Published:Updated:

`வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக’ - கேரள சட்டசபையில் தீர்மானம்; பல்டியடித்த பா.ஜ.க எம்.எல்.ஏ

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

`சட்டசபையில் கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரித்தேன். அதனால்தான் நான் ஓட்டெடுப்பில் இருந்து ஒதுங்கி நின்றேன' என்றார் பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க கேரள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது. அதில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார். மேலும் விவசாயிகளுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு ஆளும் சி.பி.எம் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது பா.ஜ.க-வைச் சேர்ந்த கேரளாவின் ஒரே எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபாலும் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கேரளாவ்ன் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபாலின் இந்த முடிவு, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கேரள சட்டசபை கூட்டம்
கேரள சட்டசபை கூட்டம்

இந்த தீர்மானத்தை கொண்டுவந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது உரையில், ``விவசாய சட்டங்கள் மூலம் விளைபொருட்களை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்கான வழிவகையை மத்திய அரசு செய்துள்ளது. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையை வழங்குவதில் இருந்து மத்திய அரசு விலகிக்கொள்ளவும் இது வழிசெய்யும். இந்த சட்டம் கேரளாவை வெகுவாகப் பாதிக்கும்" என சுட்டிக்காட்டினார்.

`இனிப்பான ஆதரவு’ - 16 டன் அன்னாசிப் பழத்தை டெல்லிக்கு அனுப்பிய கேரள விவசாயிகள்!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை மத்தியிலும், கேரளாவிலும் பா.ஜ.க தலைவர்கள் ஆதரித்து வருகின்றனர். அதே சமயம் பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால் சட்டசபையில் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரவில்லை. பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.ராஜகோபால், ``சட்டசபையில் கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரித்தேன். அதனால்தான் நான் ஓட்டெடுப்பில் இருந்து ஒதுங்கி நின்றேன். அவர்களின் விவாதத்தில் சில குறைபாடுகள் இருந்ததை, நான் சுட்டிக்காட்டினேன்.

பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால்
பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால்

ஒன்றாக நிற்க வேண்டும் என்பதுதான் ஒருமித்த கருத்து. கேரள சட்டசபையின் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்’’ எனக் கூறினார். இது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏர்படுத்தியது. இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஓ.ராஜகோபால், ``நான் சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஓட்டெடுப்பு சமயத்தில் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என பிரிக்கவில்லை. சபாநாயகர் வழக்கத்தை மீறிவிட்டார்" என அறிக்கை மூலம் திடீர் பல்டி அடித்தார் ஓ.ராஜகோபால்.

அடுத்த கட்டுரைக்கு