Published:Updated:

ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்களும்... குஜராத் தேர்தலும்!

அரவிந்த் கெஜ்ரிவால்

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய கருத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்களும்... குஜராத் தேர்தலும்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய கருத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். அவர், ‘இலவசங்கள்’ தொடர்பான பல வாக்குறுதிகளை வாரி வழங்கிவருகிறார். மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என அவர் வழங்கிவரும் வாக்குறுதிகள் குஜராத் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

மேலும், இந்துத்துவா ரூட்டிலும் கெஜ்ரிவால் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். 1அயோத்திக்கு இலவச ரயில் பயணம், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள்’ என பா.ஜ.க-வைப்போல இந்து வாக்குகளைக் குறிவைத்து அவர் மதரீதியான வாக்குறுதிகளையும் வழங்கிவருகிறார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுப்பதற்கு, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் ஏன் இடம்பெறக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். இதையொட்டிய விவாதங்கள் அரசியல் அரங்கில் நடைபெற்றுவருகின்றன.

'நாம் இன்னும் செழிப்படைய அல்லாஹ், இயேசு, குருநானக், புத்தர், மகாவீரர் ஆகியோரின் படங்களையும் சேர்க்கலாமே' என்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து குரல் எழுந்தது. ஏற்கெனவே, ‘இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திக்குச் சரிசமமான பங்களிப்பு நேதாஜிக்கு உண்டு. எனவே, ரூபாய் நோட்டில் காந்தியின் படத்துக்கு பதிலாக நேதாஜியின் படத்தை அச்சிட வேண்டும்’ என்று அகில பாரத இந்து மகாசபை என்கிற அமைப்பு கூறியது. சில மாதங்களுக்கு முன்பு, அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படவிருப்பதாக ஒரு செய்தி கிளம்பியது. அதற்கு, ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது.

அம்பேத்கர்
அம்பேத்கர்

`தேசத்தந்தை’ என்கிற முறையில் மகாத்மா காந்தியின் உருவப்படம் மட்டுமே இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுகிறது.

2014-ல் அப்போதைய நிதியமைச்சரான அருண் ஜெட்லி, 'காந்தியைவிட வேறு எந்தத் தலைவரையும், ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியாக முன்வைக்க முடியாது' என்றார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், 'மகாத்மா காந்திபோலவே பல தலைவர்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், மற்ற தலைவர்களின் படங்களை ரூபாய் நோட்டில் அச்சடித்தால் தேவையில்லாத சர்ச்சை உருவாகும்' என்று கூறியிருக்கிறார்.

காந்தி
காந்தி
Vikatan

ஆனாலும், பல்வேறு ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, இந்திய ரூபாய் நோட்டுகளில் அவர்களின் உருவப்படம் இடம்பெற வேண்டுமென்று அவ்வப்போது சிலர் பேசிவருகிறார்கள். கடவுள்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இணைந்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த கெஜ்ரிவால் முயன்றுவருகிறார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு மதங்களைக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் கடவுள்களின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்புவது ஆபத்தான செயல் என்ற பார்வையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் வாக்குகளைக் கவருவதற்காக ஏராளமான வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வழங்கிவருகிறார். ஆனால், ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம், வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை குஜராத் போன்ற மாநிலத்தில் நிறைவேற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. குஜராத்தில், பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் கடும் போட்டி இருக்கிறது. ஆனால், அதிரடியான வாக்குறுதிகள் மூலம் ஊடகங்களின் கவனத்தை கெஜ்ரிவால் ஈர்த்துவருகிறார். அந்த வாக்குறுதிகள் எத்தனை வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு பெற்றுத்தரும் என்பதற்கான விடை வரும் தேர்தலில்தான் தெரியும்!