Published:Updated:

`காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்டோம்!' - கேரள பட்ஜெட்டில் இடம்பெற்ற காந்தி கொலை கார்ட்டூன்

காந்தி
காந்தி

கேரள அரசின் பட்ஜெட் முகப்பு படத்தில் காந்தி படுகொலை தொடர்பாக மலையாள கலைஞர் வரைந்த கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது.

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதியன்று நாடு முழுவதும் பல சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனந்த குமார் ஹெக்டே
ஆனந்த குமார் ஹெக்டே

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஆனந்த குமார் ஹெக்டே, ``காந்தியின் சுதந்திரப் போராட்டம் வெறும் நாடகமே. சத்தியாக்கிரகத்தால் நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வரலாற்றைப் படிக்கிறபோதெல்லாம் என் ரத்தம் பற்றி எரிகிறது. இத்தகைய தலைவர்கள் நம் நாட்டில் மகாத்மா ஆகிவிட்டார்கள்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?

பா.ஜ.க-வைச் சேர்ந்த பலருமே ஹெக்டேவின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஹெக்டே அறிவித்துவிட்டார். காந்தி தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல.

தாமஸ் ஐசக்
தாமஸ் ஐசக்

இந்த நிலையில் சி.ஏ.ஏ விவகாரத்தில் மத்திய அரசுடன் கேரள அரசு நேரடி மோதலில் இருந்து வருகிறது. சி.ஏ.ஏ-வை எதிர்ப்பதில் மற்ற மாநிலங்களுக்கும் கேரளா முன்னோடியாக இருந்து வருகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட கேரள நிதிநிலை அறிக்கையில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி முகப்பு படமாக இடம்பெற்றிருந்தது. இதுபற்றிப் பேசிய நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ``நிச்சயம் இது அரசியல் கருத்தே. மகாத்மா காந்தியின் படுகொலையை வைத்து ஒரு மலையாள கலைஞர் வரைந்த ஓவியமே அது. காந்தியைக் கொன்றவர்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை இதன்மூலம் தெரிவிக்கிறோம்” என்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு