Published:Updated:

கொரோனா: `கேரள மக்களை பினராயி அரசு கொலை செய்கிறது!' - கொதித்த பாஜக தலைவர் சுரேந்திரன்

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

`கேரளத்தில் 31,445 கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் ஆன அதே தினம் மகாராஷ்டிராவில் வெறும் 5,031 பாசிட்டிவ் கேஸ்கள் மட்டுமே ரிப்போர்ட் ஆகின’ என்றார் பாஜக தலைவர் சுரேந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து நீடித்துவருகிறது. கடந்த சில வாரங்களாக தினசரி 20,000 புதிய கொரோனா பாதிப்புகள் ரிப்போர்ட் ஆகிவந்தன. நேற்று முன்தினம் 31,445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 30,007 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கேரளத்தில் மொத்தம் 1,81,209 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கிறார்கள். புதிய கொரோனா பாதிப்பு 20,000 என்ற நிலையிலிருந்து சராசரியாக 30,000 என்ற நிலையை அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, முதல் அலையைவிட இரண்டாவது அலையில் மரண எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நேற்றைய கணக்குப்படி இரண்டாம் அலையில் மரண எண்ணிக்கை 20,134 ஆகியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

2020, மார்ச் 28-ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டது. முதல் அலையில் 2021, மார்ச் மாதத்துக்கிடையில் 4,406 மரணங்கள் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் கடந்த ஜூன் மாதம் மரண எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது. இப்போது கொரோனா மரணம் 20,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் இரண்டாம் அலை தொடர்ந்து நீடிப்பதும், பாதிப்பும், மரண எண்ணிக்கையும் அதிகரித்துவருவதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவில் கேரளாவை நம்பர் ஒன் ஆக்கியிருப்பதாக அந்த மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் விமர்ச்சித்திருக்கிறார். இது குறித்து கே.சுரேந்திரன் கூறுகையில், ``தேசம் போராடி கொரோனாவை தோல்வியடையச் செய்துகொண்டிருக்கும் நிலையில், கேரள மக்களை பினராயி அரசு கொலை செய்கிறது. கடந்த 25-ம் தேதி இந்தியாவில் ரிப்போர்ட் ஆன கொரோனா பாதிப்புகளில் 68 சதவிகிதம் கேரளத்தில் பதிவாகியிருக்கிறது. தேசிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் கேரளம் பேரழிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

கேரளத்தில் 31,445 கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் ஆன அன்று, கொரோனா பாதிப்பில் நாட்டில் இரண்டாம் இடத்திலுள்ள மகாராஷ்டிராவில் வெறும் 5,031 பாசிட்டிவ் கேஸ்கள் மட்டுமே ரிப்போர்ட் ஆகின. கேரளாவைவிட எட்டு மடங்கு பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 19 பாசிட்டிவ் கேஸ்கள் மட்டுமே ரிப்போர்ட் ஆகியுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளம் நம்பர் ஒன் என கோடிகளைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது கேரள அரசு. ஆனால், பினராயி விஜயன் கொரோனாவில் கேரளத்தை நம்பர் ஒன் ஆக்கிவிட்டார்" என்றார்.

Tamil News Today: `இந்தியாவில் ஒரே நாளில் 46,164 பேருக்கு பாதிப்பு; கேரளாவில் மட்டும் 31,455!’ - கொரோனா நிலவரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு