கேரள மாநிலத்தில் சி.பி.எம் அரசுக்கும், கவர்னருக்குமான மோதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனும், கவர்னர் ஆரிப் முகமது கானும் நேரடியாகவே விமர்சித்துப் பேசிய சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளின் நியமன விஷயத்தில் அரசுக்கும், வேந்தரான கவர்னருக்கும் இடையே மோதல் அடிக்கடி நடந்துவருகிறது. இந்த நிலையில் கவர்னரிடமிருந்து வேந்தர் பதவியைப் பறிக்க அரசு முடிவு செய்தது.
இதற்காக நேற்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்காகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை சட்டத்துறை அமைச்சர் பி.ராஜிவ் கொண்டுவந்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்தது. ஆனால், அந்த ப்பதவியை யாருக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிப்பது யார் என விவாதம் செய்து வெளிநடப்பு செய்தது.

கேரள மாநிலத்திலுள்ள 14 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் நீக்கப்பட்டதால் இனி அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து ஒரு வேந்தர் நியமித்தால் போதும் எனவும், வேந்தர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது குறித்து அமைச்சரவை முடிவுசெய்யும் எனவும் சட்டசபையில் விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தரை நியமிக்கும் பொறுப்பை அமைச்சரவைக்கு வழங்கும் தீர்மானத்தை எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
இதைத் தொடர்ந்து வேந்தரை நியமிப்பதற்கு முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய மூன்று பேர் குழு அமைக்கப்படும் என அமைச்சர் பி.ராஜிவ் தெரிவித்தார். இது பற்றிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ``மூன்று பேர் குழுவில் முதல்வர் தீர்மானிக்கும் நபரை சபாநாயகர் ஏற்றுக்கொள்வார். எனவே சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரையோ, ஹைகோர்ட்டின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியையோ வேந்தராக நியமிப்பதில் அரசுக்கு என்ன தடங்கல் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சட்டசபையில் கடும் விவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வி.டி.சதீசன் தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கவர்னருக்கும், அரசுக்குமான மோதல் தீவிரமடைந்துள்ளது.