Published:Updated:

கேரளா:`கோவிட் ராணி, நிபா ராஜகுமாரி!’ -அமைச்சரை வம்பிழுத்த காங்கிரஸ் தலைவர்

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை கோவிட் ராணி, நிபா ராஜகுமாரி எனக் கிண்டலாகப் பேசினார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் மலையாளிகளை கேரளத்திற்கு வரவேண்டுமானால் அவர்கள் கொரோனா சோதனை செய்து சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ``நிபா காலத்தில் நானும் களத்தில் இருந்தேன். அப்போது நர்ஸ் லினி மரணமடைந்தபோது முதலில் நான் அவரது கணவருக்கு ஆறுதல் சொன்னேன். அப்போது அரசு விருந்தினர் மாளிகையிலும் கலெக்டர் அலுவலகத்திலும் சுகாதாரத்துறை அமைச்சர் இருந்தார். கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் போன்று அங்குவந்து சென்றார். இப்போது கோவிட் ராணி எனப் பெயர் எடுக்க முயற்சி செய்வதுபோன்று, அப்போது நிபா ராஜகுமாரி என்ற பதவியைப் பிடிக்கும் போட்டியில் இருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.

நிபா வைரசுக்கு எதிராகப் போராடியதற்கான அங்கீகாரம் முதல்வருக்கோ, சுகாதாரத்துறை அமைச்சருக்கோ இல்லை. அந்தப் பெருமை மருத்துவர்களுக்கும் நர்சுகளுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்குமே சொந்தம். இப்போது கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில் உலகத்துக்கே கேரளா வழிகாட்டுகிறது எனக் கூறுகிறார்கள். இப்படி செய்தி வெளியிடுவதற்காக 42 பி.ஆர். ஏஜென்சிகளை நியமித்துள்ளர்கள். அவர்கள் மூலமாக உலகம் முழுவதும் செய்தி வெளியிடுகிறாரகள். ஆனால் வெளிநாட்டில் கஷ்டப்படும் மலையாளிகளை கேரளத்துக்கு வர அனுமதிக்காத நிலை உள்ளது. இது வெட்கக்கேடானது" எனப் பேசியிருந்தார்.

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

காங்கிரஸ் மாநிலத் தலைவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலின்போது பணிசெய்ததால் உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவர் சஜீஷ், ``அன்று வடகரை எம்.பி.யாக இருந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர்தான் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவாக இருந்தார். அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசுகிறார்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் பணி செய்யும் மருத்துவமனை முன்பு காங்கிரஸார் பேரணி நடத்தினர். பேரணியாக வந்த காங்கிரஸார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமும் கொரோனா அப்டேட் குறித்து பேச செய்தியாளர்களைச் சந்திக்கும் பினராயி விஜயன் அரசியல் பேசுவதில்லை. ஆனால் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கு பதிலடிகொடுக்கும் விதமாகச் செய்தியாளர் சந்திப்பில் அரசியல் கருத்துக்களைப் பேசினார் பினராயி விஜயன்.

பினராயி விஜயன் கூறுகையில்,``நிபா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மரணமடைந்த நர்ஸ் லினியின் தியாகத்தை நாம் கண்ணீருடன் பார்த்தோம். உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட போராளி நர்ஸ் லினி. தன்னுடன் நின்றது யார் என லினியின் கணவர் தெரிவித்தார். அதனால் அவர் பணிபுரியும் மருத்துவமனை நோக்கி காங்கிரஸ் பேரணி நடத்தியுள்ளது. நிபா காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உடன் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை நிபா ராஜகுமாரி, கோவிட் ராணி எனக் கூறினால், அது லினியின் குடும்பத்தினருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, அவர் பதில் கூறினார். லினி கேரளத்தின் சொத்து, அவர் குடும்பத்துக்கு எல்லாப் பாதுகாப்பையும் அரசு வழங்கும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கேரளத்தை அவமானப்படுத்தும் செயல். கொரோனா காலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கேரள அரசு கொரோனா போராட்டத்தில் வெற்றிபெற்றது என்ற அங்கீகாரத்தைக் கொடுக்க அனுமதிக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். வெளிநாட்டில் உள்ள மலையாளிகள் கொரோனா தொற்று உள்ளவர்களும், தொற்று இல்லாதவர்களும் ஒரே விமானத்தில் வருவது நல்லதல்ல என நாங்கள் கூறியதை தவறாகப் பிரசாரம் செய்துவருகிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக திகழுகிறது இந்த சிறு மாநிலம். ஆனால் இது குறித்து விளம்பரப்படுத்த 42 நாடுகளில் ஏஜென்சிகளை நியமித்ததாக பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது உலக மீடியாக்களை அவமதிக்கும் செயல்.

எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியபோது சமூக இடைவெளி இல்லாமல் போஸ் கொடுக்கிறார்கள். கொரோனா காலத்தில் அரசியல் பிரச்னைகள் பேசக்கூடாது என நான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அரசியல் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது. சுகாதாரத்துறை அமைச்சரை விமர்சனம் செய்வது கொரோனா காலத்தில் வைரஸ் தொற்றைத் தடுக்கும் சிஸ்டத்தைத் தகர்க்கும் செயல்.

சலிக்காத போராட்டமே சைலஜா டீச்சர்!

மக்களின் உயிரைவைத்து அரசியல் நடத்தக்கூடாது. பேரிடர்க் காலங்களை வெற்றிகொள்வதில் கிரெடிட் யாருக்கு என்பதுதான் எதிர்க்கட்சியான காங்கிரசின் பிரச்னையாக உள்ளது. நிபா, கொரோனா வைரஸ்களுக்கு எதிரான போராட்டங்களுக்கான கிரெடிட் கேரள மக்களுக்கானது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு