Published:Updated:

தமிழிசையைத் தொடர்ந்து ஸ்ரீதரன் பிள்ளை - மிசோரம் ஆளுநரான கேரள பி.ஜே.பி தலைவர்!

`சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அழைத்திருந்தார். தனி தலைமை பொறுப்புகளோடு கேரளாவுக்கு வெளியில் பணிசெய்ய முடியுமா என்று பிரதமர் என்னிடம் கேட்டார்'' என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஸ்ரீதரன்பிள்ளை

ஸ்ரீதரன்பிள்ளை
ஸ்ரீதரன்பிள்ளை

கேரள மாநில பி.ஜே.பி தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கேரள பி.ஜே.பி தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். 2018-2019 காலகட்டத்தில் மிசோரம் ஆளுநராக இருந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போடியிட்டு தோல்வியைத் தழுவினார்.

பி.ஜே.பி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் ஸ்ரீதரன் பிள்ளை
பி.ஜே.பி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் ஸ்ரீதரன் பிள்ளை

கும்மனம் ராஜசேகரன் ஆளுநராகி சென்ற சமயத்தில் கேரள மாநில பி.ஜே.பி. தலைவராக நியமிக்கப்பட்டவர் வழக்கறிஞர் ஸ்ரீதரன் பிள்ளை. அடுத்த மாதம் அவரது மாநில தலைவர் பதவி காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் அவர் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா வெண்மணியைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடு அரசு சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் படித்தார். 2003-2006 காலகட்டத்திலும் கேரள மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்திருக்கிறார் ஸ்ரீதரன்பிள்ளை. மேலும் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தியது இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகும்.

ஸ்ரீதரன்பிள்ளை
ஸ்ரீதரன்பிள்ளை

மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதரன்பிள்ளை கூறுகையில், ``சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அழைத்திருந்தார். தனி தலைமை பொறுப்புகளோடு கேரளாவுக்கு வெளியில் பணிசெய்ய முடியுமா என பிரதமர் என்னிடம் கேட்டார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். எல்லாம் நல்லதுக்குதான்" என்றார்.

பழங்குடியினப் பெண்களுடன் நடனமாடிய தமிழிசை! - வைரலாகும் ஆளுநர் மாளிகை வீடியோ

தமிழக பி.ஜே.பி தலைவராக இருந்த தமிழிசை சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கேரள மாநில பி.ஜே.பி. தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையும் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விரைவில் புதிய மாநில தலைவர்களை பா.ஜ.க தலைமை நியமிக்க இருக்கிறது.