Published:Updated:

`உம்மன் சாண்டிக்கு குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கவில்லை!' - முதல்வருக்கு கடிதம் எழுதிய சகோதரர்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

சகோதரரின் குற்றச்சாட்டுக்கு உம்மன் சாண்டியும், அவர் மகன் சாண்டி உம்மனும் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், உம்மன் சாண்டி நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

`உம்மன் சாண்டிக்கு குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கவில்லை!' - முதல்வருக்கு கடிதம் எழுதிய சகோதரர்

சகோதரரின் குற்றச்சாட்டுக்கு உம்மன் சாண்டியும், அவர் மகன் சாண்டி உம்மனும் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், உம்மன் சாண்டி நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. அவர் மகன் சாண்டி உம்மன் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டார். இந்த நிலையில், உம்மன் சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரின் உடன்பிறந்த சகோதரர் அலெக்ஸ் வி.சாண்டி பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். ``உம்மன் சாண்டியின் உடல்நிலை மோசமாகி வருகிறது" என, அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து அலெக்ஸ் வி.சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நோய் இல்லை, எதற்கு தொடர் சிகிச்சைக்குப் போக வேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கிறார்கள். அத்துடன் மஞ்சள் கலந்த தண்ணீர் கொடுத்து, அண்ணனை சிரமப்படுத்துகிறார்கள். கேன்சர் ஆரம்பக்கட்டதில் இருப்பதாகவும், அதைச் சரிசெய்யலாம் எனவும் மருத்துவமனையில் முதலில் சொன்னார்கள். மகள் அச்சு சிகிச்சை அளிக்கலாம் எனச் சொன்னார். நான் முதல்வருக்கு அளித்த கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ஆட்களிடம் சொல்லி அனுப்பினர். அண்ணனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்றார்.

உம்மன் சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் வி.சாண்டி
உம்மன் சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் வி.சாண்டி

இதையடுத்து உம்மன் சாண்டியின் ஃபேஸ்புக் பக்கத்தில், ``என்னுடைய உடல்நிலை குறித்து உண்மைக்குப் புறம்பான சில செய்திகள் வெளியானதில் எனக்கு அதிருப்தி உண்டு. தேவையான சிகிச்சைகள் அளித்து குடும்பத்தினரும், கட்சியினரும் பார்த்துக்கொள்கிறார்கள். என்னுடைய நோய் குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் எனக்கும், குடும்பத்தினருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. ஒருவருக்கு எதிராகச் செய்யக்கூடாத, வேதனைப்படுத்தக்கூடிய பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடக்கும் மோசமான பிரசாரங்கள் எனக்கும் குடும்பத்தினருக்கும் மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மருந்து சாப்பிட்டதால் உடலில் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை. உலகில் தலைசிறந்த மருத்துவ நிபுணர் வழிகாட்டுதலின்படி எனது சிகிச்சை நடைபெற்று வருகிறது. எனவே அறிந்தோ அறியாமலோ தலையிட்டவர்கள் இனியாவது இது போன்ற பிரசாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ``இங்கு என்னுடைய அம்மா, காங்கிரஸ் நிர்வாகிகள் இருக்கின்றனர். எனக்கு ஏற்பட்டது போன்று ஒரு துன்பம் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. புலிப்பால் தேடிச்சென்ற ஐயப்பனின் நிலையில் நான் இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார். அதே வீடியோவில், உம்மன் சாண்டியும் தனக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்படுவதாகப் பேசினார். இந்த வீடியோக்களை சாண்டி உம்மன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில் பேசும் உம்மன் சாண்டி
வீடியோவில் பேசும் உம்மன் சாண்டி

இதைத் தொடர்ந்து, யு.டி.எஃப் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான எம்.எம்.ஹசன், மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஏ.கே.அந்தோணி ஆகியோர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இது குறித்து எம்.எம்.ஹசன் கூறுகையில், "உம்மன் சாண்டி குடும்பத்துக்கு கட்சி முழுமையாக துணை நிற்கும். ஒரு தனிப்பட்ட நபரின் உடல்நலம் குறித்து மீடியாக்கள் விவாதம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சை பற்றிய விவாதம் குறித்து உம்மன் சாண்டியும், அவர் மகனும் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். நானும் நேரில் சந்தித்தபோது உம்மன் சாண்டி என்னிடம் தெரிவித்தார். உம்மன் சாண்டியின் சகோதரரின் புகார் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. உம்மன் சாண்டியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள்தான் கருத்து தெரிவிக்க வேண்டும்" என்றார்.

உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன்
உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன்

இதற்கிடையே, நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனையில் உம்மன் சாண்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், காய்ச்சல் சரியானதும் பெங்களூரில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.