Published:Updated:

`உணர்ச்சிகரமான உரை வேண்டாம்; நிரூபியுங்கள்!’- மோடி உரைக்கு பினராயி விஜயன் பதிலடி

`எனது பணியில் பாரபட்சமாக இருக்கிறேனா என்பதைக் கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன்” என்று மத ரீதியாக யாரையும் பாகுபடுத்தியது கிடையாது என்பதன் அடிப்படையில் பேசினார் மோடி

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டங்களை தீவிரமாக நடத்திவருகின்றனர். போராட்டங்களுக்கு மத்தியில், பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நேற்று டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குடியுரிமைச் சட்டம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். இதற்கு, அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மோடி
மோடி

டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய மோடி, ``குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து பரப்பப்படும் பொய்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சில நகர்ப்புற நக்சல்களும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்த வதந்திகளைப் பரப்பி வருகின்றன. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி, ``நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்தும்போது ஒருவர் கோயிலுக்குச் செல்பவரா அல்லது மசூதிக்குச் செல்பவரா எனக் கேட்பதில்லை. இஸ்லாமியர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வளர்ச்சித்திட்டங்களின் வழியாகப் பயன்பெறுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லியிருக்கிறேன். எனது பணியில் பாரபட்சமாக இருக்கிறேனா என்பதைக் கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன்” என்று மத ரீதியாக யாரையும் பாகுபடுத்தியது கிடையாது என்பதன் அடிப்படையில் பேசினார்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடியின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ``மதிப்புக்குரிய பிரதமர், `சாதியும் மதமும் எந்தத் திட்டங்களுக்கான அளவுகோலாக இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார்.’ பிரதமர் கூறியதைச் செயல்களில் நிரூபிக்க வேண்டிய தருணம் இது. உணர்ச்சிவசப்படுவது மட்டும் போதாது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் அடிப்படைப் பிரச்னையே மதங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்பதுதான்” என்று கூறியுள்ளார்.

மேலும், ``தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த பிரதமரின் வாதம் வெற்றுத்தனமாக இருக்கிறது. ஏனெனில், அமித் ஷா இவருடைய கருத்துக்கு முரண்பாடாக நடந்துகொள்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடந்ததை நினைவுகூர விரும்புகிறேன். எனக்கு 50 நாள்கள் அவகாசம் கொடுங்கள். கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், பயங்கரவாதம் என எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவருகிறேன் என்றார். ஆனால், என்ன நடந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்” என்று பதிவு செய்துள்ளார்.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

இந்தியாவின் பல மாநிலங்களில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அனுமதிக்கப் போவதில்லை என அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ``நீங்கள் ஒரே கொடியின் கீழ் இருக்கிறீர்கள் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். சட்டப்படி இது சாத்தியமாகுமா என்பதையும் உங்கள் சட்ட வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.