஜ்

“தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களே இங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கிறார்கள். வீரமணி அதே சமூகம் என்பது அவருக்கு ப்ளஸ். ஆனாலும், குறுநில மன்னரைப் போன்ற ஆதிக்கக் குணம் அவரது செல்வாக்கைச் சரியவைத்திருக்கிறது. ‘மண்ணின் மைந்தர்’ என்று வீரமணி வாய்ஜாலம் விட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. சொந்தக் கட்சியினரே அவர்மீது அதிருப்தியில் இருப்பதால், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளை மொத்தமாக அழைத்து பதவிகளுக்கேற்ப பாக்கெட்டுகளை நிரப்பிவருகிறார் வீரமணி. இருப்பினும் ஒருசில நிர்வாகிகள், அழைத்த மரியாதைக்காகத் தலைகாட்டிவிட்டு, ‘விட்டால் போதும்’ என்று நடையைக் கட்டியிருக்கிறார்கள்” என்பது உள்ளூர் கட்சி நிர்வாகிகளின் குரலாக இருக்கிறது.

இன்னொரு புறம், ‘‘வாணியம்பாடியில் எனக்கு மீண்டும் சீட் கிடைக்காமல் செய்துவிட்டார் வீரமணி. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனும் வீரமணியும் மாமன், மச்சான் போல் பழகிவருகிறார்கள். இருவரும் பேசி வைத்துக்கொண்டு, தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக டம்மியான வேட்பாளர்களை எதிரில் நிற்க வைத்திருக்கிறார்கள்’’ என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொடுத்த பேட்டி வீரமணி முகாமை கிடுகிடுக்கச் செய்திருக்கிறது.

விஐபி தொகுதி: ஜோலார்பேட்டையில் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

தி.மு.க வேட்பாளர் தேவராஜு, அவரது சொந்த ஊரான வாணியம்பாடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், வாணியம்பாடியைக் கூட்டணிக்குத் தாரைவார்த்துவிட்டு தேவராஜுவை ஜோலார்பேட்டைக்குத் தள்ளிவிட்டிருக்கிறார் துரைமுருகன். ‘`பக்கத்து தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால், வீரமணி எளிதில் வெற்றிபெற்றுவிடுவார். அதோடு, தேவராஜுவின் வளர்ச்சிக்கும் செக் வைக்கலாம் என்பது துரைமுருகனின் கணக்கு’’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். தேவராஜுவும் வன்னியர் என்பதால், அவருக்கு கணிசமான சமூக ஓட்டுகள் விழும் என்றே தெரிகிறது.

``என்னுடைய உறவினர்களும் இந்தத் தொகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க-வினரே சாரை சாரையாக என்னை வந்து சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களின் கொதிப்பலையில் சிக்கி வெந்துபோய்க் கிடக்கிறார் வீரமணி. தோல்வி பயம் துரத்துவதால் பண பலத்தை நம்பியே ஓடுகிறார். அவர் என்ன செய்தாலும் மக்கள் நம்புவதாக இல்லை. நான் வெல்வது உறுதி’’ என்கிறார் தி.மு.க வேட்பாளர் தேவராஜு.

விஐபி தொகுதி: ஜோலார்பேட்டையில் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

அ.ம.மு.க வேட்பாளர் தென்னரசு சாம்ராஜ், அமைச்சர் வீரமணியின் சொந்த அக்காள் மகன். தீராத குடும்பப் பகையுடன் அரசியல் பகையும் சேர்ந்துகொள்ள, தாய்மாமனை எதிர்த்து உக்கிரமாகக் களமிறங்குகிறார் தென்னரசு. மும்முனைப் போட்டி, ஒரே சமூக வேட்பாளர்கள், மக்களின் எதிர்ப்பு மனநிலை உள்ளிட்டவற்றால் தள்ளாட்டத்தில் இருக்கிறார் வீரமணி.